தண்டராம்பட்டு பிடிஓ அலுவலகத்தில் 2வது நாளாக ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் திட்ட இயக்குனர் பேச்சுவார்த்தை

தண்டராம்பட்டு, பிப்.12: வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கக்கோரி தண்டராம்பட்டு பிடிஓ அலுவலகத்தில் 2வது நாளாக ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிருப்பு ேபாராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில், உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து 14 மாதங்கள் ஆகியும், வளர்ச்சி திட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் 28 பேரும், போதிய நிதியை ஒதுக்கீடு செய்து, பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனை கண்டித்து நேற்று முன்தினம் பிடிஓ அலுவலகத்தில் திரண்ட ஒன்றிய கவுன்சிலர்கள் நுழைவு வாயில் கேட்டை இழுத்து பூட்டினர். தொடர்ந்து, பிடிஓ அலுவலகத்தில் இருந்த அலுவலர்களை வெளியே செல்லுமாறு கூறிவிட்டு, அலுவலக அறைகளுக்கு பூட்டு போட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய கவுன்சிலர்கள், ‘நிதி மற்றும் பணிகளை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். அதுவரை இங்கிருந்து செல்லமாட்டோம். இங்கேயே சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு படுத்துறங்க உள்ளோம்’ என தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, உதவி திட்ட அலுவலரும், மண்டல அலுவலருமான லட்சுமி நரசிம்மன், பிடிஓ (கிராம ஊராட்சி) அமிர்தராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஒன்றிய கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், நாளை (நேற்று) காலை மாவட்ட அளவிலான அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு சென்றனர். இதைத்தொடர்ந்து, நேற்று காலை 10 மணியளவில் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும் பிடிஓ அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால், ஏற்கனவே அறிவித்தபடி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த எந்த அதிகாரிகளும் முன்வரவில்லை. இதையடுத்து, மதியம் 12 மணியளவில் பிடிஓ அலுவலக வளாகத்தில் பந்தல் அமைத்து மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதாவுக்கு ஒன்றிய கவுன்சிலர்கள் போன் செய்து கேட்டனர். அப்போது திட்ட அலுவலர், அதிமுகவை சேர்ந்த 3 கவுன்சிலர்கள், திமுகவை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் திருவண்ணாமலை மாவட்ட அலுவலகத்திற்கு உடனே வாருங்கள், பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதன்பேரில் 6 ஒன்றிய கவுன்சிலர்கள் மட்டும் மாவட்ட திட்ட இயக்குனரிடம் பேச்சுவார்த்தை நடத்த திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர். ஆனாலும், பிடிஓ அலுவலகத்தில் இருந்த மற்ற கவுன்சிலர்கள், பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ள கவுன்சிலர்கள் தெரிவிக்கும் தகவலை பொறுத்து போராட்டத்தை தொடர்வதா அல்லது கைவிடுவதா என்பது முடிவு செய்வோம் என கூறி அங்கேயே காத்திருந்தனர்.

Related Stories: