- இபிஎஸ்
- தேமுதிக
- Tamilisai
- தமிழ்நாடு பா.ஜ.க.
- தில்லி
- சென்னை
- எடப்பாடி பழனிசாமி
- அஇஅதிமுக
- மயிலாப்பூர்
- பாஜக
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுகவின் முதல் தேர்தல் பரப்புரையை எடப்பாடி பழனிசாமி மயிலாப்பூரில் தொடங்கினார். மேலும், வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பே பாஜவை சேர்ந்த தமிழிசைக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஜோதிடர்களிடம் நன்கு ஆலோசித்து இந்த பரப்புரையை எடப்பாடி தொடங்கியதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. மாலை 3.30 மணிக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்தடைந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அன்பழகன் ஆகியோர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இதன் பின்னர் பரப்புரை இடமான மந்தைவெளி மார்க்கெட் பகுதிக்கு 4.05 மணியளவில் எடப்பாடி பழனிசாமி வாகனம் வந்தது. மாலை 4.10 மணிக்கு அவர் பேச தொடங்கினார். அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு திமுக அதிக தொகுதிகளை கொடுத்துள்ளதாக தேமுதிக மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். சுமார் 1 மணி 35 நிமிடங்கள் வரை அவர் தொடர்ந்து பேசினார். இதனையடுத்து பரப்புரை முடிந்து கிளம்பும் தருவாயில் திடீரென பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் எடப்பாடியுடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பாஜவை பொறுத்தவரை எல்லா முடிவுகளும் டெல்லி தலைமையிடத்தை மையமாக கொண்டது. யார் வேட்பாளர், அவர் எங்கு போட்டியிடுகிறார் என்பன எல்லாம் அங்கிருந்துதான் அறிவிக்கப்படும். மயிலாப்பூரில் நீங்கள் போட்டியிடுவீர்களான என பலமுறை தமிழிசையிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய போது கட்சி தலைமையின் முடிவே எனது முடிவு அவர்கள் எங்கு போட்டியிட கூறுகிறார்களே அங்கே போட்டியிடுவேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்றைய அதிமுகவின் முதல் பரப்புரையிலேயே எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. அதேபோல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பாஜக தலைமைக்கு தமிழ்நாடு எப்போது ‘அவுட் ஆப் கண்ட்ரோல்’ என கூறுவார். ஆனால், டெல்லி பாஜக தலைமைக்கு தமிழக பாஜகவும் அவுட் ஆப் கண்ட்ரோலில் இருப்பது இந்த வாக்கு சேகரிப்பின் மூலம் தெரியவருவது குறிப்பிடத்தக்கது.
