தேர்தல் வாக்குறுதியில் இலவசம்: விஜய்யிடம் போய் கேளுங்க…எடப்பாடி டென்ஷன்

 

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், அதிமுக புறநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில், மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, 40 கிலோ கேக்கை வெட்டி, மகளிருக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ஒவ்வொரு கட்சி தலைவர்களும், அவர்கள் விருப்பப்படி தேர்தல் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். அதன் அடிப்படையில், தவெக தலைவர் விஜய்யும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதிமுக சார்பாக மூத்த நிர்வாகிகள் ஆலோசனையின்படி, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

அப்போது, இலவசங்களை வழங்கக் கூடாது என கூறிய தவெக தலைவர் விஜய், தற்போது தனது தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் அறிவித்துள்ளாரே என்று கேட்டதற்கு டென்ஷனான எடப்பாடி பழனிசாமி, அது குறித்து அவரிடம் (விஜய்யிடம்) தான் கேட்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, ஓமலூர் தொகுதி பாமக முன்னாள் எம்எல்ஏ தமிழரசு, தனது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோருடன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தார்.

Related Stories: