பஞ்சமாதேவி ெதாடக்க வேளாண் சங்கத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி பட்டியலில் பெயர் உள்ளதா? விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு

கரூர், பிப்.11: கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன் விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்பது குறித்து தெரிந்துகொள்ள விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில், இந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் வரவு, செலவு வைத்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில், தமிழக அரசால் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பஞ்சமாதேவி, காளிபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று கூட்டுறவு அலுவலகம் வந்து அதிகாரிகளை சந்தித்து, தள்ளுபடி பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். சரியான பதில் கிடைக்காத நிலையில், விவசாயிகள் ஒன்று திரண்டு அலுவலகம் முன் காத்திருந்தனர்.

பின்னர் இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஜனவரி 5ம்தேதி அளவில் தொடக்க வங்கியில் நகைக்கடன் வைக்கப்பட்டும், இதுநாள் வரை அதற்கான பணம் தங்களுக்கு வரவில்லை. இந்நிலையில், தள்ளுபடி அறிவிக்கப்பட்டதால் அதில் தங்கள் பெயர் இடம் பெறுவதில் பல்வேறு சிக்கல் உள்ளது என கூறப்படுவதாக தெரிவித்தனர். இருப்பினும், அதிகாரிகளிடம் தங்கள் நிலை குறித்து பேசி வருவதாகவும் தெரிவித்தனர்.

Related Stories: