ஏரிக்கரையோரம் சாலையை அகலப்படுத்த காங்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி

சின்னசேலம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நான்குவழிச்சாலை விரிவாக்கப் பணிக்கு ஏரிக்கரையோரம் சாலை அகலப்படுத்தும் பணிக்கு காங்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சின்னசேலம் வழியாக சேலம், சென்னை போன்ற நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இந்த சாலையில் தினசரி ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.

மேலும் சின்னசேலம் நகர சாலையில் ஏராளமான பேருந்துகள் வந்து செல்வதாலும், சாலை குறுகலாக இருப்பதாலும் சாலையோர ஆக்கிரமிப்புகளால் பயணிகள், மக்கள் ஒதுங்க இடம் இல்லாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

மேலும் சின்னசேலம் நகர சாலை அம்சாகுளம் முதல் அண்ணா நகர் வரை தேசிய நெடுஞ்சாலையாக இருந்ததால், மாநில அரசால் இதை விரிவுபடுத்த முடியவில்லை. அதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையை, மாநில நெடுஞ்சாலையாக மாற்றி, சென்டர் மீடியனுடன் கூடிய நான்குவழிச்சாலை அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பூமிபூஜை நடந்ததுடன் தற்போது நகர பகுதியில் சாலையின் இருபுறமும் இருந்த தனிநபர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதுடன், அம்சாகுளம் முன்பகுதியில் உள்ள புளிய மரங்கள் தோண்டி அகற்றப்பட்டுள்ளன. மேலும் அம்சாகுளம் ஏரிக்கரை பகுதியில் இருந்து பெட்ரோல் பங்க் வரை சாலையின் ஒரு பக்கம் வீடுகள் உள்ளன.

அதன் மறுபக்கம் ஏரி உள்ளது. இந்த பகுதியில் சாலையும் குறுகலாக உள்ளதால் இந்த பகுதியில் நான்குவழிச்சாலை அகலப்படுத்த போதுமான இடவசதி இல்லை. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) அனுமதி பெற்று சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் அந்த இடத்தில் ஏரிக்கரையோர பகுதியில் அதிக அளவில் பள்ளம் தோண்டி, சாலை அமைக்கும்போது மண் சரியாமல் இருக்க தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்கு காங்கிரீட் அமைத்து வருகின்றனர்.

காங்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்பட்ட உடன் சாலையில் இருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் கைப்பிடி தடுப்பு சுவர் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: