இலங்கைக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்க ஈரான் தயார்: ஹார்முஸ் நட்பு நாடுகளுக்கு திறந்தே உள்ளது

கொழும்பு: “இலங்கைக்கு எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்க ஈரான் தயாராக உள்ளது” என இலங்கைக்கான ஈரான் தூதர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல் காரணமாக உலகின் 20 சதவீத கச்ச எண்ணெய் செல்லும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடி உள்ளது. இதனால் உலக நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதுடன், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2 வாரங்களுக்குள் இரண்டாம் முறையாக பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நட்பு நாடுகளுக்கு ஹார்முஸ் நீரிணை திறந்தே உள்ளது என இலங்கைக்கான ஈரான் தூதர் அலிரேசா டெல்கோஷ் கூறி உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அலிரேசா டெல்கோஷ், “இலங்கை எங்கள் நட்பு நாடு. நட்பு நாடுகளுக்கு ஹார்முஸ் நீரிணை எப்போதும் மூடப்படவில்லை. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எண்ணெய் அல்லது பிற அத்தியாவசிய பொருள்கள் ஏதேனும் தேவைப்பட்டால் அதனை வழங்க ஈரான் எப்போதும் தயாராக உள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய அலிரேசா டெல்கோஷ், “ஈரானின் ஐஆர்ஐஎஸ் டேனா போர்க்கப்பல் போர் புரிய இந்தியாவுக்கு வரவில்லை. அது பயிற்சிக்காக வந்தது. அதன்மீது தாக்குதல் நடத்தியது மனிதாபிமான சட்டமீறல். அதேசமயம், ஈரானின் மற்றொரு போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷெர்ரில் இருந்த 200க்கும் மேற்பட்ட மாலுமிகளை இலங்கை தங்க வைத்து கொண்டதற்கு நன்றி” என்று தெரிவித்தார்.

Related Stories: