தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான பிரமாண்ட கூட்டணி அமைந்துள்ளது. இதில், தேமுதிக முதல் முறையாக இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
தேமுதிகவில் விஜயகாந்த் இருக்கும்போதும் தற்போது வரை பவர்ஃபுல்லாக விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் இருந்து வருகிறார். கடந்த 2011-2016 காலகட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக செயல்பட்டு வந்தார். அதன் பிறகு மக்கள் நல கூட்டணியில் விழுப்புரத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
தற்போது எம்எல்ஏவாக இல்லாவிட்டாலும் கட்சி பணியையும், மக்கள் பணியையும் மாவட்டத்தில் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். திமுக கூட்டணியில் எம்எல்ஏ சீட்டுக்கு தேமுதிகவில் விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார். ஏதாவது ஒரு தொகுதியை திமுக கூட்டணியிடம் பெற்று போட்டியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி கட்சி தலைமையும் பச்சைக்கொடி காட்டியுள்ளதால் தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டுள்ளார். உள்ளூரில் இருக்கும்போது தனது ஆதரவாளர்கள், நண்பர்களுடன் காந்தி சிலை அருகே உள்ள ஹோட்டலுடன் கூடிய டீக்கடையில் தினசரி டீ குடித்து ஓரிரு மணி நேரம் அரசியல் நிகழ்வு குறித்து பேசுவார்களாம். ஆனால் அண்மைக்காலமாக தேமுதிக கூட்டணி மாறியதும், அங்கு செல்வதை நிறுத்திவிட்டு புதிய டீக்கடைக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறாராம்.
இதுகுறித்து அவரது நெருங்கிய நண்பர்கள் கூறுகையில், ‘‘பழைய டீக்கடை அதிமுக கூட்டணி இருக்கும்போது செல்ல ஆரம்பித்தது. அங்கு அதிமுகவினரே பெரும்பாலும் வருவார்கள். அவர்களின் தொல்லை தாங்க முடியவில்லையாம். இதனால் மாஜி எம்எல்ஏ வெங்கடேசன், புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள டீக்கடையில் காலையில் சென்று தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்’’ என்றனர். டீக்கடை என்றாலே அங்கு தான் அரசியல் ஆரம்பம் ஆகும். பல டீக்கடையில் அரசியல் பேச வேண்டாம் என்று போர்டே போட்டிருப்பார்கள். இவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்த டீக்கடை அரசியலுக்கு வேட்டு வைத்து விடும் என்பதாலே மாஜி எம்எல்ஏ டீக்கடையை மாற்றி இருக்கிறாராம்.
