அரவக்குறிச்சி, மார்ச் 27: அரவக்குறிச்சியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையும் ஆட்டோ ஓட்டுநர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாந்த் தலைமை வகித்தார். அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி அரவக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி டிஎஸ்பி, காவல் ஆய்வாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்துரையாடலில், காவல்துறையினரும் ஆட்டோ ஓட்டுநர்களும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. நகர பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் அல்லது சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்த தகவல் கிடைத்தால், உடனடியாக சிறப்பு உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அரவக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டிவரும் மூத்த ஓட்டுநர்களை அழைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
