நன்றி குங்குமம் டாக்டர்
விழிப்புணர்வு அவசியம்!
பள்ளி செல்லும் குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், சமூக ஒழுங்குக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளில் ஏற்படும் பொதுவான சுகாதார பிரச்னைகளில் ஒன்று குடற்புழு தொற்று. இது சுத்தமின்மை காரணமாக ஏற்படுகிறது. குடற்புழு தொற்று குழந்தைகளின் உடல் வளர்ச்சி, உணவு செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கல்வித் திறனை பாதிக்கும்.
எனவே, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக மக்கள் அனைவரும் இதை கவனித்து, தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். இதற்காக தேசிய அளவில் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 தேதிகளில் டி வார்மிங் டே நாள் அனுசரிக்கப்படுகிறது என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் ஆர்.கணேஷ். இதுகுறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை.
குடற்புழு என்றால் என்ன? எந்த வயதில் ஏற்படும்..
குடற்புழு என்பது மனித குடலில் வாழும் சிறிய புழுக்களை குறிக்கிறது. இது எந்த வயதிலும் வரலாம். ஆனால், பெரும்பாலும் பள்ளிப் பருவ குழந்தைகளிடையே அதிகம் காணப்படுகிறது. இதில் நான்கு வகைகள் இருக்கின்றன. அவை,
ரவுண்ட்வோர்ம் (Roundworm):
குடலில் வாழும் நீளமான புழுக்கள்.
ஹூக் வோர்ம் (Hookworm): உடலிலுள்ள இரத்தம் உறிஞ்சி இரத்தசோகையை ஏற்படுத்தும்.
பின் வோர்ம் (Pinworm): பெரும்பாலும் இரவில் மலம் வழியாக வெளியே வந்து குழந்தைகளை அசுத்தமாக்கும்.
டேப் வோர்ம் (Tapeworm): நீளமான உடல் கொண்ட புழுக்கள், சில நேரங்களில் குழந்தையின் உடல் எடையை குறைக்கும்.
குடற்புழு ஏற்பட காரணங்கள்
குடற்புழு தொற்று பெரும்பாலும் சுகாதாரமின்மை காரணமாக ஏற்படுகிறது. உதாரணமாக, மண்ணில் விளையும் பழங்கள், காய்கள் போன்றவற்றை சரியாக சுத்தம் செய்யாமல் நாம் சாப்பிடும்போது, அதில் ஒட்டியிருக்கும் புழுக்களின் மூட்டை வயிற்றுக்குள் சென்று குடற்புழுக்கள் ஏற்படுகிறது.அதுபோன்று, செருப்பு அணியாமல் வெறும் காலில் சாலைகளில் நடந்து செல்லும்போது சாலையில் மண்ணில் வாழும் ஹூக் வோர்ம் போன்ற புழுக்கள் நமது காலில் ஒட்டிக் கொண்டு பாதம் வழியாக உள்ளே சென்று தொற்றை ஏற்படுத்துகிறது.
மூன்றாவதாக, மிக முக்கியமாக பார்க்கப்படுவது, சுகாதாரமின்மை, கைகளை சோப்பால் கழுவாமல் உணவு உண்ணுதல். விரல்களை வாயில் அடிக்கடி வைத்து கடிப்பது.
மாசுபட்ட தண்ணீர் குடித்தல் – புழுக்கள் மற்றும் அவற்றின் முட்டைகள் மாசுபட்ட தண்ணீரில் இருக்கலாம்.
நன்றாக சமைக்காத உணவு உட்கொள்ளுதல் – காய்ந்த பழங்கள், காய்கறிகள் முறையாக கழுவாமல் சாப்பிடுவது.நகங்களை நீளமாக வைத்திருத்தல் மற்றும் கடித்தல் – புழுக்களின் முட்டைகள் நகங்களில் சிக்கி, அதைச் சாப்பிடும்போது உடலில் நுழைகின்றன. இந்த காரணங்களால்தான் பெரும்பாலும் குடற்புழு ஏற்படுகிறது.
பள்ளி குழந்தைகளிடம் அதிகம் இந்த குடற்புழு காணப்படுவதற்கு காரணம், குழந்தைகளுக்கு சுத்தமாக வைத்துக் கொள்ள தெரியாது. இதனால், மண்ணில் விளையாடிவிட்டு கையை கழுவாமல், அப்படியே சாப்பிடுவார்கள். அவர்களுக்கு பழங்கள் காய்கறிகள் எல்லாம் கழுவி சாப்பிட தெரியாது. வெளியே விளையாட போகும்போது செருப்பு அணியாமல் அப்படியே வெறும் காலில் ஓடி சென்று விளையாடுவார்கள். வீட்டுக்குள் வரும்போது கால்களை சுத்தமாக கழுவாமல், அப்படியே வந்து அமர்ந்து சாப்பிடுவார்கள். இதனால்தான் குழந்தைகளில் குடற்புழு அதிகம் காணப்படுகிறது.
