குமரியில் 117 மையங்களில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முறைகேடுகளை தடுக்க 9 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு காப்பி அடித்தால் 3 ஆண்டுகள் தடை

நாகர்கோவில், மார்ச் 11: குமரி மாவட்டத்தில் இன்று 117 மையங்களில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 10 ம்வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று (11ம்தேதி) தொடங்குகின்றன. குமரி மாவட்டத்தில் 21,466 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதில் 10,647 மாணவர்களும், 10,819 மாணவிகளும் அடங்குவர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 10,818 பேரும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 10,648 பேரும் தேர்வு எழுதுகிறார்கள். மாவட்டம் முழுவதும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மார்த்தாண்டம் பகுதியில் 67 மையங்களும், நாகர்கோவில் பகுதியில் 50 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தனித்தேர்வர்களுக்காக 5 பிரத்யேக மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இம்முறை கல்குளம் மற்றும் அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளிகள் புதிய தேர்வு மையங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்வு எழுத சிறப்புச் சலுகை கோரியுள்ள 342 மாணவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்களைச் சேகரிக்கவும், மதிப்பீடு செய்யவும் நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி, தக்கலை அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கருங்கல் பெத்லகேம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை முதன்மை மையங்களாகச் செயல்படும் என்று மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்று தொடங்கும் தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வுகள் நடக்கும். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமையில் 9 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். விடைத்தாளில் நீலம், கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். கலர் பென்சில், பேனா பயன்படுத்தக் கூடாது. பெயர், தேர்வு எண், சிறப்பு குறியீடு ஆகியவற்றை குறிப்பிடக் கூடாது. மாணவரின் புகைப்படம், பதிவு எண், பாடம் போன்ற விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட வேண்டும். தேர்வு அறைக்குள் மாணவர்கள், அறை கண்காணிப்பாளர்கள் செல்போன் போன்ற மின்சாதனங்களைக் கொண்டுவரக் கூடாது. ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடப்பது, விடைத்தாளை மாற்றுவது, காப்பி அடிப்பது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். இதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: