ரூ.10 முதல் ரூ.15 கோடி செலவு செய்தால் மட்டுமே தவெகவில் எம்எல்ஏ சீட்: மாவட்ட செயலாளர்களுக்கு வாய்ப்பு மறுப்பால் சலசலப்பு; விஜய்யின் கார் டிரைவருக்கு தேர்தல் டிக்கெட்; புஸ்ஸி ஆனந்த் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

தவெக சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களின் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் மற்றும் மக்கள் செல்வாக்கு, களப்பணிகள், பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் சில நிர்வாகிகள் பட்டியலிடப்பட்டனர். அவர்களுக்கான நேர்காணல் கடந்த 10ம் தேதி அக்கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வேட்பாளர்கள் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்கள் மற்றும் நிர்வாகிகள், பனையூர் அலுவலகத்துக்கு வந்து காத்திருந்தனர். ஆனால் விஜய், வழக்கம்போல தாமதமாக 11.30 மணிக்குதான் பனையூர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் 12 மணி முதல் 2:30 மணி வரை வேட்பாளர்கள் நேர்காணல் நடந்தது. 60 வேட்பாளர்களுடன் நேர்காணல் நடைபெற்றதாக சொல்லப்பட்ட நிலையில் விஜய் ஒரு சில வேட்பாளர்களுடன் மட்டுமே நேர்காணல் நடத்தியதாகவும், பெரும்பாலான வேட்பாளர்களை விஜயுடன் சந்திக்க விடவில்லை எனவும் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் முறையிட்டபோது ரூ.10 முதல் 15 கோடி செலவு செய்பவர்களுக்கு மட்டுமே சீட்டு வழங்க இருப்பதாகவும், சீட்டு கிடைக்காதவர்களுக்கு என்ன கேட்டாலும் செய்து கொடுக்கப்படும் என டீலிங் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் விஜயின் மக்கள் இயக்கம் முதல் தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்து தற்போது வரை உடல் உழைப்பு, பணம் உள்ளிட்டவைகளை செலவு செய்த மாவட்ட செயலாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் கட்சிக்கும், தொகுதிகளுக்கும் சம்பந்தமே இல்லாத, தொகுதி மக்களுக்கு யார் என்றே தெரியாதே சில தொழிலதிபர்களுக்கு சீட்டு கொடுக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முயற்சித்து வருவதாகவும் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக, சென்னையில் 16 தொகுதிகளில் விஜய்யுடன் ஆரம்பகாலம் முதல் தற்போது வரை பயணித்து வரும் கட்சியினருக்கு சீட்டு இல்லை என கூறப்படுகிறது. அம்பத்தூர், சோழிங்கநல்லூர் தொகுதிகளில் மட்டுமே மாவட்ட செயலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்சி தொடங்கிய பிறகு கட்சிக்கு வந்த தலைமை நிர்வாகிகளுக்கு எழும்பூர், வில்லிவாக்கம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாலும், விஜயின் கார் ஓட்டுனரின் மகனுக்கு விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதால் மாவட்ட செயலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கட்சி துவங்கியபோது முக்கிய மாவட்ட செயலாளர்களுக்கு குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும், என பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உறுதியளித்ததால் இதனை நம்பிய மாவட்ட செயலாளர்கள் பலர் பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்து தங்களுக்கு சீட்டு கிடைக்கும் என நம்பி இருந்த நிலையில் தற்போது சீட்டு இல்லை என தெரிந்தவுடன் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வருகின்றனர். விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் வேட்பாளர் என கூறிவிட்டு தற்போது கோடி கணக்கில் பணம் செலவு செய்தால் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிப்பது ஏமாற்றும் செயல், இதனை முதலிலேயே தெரிவித்து இருந்தால் இத்தனை நாட்கள் கட்சிக்காக உழைத்தது கடன் பெற்று செலவு செய்து இருக்க மாட்டோம் என கட்சி நிர்வாகிகள் புலம்ப தொடங்கியுள்ளனர்.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் தேர்தலுக்கு முன்பாகவே தவெகவில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கரூர் உயிரிழப்பு சம்பவம், விவாகரத்து வழக்கு, நடிகை திரிஷாவுடன் ஒன்றாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது என தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை பெற்று ஆதரவு குறைந்து வரும் தவெகவில் தற்போது பல ஆண்டுகளாக இருந்து வரும் நிர்வாகிகள் மத்தியிலும் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. அதிருப்தியில் இருக்கும் மாவட்ட செயலாளர்களை பெருமளவில் பணம் கொடுத்து சமாதானம் செய்யும் முயற்சியில் புஸ்ஸி ஆனந்த் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் அவர்களது ஆதரவாளர்களுடன் மாற்றுக் கட்சியில் இணைவதற்கு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

* பணம், பதவிக்கு மட்டும் தான் தவெகவில் மரியாதை: – தொண்டரின் குமுறல் ஆடியோ வைரல்
பணம், பதவிக்குதான் தவெகவின் மரியாதை உள்ளதாக தவெக தொண்டர் ஒருவர் சமூக வலைதளங்களில் ஆடியோ வௌியிட்டு தனது வேதனையை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தவெக மற்ற கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும் என நம்பி கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தோம். ஆனால் கட்சியில் வாரிசு அரசியல் நடைபெறுகிறது. அப்படிப்பட்ட கட்சி நமக்கு தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது. மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் தங்கபாண்டி, மாவட்டச் செயலாளரைத் தவிர இணைச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எந்த வித வாழ்த்தோ, மரியாதையோ செலுத்த வேண்டாம் என கூறியிருந்தார்.

அதே நேரத்தில், மாவட்ட செயலாளர் தங்கபாண்டியின் மகன் சஞ்சய் (மார்ச் 12) பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது குடும்ப அரசியலா என யாருக்கும் தெரியவில்லையா? தவெக கட்சியில் நம்ம எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற விழிப்புணர்வு இல்லையா..? என்னவாக போகிறோம் என்றே தெரியவில்லை. பணமும், பதவியும், குடும்பமும் இருந்தால் மட்டும்தான் மதிப்பு. மரியாதை. மதுரை மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியும் என்றால் அப்படிப்பட்ட கட்சியே நமக்கு தேவையில்லையே? நிறைய வலிகளுடன் இந்த பதிவை பதிவிடுகிறேன். இதை கேட்ட பிறகாவது தொண்டர்களுக்கு புத்தி வரும் என எதிர்பார்க்கிறேன். சஞ்சய்க்கு வாழ்த்து தெரிவிக்க செல்லும் நமது கழகத் தோழர்கள் மாவட்ட தலைமையிடம் தைரியத்துடன் நேரடியாக கேள்வி எழுப்பி விளக்கம் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: