×

இயல்பான கொழுப்பு… அச்சம் வேண்டாம்!

நன்றி குங்குமம் தோழி

சென்ற மாதம் இருபத்தி ஏழு வயதுடைய பெண் ஒருவர், தன் திருமணத்திற்கு முன்பாக உடல் எடையை குறைக்க முடிவு செய்து வந்திருந்தார். அவரது உடலை பரிசோதனை செய்து பார்த்ததில் அவரின் பி.எம்.ஐ கணக்கு சரியாகவே இருந்தது. இதனை அவருக்கு சொல்லியும் அவர் ஏற்கவில்லை. ‘உடலில் கொஞ்சமும் கொழுப்பு பகுதி இல்லாமல் முழுமையாக நடிகைகள் போல மெல்லிய தோற்றத்துடன் காண வேண்டும்’ என நினைத்தார். அவருக்கு அதிலுள்ள சிக்கல்களை எடுத்துச் சொல்லி புரிய வைத்து தெளிவுபடுத்தினேன்.

இப்படி அவர் மட்டுமல்ல… நம்மில் பலர் முழு உடலும் பென்சில் கோடு போல மெல்லிதாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். அது மிகவும் தவறு. இயற்கையாக ஏன் நம் உடம்பில் கொழுப்பு இருக்க வேண்டும், இதனை குறைக்க நினைத்தால் வரும் பாதகங்கள் என்ன, இவற்றில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு யாது என்பதையெல்லாம் இங்கே பார்ப்போம்.

கொழுப்புச் சத்து…

நமக்கு அதிமுக்கியமான தினசரி கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகளில் கொழுப்புச் சத்தும் ஒன்று. ஒரு நாளின் தேவைக்கு மேல் இருக்கும் கொழுப்புச் சத்து நம் உடலிலேயே தங்கிவிடும். பின் நமக்கு குளுக்கோஸ் சத்து இல்லாத நேரத்தில் ஆற்றல் வழங்கும்.

நம் சருமத்தின் அடியில் படிந்திருக்கும் இந்த கொழுப்பு திசுக்கள் உள் உறுப்புகளை சுற்றியும் இருக்கும். அதாவது, நமது கணையம், ஈரல், வயிறு, குடல் போன்ற உறுப்புகளை சுற்றியும் பாதுகாப்பிற்காக இருக்கும்.

உணவுகள்…

நாம் உண்ணும் கொழுப்புச் சத்தில் நல்ல சத்து(Good fat), தீய சத்து (Bad fat) என இரு வகைகள் உள்ளன. அதாவது, தேங்காய், பாதாம் போன்ற கொட்டை வகைகள், பால், நெய், மீன், ஆட்டு இறைச்சி, அவகடோ பழம், ஆலிவ் எண்ணெய், பூசணி மற்றும் ஆளி விதைகள், வேர்க்கடலை போன்றவை நல்ல கொழுப்புச் சத்தில் சேரும். இதனை நம் உடல் நலத்திற்காக அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.ஆனால், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவு, கேக் போன்ற பேக்கரி வகைகள் எல்லாம் உடலிற்கு கேடு விளைவிக்கும் தீய கொழுப்புச் சத்துகள்.

பயன்கள்…

*வறட்சியான சருமம் இல்லாமல் நம் சருமத்தில் எண்ணெய் தன்மையை உண்டாக்குகிறது.

*ஈஸ்ட்ரோஜன் போன்ற முக்கியமான ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கு உதவுகிறது.

*குளுக்கோஸ் இல்லாத அவசர காலத்தில் நம் உடலில் உள்ள கொழுப்புச் சத்துதான் குளுக்கோஸ் ஆக மாறுகிறது.

*முக்கிய வைட்டமின்களான A,D,E,K என்ற நான்கு ஊட்டச்சத்துகளும் நம் உடம்பில் சேர்ந்து பயனளிப்பதற்கு கொழுப்புச் சத்து இன்றியமையாதது.

*உடலில் பல வகையான (மூளையின் நரம்புச் செல்கள் உட்பட) செல்களின் கட்டமைப்பிற்கு உதவும்.

*உடலின் தட்பவெப்ப மண்டலம் சீராக இயங்கவும் உதவி செய்கிறது.

*மேலும், உடலில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சமிக்கைகளை (Signals) கடத்தவும் உதவுகிறது.

அளவுகள்…

ஒரு ஆரோக்கியமான ஆணுக்கு உடலில் 14 முதல் 24 சதவிகிதம் கொழுப்புச் சத்து வேண்டும். இதுவே பெண்களுக்கு 21-31 சதவிகிதம் வேண்டும்.உடலில் கொழுப்புச் சத்து ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருக்க வேண்டும். இது இயல்பிலேயே அதிகமாகத் தான் இருக்கும். அதேபோல நம் தேவைக்கு ஏற்பவும் அளவுகள் மாறுபடும். உதாரணமாக, விளையாட்டு வீரர்களுக்கு சராசரியை விட குறைவான கொழுப்புச் சத்துதான் தேவைப்படும். எவ்வளவு கொழுப்புச் சத்து இருக்கிறது என்பதனை தெரிந்து கொள்வதற்கு ‘டெக்ஸா ஸ்கேன்’(Dexa Scan) போன்ற பரிசோதனைகள், ரத்தப் பரிசோதனைகள் (Blood Tests) உதவும்.