அறிகுறிகள்
குடற்புழு தொற்று ஆரம்பத்தில் தெளிவாக தெரியாமல் இருக்கலாம். சில அறிகுறிகள்:
வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று வலி ஏற்படும். அவை ஒட்டுண்ணிகள் என்பதால், நாம் சாப்பிடும் உணவுகளை அவை உண்டுவிடும். இதனால் உடல் எடை குறைவு ஏற்படும். மேலும், நமது உடலில் உள்ள ரத்தத்தை உறியத் தொடங்கும். இதனால், குடற்புழு இருப்பவர்களுக்கு ரத்த சோகை (அனிமீயா) ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இது தவிர தூக்கமின்மை மற்றும் சோர்வு, பசியின்மை மலத்தில் புழுக்கள் அல்லது புழுக்களின் முட்டைகள் காணப்படுதல்மலம் கழிக்கும் இடத்தில் அரிப்பு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
குடற்புழு ஏற்படுத்தும் பாதிப்புகள்
இந்த லார்வா புழுக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகரும் தன்மை கொண்டவை. எனவே, சில சமயங்களில் அரிதாக இந்த புழுக்கள், குடலில் இருந்து கல்லீரல், நுரையீரல் போன்ற இடங்களுக்கு செல்லும். அப்படி நுரையீரலுக்கு செல்லும்போது, மூச்சுதிணறல், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். கல்லீரலுக்கு சென்றால், அங்கே சீழ் ஏற்படுத்தி மஞ்சள் காமாலை நோயை உருவாக்கும். சில சமயங்களில் பித்தக்குழாய்களுக்கு சென்று ஒட்டிக் கொள்ளும். அப்படி ஒட்டிக்கொள்ளும்போது பித்த குழாயை அடைத்துக்கொள்ளும். இதனாலும், மஞ்சள் காமாலை ஏற்படலாம்.
சிகிச்சை முறைகள்
குடற்புழுக்கள் இருந்தால், டி வார்மிங்(Deworming tablets), அல்பென்டசோல் போன்ற மருந்துகள் மூலம் குடற்புழுக்களை வெளியேற்ற வேண்டும்.இந்த குடற்புழு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, தேசிய அளவில் டி வார்மிங் டே என்று கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வருடத்தில் இரண்டு முறை குழந்தைகளுக்கு பூச்சி மருந்துகள் கொடுத்து குடற்புழுக்களை வெளியேற்றுவார்கள். அதாவது பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 தேதியில் இந்த டி- வார்மிங் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதாவது ஆறு மாதகால இடைவெளியில் இரண்டுமுறை இந்த பூச்சி மருந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது. பள்ளியிலேயே இந்த மருந்து செலுத்தப்படுகிறது. 1 வயதிலிருந்து 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது. இது தவிர, அந்தந்தப் பகுதி மருத்துவரும் இந்த தடுப்பு மருந்தை கொடுக்கிறார்கள்.
அவர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம். தற்போது, பூச்சி மாத்திரைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே நிறையவே ஏற்பட்டு இருக்கிறது. எனவே, பெரியவர்கள் கூட மருத்துவரிடம் சென்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.
குடற்புழு தொற்றை தடுக்க எளிய பயனுள்ள வழிமுறைகள்
*கைகளை சோப்பால் கழுவுதல்: உணவு உண்ணும் முன், கழிப்பறை பயன்படுத்திய பிறகு கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
*கொதிக்கவைத்த அல்லது சுத்தமான தண்ணீர் குடித்தல்
*உணவை நன்றாக சமைத்து உண்பது
*காலணியுடன் வெளியில் நடப்பது
*நகங்களை குறுகிய நிலையில் வைத்திருத்தல் மற்றும் சுத்தமாக வைத்திருத்தல்.
*பள்ளி மற்றும் சமூக விழிப்புணர்வு: ஆசிரியர்கள் குழந்தைகளை சுகாதார பழக்கவழக்கங்களில் பயிற்றுவிப்பது முக்கியம்.
*பள்ளி செல்லும் குழந்தைகளில் குடற்புழு தொற்று ஒரு பொதுவான சுகாதார பிரச்சினை என்றாலும், எளிய சுகாதார பழக்கவழக்கங்கள் மற்றும் மாத்திரை முறைகள் மூலம் அதை தடுப்பது மிகவும் சாத்தியம். அந்தவகையில் வருமுன் காப்பது நலம்.
தொகுப்பு: ஸ்ரீ தேவிகுமரேசன்
