×

சாம்சனின் பேட்டில் தகர்ந்த சாதனைகள்

* நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் முதல் 3 பேட்டர்கள் அரை சதம் கடந்து புதிய சாதனை படைத்தனர்.
* உலகக் கோப்பை டி20 வரலாற்றில் ஒரு இன்னிங்சில் ஒரு அணியின் டாப் 3 வீரர்கள் அரை சதம் கடப்பது இதுவே முதல் முறை.
* இந்திய அணி துவக்க வீரர் சஞ்சு சாம்சன், நடப்பு தொடரில் அதிரடி ஆட்டம் ஆடி, 24 சிக்சர்களை விளாசியுள்ளார். டி20 வரலாற்றில் இதுவும் புதிய சாதனையே.
* கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின்போது, நியூசிலாந்தின் ஃபின் ஆலன் 20 சிக்சர்கள் விளாசியதே இதுவரை சாதனையாக திகழ்ந்தது. அந்த சாதனை தற்போது சாம்சனால் தகர்த்தெறியப்பட்டுள்ளது.
* உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டி வரலாற்றில் உச்சபட்ச ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் நேற்று படைத்தார். இதற்கு முன், கடந்த 2021ல், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், 2016ல் வெஸ்ட் இண்டீசின் மார்லன் சாமுவேல்ஸ் 85 ரன்களை விளாசியதே இதுவரை சாதனையாக இருந்தது. சாம்சனின் நேற்றைய 89 ரன் குவிப்பு புதிய சாதனையாக அரங்கேறி உள்ளது.
* உலகக் கோப்பை டி20 வரலாற்றில் அரையிறுதியிலும், இறுதிப் போட்டியிலும் அரை சதங்கள் விளாசிய சாதனை வீரர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் தற்போது இணைந்துள்ளார். கடந்த 2009ல் பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி, 2014ல் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி இந்த சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
* உலகக் கோப்பை டி20 வரலாற்றில் தொடர்ச்சியாக 3 அரை சதங்கள் விளாசிய சாதனைப் பட்டியலிலும் சாம்சனின் பெயர் தற்போது இடம்பெற்றுள்ளது. இந்த சாதனையை, கடந்த 2010ல் இலங்கையின் மஹெல ஜெயவர்தனே, 2016, 2021ம் ஆண்டுகளில் விராட் கோஹ்லி, 2021ல், பாகிஸ்தானின் பாபர் அஸம், இந்தியாவின் கே.எல்.ராகுல், நடப்பு தொடரில் பாகிஸ்தானின் ஷாகிப்ஸதா ஃபர்கான், இலங்கையின் குஸால் மெண்டிஸ் அரங்கேற்றி உள்ளனர்.
* உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை சாம்சன் நிகழ்த்தி உள்ளார். நடப்பு தொடரில் அவர் 321 ரன்கள் விளாசியுள்ளார். இதற்கு முன், இந்தியாவின் விராட் கோஹ்லி, கடந்த 2014ல் 319 ரன்கள் குவித்ததே இதுவரை சாதனையாக நீடித்து வந்தது.
* நடப்பு தொடரில் சஞ்சு சாம்சன் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே பேட்டிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* அஞ்சாத சஞ்சு: கைநழுவிய சதம் வாய்ப்பு
இந்திய அணியின் துவக்க வீரர் சஞ்சு சாம்சன், முக்கியமான போட்டிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப உயர்ந்து தனது வல்லமையை நிரூபித்து தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறார். லீக் சுற்றுகளின் கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, வென்றே தீர வேண்டும் என்ற சூழலில் 50 பந்துகளில் 97 ரன்கள் விளாசி தனி ஒருவராக அந்த போட்டியில் வெற்றி தேடித் தந்தவர் சஞ்சு சாம்சன்.

அதைத் தொடர்ந்து நடந்த அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்களை பார்த்து சற்றும் அஞ்சாமல் சஞ்சு சாம்சன் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து 42 பந்துகளில் 89 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக திகழ்ந்தார். இந்த சூழ்நிலையில் 3வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் நேற்று நியூசிலாந்து அணியுடன் இந்தியா களமிறங்கியது.

இப்போட்டியிலும் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் நியூசி வீரர்கள் முன் ருத்ர தாண்டவமாடி ரன் வேட்டையாடினார். 33 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் அவர் அரை சதத்தை எட்டினார். அதன் பின்பும் அதிரடியை தொடர்ந்த சாம்சன், நீஷம் வீசிய 16வது ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டை இழந்தார். 46 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 89 ரன் எடுத்தார். தொடர்ந்து 3வது முறையாக அரை சதம் விளாசிய சாம்சன், இம்முறையும் சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறி விட்டது, ரசிகர்களை நெகிழச் செய்தது.

Tags : Samson ,New Zealand ,World Cup T20 ,
× RELATED அபிஷேக் அதிரடியால் ஷேக் ஆன நியூசிலாந்து