நன்றி குங்குமம் டாக்டர்
வலியை வெல்வோம்
கீழே சில எலும்புகள், தசைகள், தசை நார்களின் பெயர்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் தருகிறேன். அதைப்படித்ததும் ஏதாவது புரிகிறதா என்று பாருங்கள்?!
எலும்புகள் (Bones)
* கீழ்க்கால் பெரிய எலும்பு (Tibia)
* கீழ்க்கால் சிறிய எலும்பு (Fibula)
* கணுக்கால் மேல் எலும்பு (Talus)
* குதிகால் எலும்பு (Calcaneus)
* உள் கணுக்கால் புடைப்பு (Medial malleolus)
* வெளி கணுக்கால் புடைப்பு (Lateral malleolus)
* கணுக்கால் எலும்புக் கூட்டு (Tarsal bones)
* நடு பாத எலும்புகள் (Midfoot bones / Cuboid, Navicular, Cuneiforms)
மூட்டுகள் (Joints)
* கணுக்கால் மூட்டு (Ankle joint / Talocrural joint)
* கீழ் கணுக்கால்-குதிகால் மூட்டு (Subtalar joint)
* கீழ் கணுக்கால்-கணுக்கால் இணைப்பு மூட்டு (Distal tibiofibular syndesmosis / Inferior tibiofibular joint)
* மேல் கணுக்கால்-கணுக்கால் மூட்டு (Superior tibiofibular joint)
* கணுக்கால்-குதிகால் மூட்டு (Talocalcaneal joint)
* கணுக்கால்-நடு எலும்பு மூட்டு (Talocalcaneonavicular joint)
* கணுக்கால்-கன்னெலும்பு மூட்டு (Calcaneocuboid joint)
தசைகள் (Muscles)
* முன்பக்க கீழ்க்கால் தசை (Tibialis anterior)
* நீளமான விரல் நீட்டு தசை (Extensor digitorum longus)
* நீளமான கட்டைவிரல் நீட்டு தசை (Extensor hallucis longus)
* மூன்று விரல் நீட்டு தசை (Extensor digitorum brevis)
* கன்றுத்தசை (Gastrocnemius)
* பாதத்தளத் தசை (Soleus)
* பின்பக்க கீழ்க்கால் தசை (Tibialis posterior)
* நீளமான பெரோனியல் தசை (Peroneus longus / Fibularis longus)
* குறுகிய பெரோனியல் தசை (Peroneus brevis / Fibularis brevis)
* நீளமான கட்டைவிரல் வளைவு தசை (Flexor hallucis longus)
* நீளமான விரல் வளைவு தசை (Flexor digitorum longus)
* பாதத்தின் உள் தசைகள் (Intrinsic foot muscles).
தசைநார்கள்/இணைப்புத் திசுக்கள் (Ligaments/Tendons)
* குதிகால் தசைநார் (Achilles tendon)
* முன்பக்க கணுக்கால்-கணுக்கால் இணைப்பு (Anterior talofibular ligament ATFL)
* குதிகால்-கணுக்கால் இணைப்பு (Calcaneofibular ligament CFL)
* பின்பக்க கணுக்கால்-கணுக்கால் இணைப்பு (Posterior talofibular ligament PTFL)
* டெல்டாய்டு இணைப்பு (Deltoid ligament)
* முன்பக்க கீழ் கணுக்கால்-கணுக்கால் இணைப்பு (Anterior inferior tibiofibular ligament AITFL)
* பின்பக்க கீழ் கணுக்கால்-கணுக்கால் இணைப்பு (Posterior inferior tibiofibular ligament PITFL)
* இடைநிலை இணைப்பு (Interosseous ligament / Interosseous membrane)
* நீளமான பெரோனியல் தசைநார் (Peroneus longus tendon / Fibularis longus tendon)
* குறுகிய பெரோனியல் தசைநார் (Peroneus brevis tendon / Fibularis brevis tendon)
* பின்பக்க கீழ்க்கால் தசைநார் (Tibialis posterior tendon)
* நீளமான கட்டைவிரல் வளைவு தசைநார் (Flexor hallucis longus tendon)
* நீளமான விரல் வளைவு தசைநார் (Flexor digitorum longus tendon)
என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதா?! படிக்கிறதுக்கே கண்ணை கட்டுதா? அப்ப இது தான் உங்க கணுக்காலோட டிசைன், ரொம்ப சிக்கலா இருக்குல! அப்ப அதைய பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.