பெண்ணின் உடலியல்…

நாம் கருவுற்று குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்பதால் இயற்கையாகவே ஆண்களை விட தேவைக்கு அதிகமான கொழுப்புச் சத்து இயல்பாய் நம் உடலில் படியும். நாம் விலங்காய் இருந்த போதும், குகை மனிதராக இருந்த போதிலிருந்தும், நம் முதன்மையான வாழ்வியல் பயனே நாம் கருவுற்று அடுத்த தலைமுறையை ஈன்றெடுக்க வேண்டும் என்பதுதான். எனவேதான் நம் உடல் அமைப்பே இவ்வாறு அமைந்துள்ளது. இது இல்லாமல் பெண்கள்தான் குழந்தைகளை பாதுகாத்து வளர்க்கும்(Nuturing) வேலையில் ஈடுபடுபவர்கள் என்பதால், அவர்களுக்கு இவ்வகையான உடலமைப்பு இயல்பிலேயே இருக்கிறது.

ஹார்மோன்களின் பங்கு…

ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் உற்பத்தியாகி அது ரத்தத்தில் கலந்து தனது வேலையை செய்வதற்கு கொழுப்புச் சத்து உதவியாக உள்ளது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்தான் முறையான மாதவிடாய் சுழற்சிக்கும், கருத்தரிக்கவும் உதவுகிறது. எனவே, பெண்களின் உடல் எடைக்கும், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கும், கருத்தரிப்பிற்கும் நேரடி பங்கு உள்ளதை நாம் உணர வேண்டும்.

என்ன மாதிரியான விளைவுகள்..?

* குறைவான கொழுப்புச் சத்து இருந்தால் ஹார்மோன்கள் சமச்சீராக இல்லாமல் உற்பத்தியாக நேரிடும். இதனால் கரு உற்பத்தியாக தாமதமாவது, முறையற்ற மாதவிடாய் சுழற்சி போன்ற சிக்கல்கள் நிகழலாம். புதிய தாயாக இருப்பின் குழந்தையின் எடை குறைவாக இருக்கும். அதாவது, தாய்ப்பாலில் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கும்.

*இரண்டாவது, கருத்தரிக்க தாமதமாகலாம்.

*உடல் எப்பொழுதும் அயர்ச்சியாய் உணர்வது, எவ்வளவு சாப்பிட்டாலும் நிறைவான உணர்வு ஏற்படாமல் இருக்கும்.

*தொடர்ந்து இவ்வாறு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பின் பின்னாளில் இதன் விளைவாக சர்க்கரை நோய் வரும் ஆபத்தும் உள்ளது.

செய்ய வேண்டியவை…

*பி.எம்.ஐ கணக்கை அளவாக வைத்திருப்பது. அதாவது, 19 முதல் 25-க்குள் இருப்பது அவசியம்.

*நம் வாழ்வியல் முறையில் சுறுசுறுப்போடு உடல் உழைப்பில் ஈடுபடுவது அவசியம்.

*உடலுக்கு கேடு விளைவிக்கும் குப்பை உணவுகளை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வது.

*தினசரி உடற்பயிற்சிகள் செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.

செய்யக்கூடாதவை…

4வீடியோக்கள் பார்த்து உடற்பயிற்சிகள் செய்வது.

4 தவறான ‘உடல் எடை குறைக்கும் வழிகளை’ பின்பற்றுவது. இதனால் போதுமான கொழுப்புச் சத்தை நாம் நம் உடலுக்கு தருவதில்லை.

4அடிக்கடி நம் உடல் கொழுப்பின் அளவை சரிபார்க்க தவறுவது. வருடத்திற்கு ஒரு முறை உடல் கொழுப்பின் அளவை ரத்தப் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்வது அவசியம்.

இயன்முறை மருத்துவத்தின் பங்கு…

நீங்கள் உங்கள் எடையில் சரியாக இருக்கிறீர்களா? என்பதனை பரிசோதனை செய்து அதற்கு தேவையான தக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கு அருகிலுள்ள இயன்முறை மருத்துவரை அணுகலாம். அவர் உங்களை முற்றிலும் பரிசோதனை செய்து உங்களின் கொழுப்புச் சத்து எவ்வளவு உள்ளது, உங்களின் மற்ற எடை அதாவது, நீர் எடை, தசை எடை எவ்வளவு உள்ளது என மொத்தத்தையும் கணக்கீடு செய்வர். உங்களின் தசைத்திறன் என்ன என்பதனையும் பரிசோதனை செய்து அதற்கு தேவையானவாறு உடல் எடையை குறைக்கவும், கூட்டவும் சரியான எடையாக இருந்தால் அதே எடையில் வைத்திருக்கவும் உதவி செய்வார்.

பலவகையான உடற்பயிற்சிகள் இருக்கிறது என்பதால், அதில் ஒருவரின் தேவைக்கு ஏற்ப என்ன உடற்பயிற்சி தேவைப்படும், அது எந்த எண்ணிக்கையில் தேவைப்படும், எப்படி செய்தால் எளிதாக இருக்கும் போன்றவற்றை பரிந்துரைத்து கற்றும் கொடுப்பார்.சரியான பி.எம்.ஐ-யில் இருப்பவர்கள் உடல் எடையை பராமரித்து வந்தாலே போதுமானது. இதற்கு உடற்பயிற்சிகள் முற்றிலும் உதவும்.

இவை இல்லாமல் உணவியல் நிபுணரையும் பார்த்து ஆலோசனை பெற்று அதற்கு தக்கவாறு உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.மொத்தத்தில் இயற்கையின் வழியே நாம் வாழ்ந்தால் எந்தச் சிக்கலும் வராது. மாறாக, அதை தேவைகள் இல்லாமல் மீறும் போது அதற்கான உடலியல் சிக்கல்களை நமக்கு நாமே உண்டாக்குகிறோம் என்பதை உணர்ந்து விழித்துக் கொள்வது அவசியமாகிறது.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

Tags : Thanksgiving ,
× RELATED செரிமானக் கோளாறு தீர்வு என்ன?