×

எம்எல்எஸ் கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா ஜாம்பவான் சாதனை: மெஸ்ஸி 899வது கோல்

 

பால்டிமோர்: அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் வீரர் லியோனல் மெஸ்ஸி, 899வது கோலடித்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் மேஜர் லீக் கால்பந்து (எம்எல்எஸ்) போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், முன்னணி அணிகள் பல ஆடி வருகின்றன. அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் வீரர் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணி, டி.சி.யுனைடெட் அணியுடன், பால்டிமோரில் நடந்த போட்டியில் மோதியது.

போட்டியின் துவக்கம் முதல் மயாமி அணி வீரர்கள் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்தி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் 17வது நிமிடத்தில் அந்த அணியின் ரோட்ரிகோ டிபால் முதல் கோல் போட்டு அணியை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அந்த அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, பந்தை சிறப்பான முறையில் கடத்திச் சென்று, 27வது நிமிடத்தில் அட்டகாசமாக கோல் போட்டு 2-0 என்ற கணக்கில் அணியை பலப்படுத்தினார்.

அதன் பின் 2ம் பாதியில் டிசி யுனைடெட் அணியின் டாய் பாரிபோ, 75வது நிமிடத்தில் முதல் கோல் போட்டு போட்டியை விறுவிறுப்பாக்கினார். இருப்பினும் அதன் பின் கோல் விழாததால் 2-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மயாமி அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்த கோலுடன் மெஸ்ஸி அடித்த கோல்களின் எண்ணிக்கை 899 ஆக உயர்ந்தது. இன்னும் ஒரு கோல் அடித்தால் அவரது கோல் எண்ணிக்கை 900 ஆக உயரும்.

எம்எல்எஸ் தொடரில் நடந்த மற்றொரு போட்டியில் சான் ஜோஸ் அணியும், பிலடெல்பியா அணியும் மோதின. போட்டியின் துவக்கம் முதல் இரு அணி வீரர்களும் கோல் போட தீவிர முனைப்பு காட்டியபோதும் முதல் பாதி வரை கோல் விழவில்லை. 2வது பாதி ஆட்டத்தின்போது 59வது நிமிடத்தில் சான் ஜோன்ஸ் அணி வீரர் அவுஸெனி பவுடா முதல் கோல் போட்டு அசத்தினார். அதன் பின் கடைசி வரை யாரும் கோல் போடவில்லை. அதனால், 1-0 என்ற கோல் கணக்கில் சான் ஜோஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இன்னொரு போட்டியில் நாஷ்விலி – மினசோடா அணிகள் மோதின. போட்டியின் 25 மற்றும் 47வது நிமிடங்களில் நாஷ்விலி அணியின் சாம் சர்ரிட்ஜ் அட்டகாசமாக 2 கோல்கள் போட்டார். இடையில் 33வது நிமிடத்தில் அந்த அணியின் கிறிஸ்டியன் எஸ்பினோஸா மேலும் ஒரு கோல் போட்டார். மாறாக, மினசோடா அணியின் நெக்டாரியஸ் டிரியான்டிஸ் 35வது நிமிடத்தில் தனது அணிக்காக ஒரு கோல் மட்டுமே போட்டார். அதனால், 3-1 என்ற கோல் கணக்கில் நாஷ்விலி அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

Tags : MLS Cup football ,Argentina ,Messi ,LIONEL MESSI ,Major League Soccer ,MLS ,United States ,Audi ,
× RELATED ஐபிஎல் 2026 போட்டிகள் வரும் 28ம் தேதி துவங்கும்: பிசிசிஐ அறிவிப்பு