உங்கள் கணுக்காலை ஒருமுறை மெதுவாக தொட்டுப் பாருங்கள். உள்ளே ஒரு பெரிய எலும்புப் புடைப்பும், வெளியே ஒரு சற்று சிறிய எலும்புப் புடைப்பும் இருக்கும். இவை இரண்டும், நடுவில் இருக்கும் ஒரு முக்கிய எலும்பை இருபுறமும் பிடித்து வைத்திருக்கின்றன. அந்த மைய எலும்புதான் கணுக்கால் மேல் எலும்பு.
கணுக்கால் மூட்டு என்பது வெறும் ஒரு கீல் மூட்டு வகை மட்டுமல்ல. கீழ்க்கால் பெரிய எலும்பு, கீழ்க்கால் சிறிய எலும்பு, கணுக்கால் மேல் எலும்பு ஆகிய மூன்று எலும்புகளும் சேர்ந்து உருவாக்கும் ஒரு சிக்கலான அமைப்பு. இதோடு குதிகால் எலும்பும் இணைந்து மற்றொரு துணை மூட்டை உருவாக்குகிறது. இந்த இரண்டு மூட்டுகளும் சேர்ந்துதான் கணுக்கால் அனைத்து திசைகளிலும் சிறிதளவு இயங்க உதவுகிறது.
இப்போது உங்கள் காலை மெதுவாக மேல்நோக்கி தூக்குங்கள் (கால் விரல்கள் மூக்கை நோக்கி வரும் நிலை). இந்த நிலையில் கணுக்கால் மிகவும் இறுக்கமாக இருப்பதை உணரலாம். இப்போது காலை கீழ்நோக்கி அழுத்துங்கள் — கால் விரல்கள் தரையை நோக்கிச் செல்லும் நிலை. இப்போது சற்று தளர்வு மற்றும் அதிக நகர்வு தெரிகிறதா? இதுதான் கணுக்கால் மேல் எலும்பின் வடிவத்தால் ஏற்படும் மிக முக்கியமான இயக்கத்தின் விளைவு.
கணுக்காலை இறுக்கமாகவும் நிலையாகவும் வைத்திருப்பவை மிக முக்கியமான இணைப்புத் திசுக்கள்.
வெளிப்புறத்தில் மூன்று முக்கிய இணைப்புகள் உள்ளன:
* முன்பக்க கணுக்கால்-கணுக்கால் இணைப்பு,
* குதிகால்-கணுக்கால் இணைப்பு,
* பின்பக்க கணுக்கால்-கணுக்கால் இணைப்பு.
இவற்றில் முன்பக்க இணைப்புதான் மிக எளிதில் பாதிக்கப்படக்கூடியது. உங்கள் காலை உள்ளே திருப்பி (பாதம் உள்ளே நோக்கி வரும் வகையில்) பாருங்கள். வெளிப்பக்கத்தில் ஏதாவது இழுப்பு அல்லது இறுக்கம் உணர்கிறீர்களா? குறிப்பாக கால் விரல்கள் சற்று கீழ்நோக்கி இருக்கும்போது இந்த இழுப்பு மிக அதிகமாகிறது. இதுவே பெரும்பாலான சுளுக்கு காயங்களுக்கு முதல் காரணம். பின்புறத்தில் ஒரு தடிமனான கயிறு போன்ற அமைப்பு தெரிகிறதா? அது குதிகால் தசைநார். இப்போது நின்ற நிலையில் குதிகாலை தூக்க முயற்சி செய்யுங்கள். குதிகால் தசைநார் எவ்வளவு இறுக்கமாகிறது என்பதை உணர்கிறீர்களா? இந்த தசைநார் தான் மேல்பகுதி கன்றுத்தசை மற்றும் ஆழமான பாதத்தளத் தசை ஆகியவற்றின் சேர்க்கை.
இவை உடலின் மிகப் பெரிய தள்ளும் சக்தியை உருவாக்குகின்றன — நடக்கும்போது கால் விரல்களால் தள்ளும் தருணத்தில், ஓடும்போது, குதிக்கும்போது இந்த சக்திதான் நம்மை முன்னோக்கி தள்ளுகிறது. நடக்கும்போது கணுக்கால் மிகப்பெரிய சுமையைத் தாங்குகிறது. குதிகால் தரையில் முதலில் படும் தருணத்தில் உடல் எடையின் நான்கு முதல் ஏழு மடங்கு வரை அழுத்தம் ஏற்படுத்துகிறது. கால் விரல்களால் தள்ளும் தருணத்தில் மூன்று முதல் ஐந்து மடங்கு சக்தி உருவாகிறது. இந்த அளவுக்கு பெரிய சக்திகளைத் தாங்குவதற்கு கணுக்கால் ஒரு அதிர்வு உறிஞ்சியாகவும்(shock absorber), சக்தி உருவாக்கியாகவும் செயல்பட வேண்டியிருக்கிறது.
