வருசநாடு : வருசநாடு பகுதியில் சமீபத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் மரங்களில் பூத்துக் குலுங்கிய முந்திரி பூக்கள் அனைத்தும் உதிர்ந்தன.தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு, ஒத்தைகுடிசை, குமணன்தொழு, முத்தாலம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொட்டை முந்திரி விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்த காரணத்தினால் மரங்களில் பூக்கள் மற்றும் பிஞ்சுகளின் உற்பத்தி வழக்கத்தை விட அதிகமாகக் காணப்பட்டது. அடுத்த மாதம் முந்திரி சீசன் தொடங்க உள்ள நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தை இந்த ஆண்டு ஈடுகட்டி விடலாம் என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வருசநாடு, தங்கம்மாள்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகப் பலத்த ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. இந்தத் திடீர் இயற்கைச் சீற்றத்தினால் மரங்களில் செழித்து வளர்ந்திருந்த முந்திரி பூக்கள், பிஞ்சுகள் மற்றும் இலைகள் அனைத்தும் அப்படியே உதிர்ந்து தரையில் விழுந்துள்ளன.
குறிப்பாக முதிர்ச்சியடையாத பிஞ்சுகள் முழுமையாக உதிர்ந்து விழுந்ததால் இப்பகுதி விவசாயிகளுக்கு ஈடுகட்ட முடியாத கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு விளைச்சல் பாதிப்பு மற்றும் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள், இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக இருந்தும் மழையினால் பயிர்கள் நாசமானதைக் கண்டு பெரும் கவலையில் உள்ளனர்.
