- திமுக கூட்டணி இருக்கை
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- சென்னை
- DMK கூட்டணி
- திமுக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதலமைச்சர் எம் கே ஸ்டாலின்
சென்னை: சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானதால், திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களை பரப்பிட முயற்சி செய்கிறார்கள், என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: 10 ஆண்டுகால படுமோசமான அதிமுக ஆட்சியால் தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட சீரழிவுகளை சரிசெய்து, கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்திய அளவில் உயர்த்தி காட்டியிருக்கிறோம். இந்த பெரும் முயற்சிக்கும் சாதனைக்கும் துணை நின்ற கொள்கைவழி தோழமை இயக்கத்தினரின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. அதனை மதித்து, இந்த முறையும் திமுக சார்பில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் ஜனநாயகப்பூர்வமாக நடைபெற்றன.
நமது கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ள காரணத்தால், உரிய அளவில் தொகுதிகளை பங்கிட்டுக்கொள்ள வேண்டிய சூழலும், தேவையும் இருப்பதை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் தோழமை கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களின் தலைவர்களுடனும் ஆலோசித்தே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன.திமுக கூட்டணியின் வெற்றியே பெரிது என்பதை எடுத்துரைத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது மனம் திறந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையை மனதார வரவேற்கிறேன். அதுபோலவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட தோழமைக் கட்சி தலைவர்களும் மனப்பூர்வமாக தெரிவித்திருக்கும் கருத்துகள், 2019 முதல் தொடர்ந்திடும் நமது கூட்டணியின் வலிமைக்கு சான்றாகும்.
நம்முடைய கூட்டணிய ஏதாவது விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா, திமுக கூட்டணியின் வெற்றியை தடுத்திட வழி ஏற்படாதா என நினைத்த சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானதால், திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களை பரப்பிட முயற்சி செய்கிறார்கள். திசைதிருப்ப நினைக்கும் வதந்திகளை உடன்பிறப்புகள் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து, தோழமை கட்சியினருடன் இணைந்து களத்தில் பணியாற்றி, வெற்றியை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை திமுக சார்பில் அமைக்கப்பட்ட குழு நடத்தி வந்த நிலையில், திமுகவின் சார்பில் தேர்தல் களத்தில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளை ஒவ்வொரு நாளும் சந்தித்து, நேர்காணலையும் நடத்தி முடித்திருக்கிறேன்.
இந்த முறை 16 ஆயிரத்து 500 நிர்வாகிகள் கலந்துகொண்ட கொள்கை உறவு திருவிழா, மாரத்தான் ஓட்டத்தைப்போல ஒவ்வொரு நாளும் 10 மணிநேரத்திற்குக் குறையாமல் நேர்காணல் நடைபெற்றது. விருப்பமனு அளித்தவர்களின் முகம் கண்டபோது எனக்குள் ஏற்பட்ட உற்சாகத்தினால் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்து ஊக்கமுடன் பணியாற்ற முடிந்தது. நம் தலைவர் கலைஞரும், இனமான பேராசிரியரும் விருப்பமனு அளித்த ஒவ்வொரு உடன்பிறப்பையும் தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்திய தேர்தல்கள் உண்டு. அதன்பிறகு, மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளை சேர்ந்த அனைவரையும் ஒன்றாக அழைத்து, மொத்தமாக நேர்காணல் செய்ததும் உண்டு. இந்த முறை, ஒவ்வொரு தொகுதி வாரியாக விருப்பமனு அளித்தவர்களை அழைத்து நேர்காணல் நடைபெற்றது.
கட்சியினர் தங்கள் வாழ்த்துகளை எனக்கு தெரிவித்தனர். அவர்களின் உழைப்பையும் அனுபவத்தையும் மதித்து உங்களில் ஒருவனான நான் நேர்காணல் நடத்தினேன். திராவிட மாடல் அரசின் சாதனைகள் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் நல்விளைவுகள், அதனால் பெருகியிருக்கும் பொதுமக்களின் ஆதரவு, தோழமைக் கட்சிகளின் பலம், திமுக நிர்வாகிகளின் ஒருங்கிணைந்த பணி இவை குறித்து அவர்களிடம் கேட்டறிந்தேன். நேர்காணலில் பங்கேற்றவர்களிடம், “உங்கள் தொகுதியில் தலைமை யாருக்கு சீட் கொடுத்தாலும் நீங்கள் இதே மகிழ்ச்சியுடன் களத்தில் பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்தேன். தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளும் திமுகவின் தொகுதிகள்தான் என்பதால், 234 தொகுதிகளிலும், இந்த மு.க.ஸ்டாலின்தான் நிற்கிறேன் என்ற உணர்வுடன் வேலை செய்ய வேண்டும் என்று சொன்னபோது, உடன்பிறப்புகள் அனைவரும், வெற்றி ஒன்றுதான் எங்கள் இலக்கு என்ற உறுதியை அளித்தனர்.
உடன்பிறப்புகள் தந்த உறுதியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களிடமும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. நம்பிக்கையும் செல்வாக்கும் வெற்றியாக விளைவதற்கு நாம் அடுத்த 4 வாரங்களும் அயராமல் உழைத்திட வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதி பங்கீட்டு நிறைவில், தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடும் தோழமை கட்சிகளின் தொகுதிகள் போக, திமுக வேட்பாளர்கள் மற்றும் திமுக சின்னத்தில் போட்டியிடும் தோழமை கட்சி வேட்பாளர்களுமாக இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது.
உதயசூரியனும் நமது சின்னம்தான். கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நமது சின்னங்கள்தான். 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான். மதவாத அரசியலையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் துரோகத்தையும் எதிர்த்து நின்று, எல்லார்க்கும் எல்லாம் என்கிற ஆட்சி தொடர்ந்திடவும், இந்தியாவின் ஜனநாயகத்தை காத்திடவும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கான வெற்றி களத்தில் தோழமை கட்சிகளுடன் இணைந்து நின்று, விரைந்து பணியாற்றுவீர். கவனம் சிதறாது இலக்கை வெல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
