×

வாய்ப்புற்றுநோய் விழிப்புணர்வு அவசியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

இந்தியாவில், சமீபகாலமாக வாய் புற்றுநோய் ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்து உள்ளது. ஆண்டுதோறும் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய நோயாளிகளுடன் உலக அளவில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம். இதில் சோகம் என்னவென்றால், 90 சதவீத பாதிப்புகள் தடுக்கக்கூடியவையாக உள்ளன. இவை பெரும்பாலும் புகையிலை மற்றும் பாக்கு பயன்பாடு காரணமாக ஏற்பட்டவையாகும் என்கிறார் புற்றுநோயியல் மற்றும் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறைத் தலைவர் மருத்துவர் எஸ். ராஜசுந்தரம்.

இது குறித்து அவர் விரிவாக கூறுகையில்,புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் என்பதன் அடிப்படையில், எனது ஒவ்வொரு நாளும் பெரும்பாலும் சிக்கலான தலை மற்றும் கழுத்து புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுடன் தொடங்குகிறது. அறுவை சிகிச்சை செய்வதுகூட எனக்கு கடினமாகத் தோன்றவில்லை; ஆனால் ஒரு இளைஞனிடம் அவனது “சாதாரண வாய்ப்புண்” உண்மையில் முற்றிய நிலை புற்றுநோய் என்று சொல்வதுதான் எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.

புகைப்பிடித்தல் மட்டுமல்ல சிகரெட் பாக்கெட்டுகளில்” புகைபிடித்தல் உயிரைக் கொல்லும்” என்ற எச்சரிக்கையை நாம் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால் இந்தியாவின் ஆபத்து பெரும்பாலும் குட்கா, கைனி, மாவா மற்றும் ஜர்தா போன்ற “புகையற்ற” பொருட்களிலும் உள்ளது. ஒருவர் புகையிலையைக் வாயில் ஒதுக்கி வைக்கும்போது, வெறும் நிக்கோடினை மட்டுமல்ல, புற்றுநோயை உண்டாக்கும் 70-க்கும் மேற்பட்டநச்சுகளை உடல் உறிஞ்சுகிறது. இதனால், புற்றுநோய் அபாயம் கூடுதலாகிறது.

“சாதா” பாக்கு கூட ஒரு வகை புற்றுநோய் காரணியாகும். இது “ஓரல் சப்மியூகோஸ் பைப்ரோஸிஸ்” என்ற நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் வாயின் தசைநார்கள் இறுகி, வாய் திறக்க முடியாத நிலை மற்றும் புற்றுநோய்க்கும் வழிவகுக்கிறது.

எச்சரிக்கை அறிகுறிகள்

“வலி இல்லையென்றால் அது புற்றுநோய் இல்லை” என்பதே முற்றிலும் தவறான நம்பிக்கையாகும். உண்மை என்னவென்றால், ஆரம்பக்கட்ட வாய்ப் புற்றுநோய் பெரும்பாலும் வலி இல்லாமலேயே இருக்கும்.

14 நாட்களுக்குள் ஆறாத எந்தவொரு வாய்ப்புண்ணும்.வாயின் உட்புறத்தில் தொடர்ந்து இருக்கும் வெண்மையான திட்டுகள் அல்லது சிவப்பு நிறத் திட்டுகள்.விழுங்கு வதில் சிரமம் அல்லது வாயை முழுமையாகத் திறக்க முடியாத நிலை ஆகிய 3-ம் முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள் ஆகும்.

2 நிமிட சுய பரிசோதனை

* நாக்கு: நாக்கின் பக்கவாட்டிலும் அடிப்பகுதியிலும் பார்க்கவும்

* கன்னங்கள்: கன்னங்களைத் தடவிப் பார்த்து, கட்டிகள் அல்லது தோல் போன்ற கடினமான உணர்வு உள்ளதா எனக் கண்டறியவும்.

* ஈறுகள்: காரணமில்லாத ரத்தப்போக்கு அல்லது சதை வளர்ச்சியைப் பார்க்கவும்.

* கழுத்து: தாடை ஓரத்தில் வலியற்ற, கடினமான கட்டிகள் உள்ளனவா எனத் தடவிப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வரும் முன் காப்போம்

ஆரம்பக்கட்ட நோய் கண்டறிதல் உயிரைக் காக்கும். இந்தியாவில் 50 சதவீத நோயாளிகள் நோய்ப்பாதிப்பின் மூன்றாம் நிலையில்தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். இந்த நிலையில் சிகிச்சை மிகவும் தீவிரமாக வழங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் பெரிய அறுவை சிகிச்சை, முகச்சீரமைப்பு மற்றும் கீமோ-கதிர்வீச்சு சிகிச்சைகள் அதற்கு தேவைப்படும்.

இது சாத்தியம் என்றாலும், இதற்கு அதிக நிபுணத்துவமும் செலவும் தேவைப்படும். ஆனால், முதல் நிலையில் அதாவது ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் 90 சதவீதம் குணப்படுத்த முடியும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், உயிருக்கு ஆபத்தான இந்த புற்றுநோயை கூட ஒரு சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்து விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

வேண்டுகோள்

சமீபகாலமாக இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் 30 வயதுடைய பெரும்பாலான ஆண்களுக்கு இந்த நோயின் பாதிப்பு அதிக அளவில் அதிகரித்து வருவதை நாங்கள் பார்த்து வருகிறோம். வாய் என்பது ஆரோக்கியத்தின் நுழைவுவாயில் ஆகும்.

புகையிலை போன்ற நச்சுத்தன்மை நிறைந்த பொருட்களைக் கொண்டு அதை நோயின் நுழைவாயிலாக மாற்றாதீர்கள். உங்கள் கன்னத்தில் அல்லது வாயின் உட்புறத்தை அவ்வப்போது கைகளால் தடவிப்பாருங்கள். ஏதேனும் சந்தேகப்படும் வகையில் இருந்தால், உடனே புற்றுநோய் மருத்துவரை அணுகிஆலோசனை பெறுங்கள் என்று கூறியுள்ளார்.

தொகுப்பு: ஸ்ரீ தேவி குமரேசன்

Tags : Saffron Dr India ,
× RELATED குழந்தைகளில் குடற்புழு தொற்று