இப்போது ஒரு சிறிய சோதனை செய்யுங்கள். ஒரு காலில் நின்று கொண்டு மெதுவாக கண்ணை மூடுங்கள். பத்து-பதினைந்து வினாடி நிலைத்திருக்க முடிகிறதா? தள்ளாடுகிறீர்களா? கணுக்கால் தானாக சிறிய சிறிய திருத்தங்களைச் செய்கிறதா? இந்த திருத்தங்களைச் செய்யும் முக்கிய தசைகள் வெளிப்புற தசைகள், உட்புற பின்பக்கத் தசை, முன்பக்கத் தசை ஆகியவை. இவை சரியாக வேலை செய்யாவிட்டால் பின்னாளில் மீண்டும் மீண்டும் தள்ளாடுதல் மற்றும் வலி ஏற்படும் நிலை உருவாகும்.
பெரும்பாலான கணுக்கால் காயங்கள் உள்ளே சாய்ந்து + கீழ்நோக்கி அழுத்தப்பட்ட நிலையில் ஏற்படுகின்றன. ஒரு கல் மீது கால் வைத்தீர்கள் என்று கற்பனை செய்யுங்கள். கால் உள்ளே சாய்ந்தது. அதே நேரம் கால் விரல்கள் கீழ்நோக்கி இருந்தன. உடனே முன்பக்க கணுக்கால்-கணுக்கால் இணைப்பு இழுக்கப்பட்டு கிழிந்தது. கூர்மையான வலி, சில மணி நேரத்தில் வீக்கம், சில நாட்களில் நீல நிற காயம் — இதுதான் பெரும்பாலானவர்களுக்கு பொதுவாக ஏற்படும்.
கரடுமுரடான பாதையில் நடக்கும்போது இந்த இயக்கம் மிக எளிதில் நிகழ்கிறது. அதனால்தான் அத்தகைய பாதைகளில் நல்ல பிடிப்பு உள்ள காலணி அணிவது, கணுக்கால் தசைகளை வலுப்படுத்துவது, சமநிலை பயிற்சி செய்வது மிக முக்கியம். வெறும் காலில் நடப்பதற்கும் காலணி அணிந்து நடப்பதற்கும் கணிசமான வேறுபாடுகள் உள்ளன. வெறும் காலில் பெரும்பாலானோர் முன்பாதம் அல்லது நடுப்பாதம் முதலில் தரையைத் தொடுகிறார்கள். கணுக்கால் கீழ்நோக்கி வளைந்த நிலையில் இருக்கும். பாத வளைவு தானாகவே இயங்கி ஸ்பிரிங் போல வேலை செய்கிறது. அதிர்ச்சி உச்சம் பொதுவாக குறைவாக இருக்கும். ஆனால் கற்கள், கூர்மையான பொருட்கள் இருக்கும் இடங்களில் ஆபத்து அதிகம்.
காலணி அணிந்து நடக்கும்போது பெரும்பாலும் குதிகால் முதலில் படுகிறது. கணுக்கால் சற்று மேல்நோக்கி வளைந்த நிலையில் இருக்கும். பாத வளைவு இயக்கம் குறைகிறது. அதிர்ச்சி உச்சம் சில சமயம் அதிகமாக இருக்கலாம் — ஆனால் நல்ல cushions உள்ள காலணி அதை ஓரளவு உறிஞ்சுகிறது. இரண்டுமே நன்மைகள் உள்ளன. வெறும் காலில் நடப்பது பாதத்தின் சிறிய தசைகளை வலுப்படுத்தும், உணர்வை அதிகரிக்கும்(proprioception). காலணி அணிந்து நடப்பது பாதுகாப்பு தரும், நீண்ட தூரம் நடக்க துணை புரியும். பெரும்பாலானவர்களுக்கு இரண்டையும் மாறி மாறி செய்வது — வீட்டில், புல்வெளியில், கடற்கரையில் வெறும் காலில் + வெளியில் நல்ல காலணியில் — நல்ல பலனைத் தரும்.
கணுக்கால் மூட்டு ஒரு சாதாரண பகுதி அல்ல. ஒவ்வொரு அடியிலும் உடல் எடையின் பல மடங்கு சுமையைத் தாங்கி, சமநிலையைப் பேணி, அதிர்வுகளை உறிஞ்சி, சக்தியை உருவாக்கும் ஒரு அற்புதமான அமைப்பு. அதே நேரத்தில் சரியாக பராமரிக்காவிட்டால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதியும் கூட. சிறிய கவனமும், சரியான புரிதலும் இருந்தால் இந்த மூட்டை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.அடுத்த இதழில் கணுக்கால் மூட்டில் ஏற்படும் காயங்களைப் பற்றி பார்ப்போம்.
இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி
