×

திருமண மண்டபங்களில் குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த 16 கட்டுப்பாடுகள் அமல் தேர்தல் நடத்தை விதி எதிரொலி

மதுரை, மார்ச் 20: தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, திருமண மண்டபங்களில் நடத்தும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி பெற வேண்டும். இதில் 16 கட்டுப்பாடுகளுடன் தேர்தல் அதிகாரி அனுமதி வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்.23ல் நடப்பதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியுள்ளது. எனவே குடும்ப நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்துவதற்கு, அந்தந்த தொகுதியின் தேர்தல் அதிகாரி மூலம், போலீசார் ஆய்வுக்குப்பிறகு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி பெறுவதற்கான 16 நிபந்தனைகள் வருமாறு:
* காலை 6 மணி முதல் மாலை 4 மணிக்குள் விழாவை முடிக்க வேண்டும். எதற்காகவும் கால நீட்டிப்பு கூடாது.
* போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு கூடாது.
* பொது ஊழியரின் வழிகாட்டுதல் அடிப்படையில், சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை காக்க வேண்டும்.
* தேர்தல் நடத்தை விதிகளை மீறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
* விழாவில் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றால், தேர்தலுடன் தொடர்புடைய செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது.
* விழாவிற்கு வரும் வாகனங்களை முறையாக நிறுத்தி வைப்பதுடன், அவற்றில் கொடி, ஒலி பெருக்கிகள் பொருத்தக் கூடாது.
* விழாவில் ஒலி பெருக்கி பயன்படுத்த, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் முன்அனுமதி பெற வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளுக்கு அனுமதி இல்லை.
* விழாவில், அரசியல் பிரமுகர்கள் சார்பில் பொன்னாடை, பரிசுப் பொருள்கள் அல்லது சமையல் பொருள்கள் போன்றவற்றை அன்பளிப்பாக வழங்கக்கூடாது.
* விழாவில், குறிப்பிட்ட ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது வாக்குப்பதிவு செய்யாதீர் போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கக்கூடாது.
* அரசியல் சார்ந்த அன்னதானம் கூடாது.
* பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினரின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
* பிற சமுதாயத்தினர், மதத்தினர் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது பாடல்கள் ஒலி பரப்புவதோ கூடாது.
* விழா பங்கேபாளர்கள் கட்சி மற்றும் சமுதாயத் தலைவர்களின் உருவப்படம் பொறித்த ‘டி சர்ட்’ உள்ளிட்டவை அணிவதை தவிர்க்க வேண்டும்.
* நாடகம், நடனம், நாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்திட மாவட்ட தேர்தல் அலுவலரிடம் முன்அனுமதி பெற வேண்டும். அனுமதியுடன் நடத்தப்பட்டாலும், அவற்றில் ஆபாச நடனம், தேர்தலில் வாக்களிப்பது குறித்து பேசுவது, அரசியல் கட்சிகளில் பாடல்கள் ஒலி பரப்புவது கூடாது.
* விழா நடைபெறும் இடத்தில், தேர்தல் பிரசாரம் செய்திட அனுமதி இல்லை. அப்பகுதியில் வரும் பிரசார வாகனங்களுடன் விழா ஏற்பாட்டாளர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுளளது.

Tags : Madurai ,Tamil Nadu Assembly ,
× RELATED வெளிவட்ட சுற்றுச்சாலையை ஒட்டி புதிய ரயில் வழித்தடம் அமைகிறது