என்னுடைய பயணத்தில் ரொம்ப ரொம்ப உறுதுணையாக இருந்தது தமிழக அரசின் ‘நான் முதல்வன் திட்டம்’ தான்: யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி பேட்டி

சென்னை: என்னுடைய பயணத்தில் ரொம்ப ரொம்ப உறுதுணையாக இருந்தது தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் தான் என்று யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 2ம் இடம் பிடித்த மாணவி ராஜேஸ்வரி சுவி கூறினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவி, யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதித்துள்ளார். அதே நேரத்தில் தமிழகத்தில் முதல் இடமும் பிடித்துள்ளார். இவருடைய சொந்த ஊர் மதுரை மாவட்டம், வாடிப்பட்டியாகும்.

ராஜேஸ்வரி சுவி 2018ல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்சாரப் பொறியியல் முடித்தார். இவரது தாய் ஒரு இணைப் பேராசிரியர், தந்தை இருசக்கர வாகன உதிரிபாகக் கடை வைத்திருப்பவர் மற்றும் காப்பீட்டு ஆலோசகராகவும் உள்ளார். சிவில் சர்வீஸ் பணிக்கு தயாரான ராஜேஸ்வரி சுவி 2024ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் மாநில அளவில் 11வது இடம் பிடித்து திண்டுக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த ராஜேஸ்வரி சுவி, இதுவரை 5 முறை இத்தேர்வை எழுதியுள்ளார்.

தற்போது யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக ராஜேஸ்வரி சுவி அளித்த பேட்டி: எனக்கு இது வந்து 6 வருடம் பயணம். இது எனது ஐந்தாவது முயற்சியாகும். இது எனது முதல் மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகும். இந்த ரிசல்ட்டுக்காக எனது அம்மா, அப்பா, கடவுளுக்கு நன்றியை சொல்லி கொள்கிறேன். என்னுடைய இந்த பயணத்தில் ரொம்ப ரொம்ப உறுதுணையாக இருந்தது தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் தான்.

எல்லாருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஏற்கனவே துணை ஆட்சியராக தமிழ்நாட்டில் பணியாற்றி வருகிறேன். இந்த பயணமும் யுபிஎஸ்சி பயணத்திற்கு உறுதுணையாக இருந்தது. நான் முதல்வன் திட்டத்தில் ஊக்கத் தொகையாக இருக்கட்டும், அகாடமி சப்போர்ட்டாக இருக்கட்டும். எல்லாமே நம்மளை சரியான பாதையில், சரியான இலக்கை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். இதை படித்தால் போதும், இப்படி தான் படிக்க வேண்டும் என்பது உறுதுணையாக இருந்தது.

இதற்காக எல்லாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் முதல்வன் திட்டத்தின் கீழ், யுபிஎஸ்சி குடிமைப்பணி தேர்வுகளுக்கு தேர்வு நடத்தி 1,000 திறமையான மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில் தேர்வு செய்யப்படும் எல்லா மாணவர்களுக்கும் முதல்நிலை தேர்விலேயே மாதாமாதம் ரூ.7500 ஊக்கத் தொகை தருகிறார்கள். 10 மாதம் தரும் போது இது மாணவர்களுக்கு நல்ல ஊக்க தொகையாக இருக்கிறது.

பெற்றோரை சார்ந்திருக்காமல் நமக்கே ஒரு கான்பிடன்ஸ் கொடுத்து அடுத்த லெவலுக்கு போவதற்கு உதவியாக இருக்கிறது. மெயின் தேர்வுக்குமே தங்கும் இடம் இலவசமாக தருகிறார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் நல்ல ஸ்டாப் போட்டு உள்ளார்கள். முந்தைய ஆண்டு தேர்வு வினாவா? இதை இப்படி சால்வ் பண்ண வேண்டும். வினாக்களை இப்படி கையாள வேண்டும் என்று சொல்லி கொடுக்கிறார்கள்.

அரசு இன்ஸ்டிடியூட்டுக்கும், தனியார் இன்ஸ்டிடியூட்டுக்கும் வித்தியாசமே இல்லாத அளவுக்கு ரொம்ப நல்லா சொல்லி கொடுக்கிறார்கள். எல்லா மாணவர்களுக்கும் சமமான வழிகாட்டுதலை வழங்கி வருகிறார்கள். இந்த வருடம் நேர்முக தேர்வுக்குமே ஒரு மாதத்திற்கும் மேல் தங்க இடம் கொடுத்து, ஒவ்வொரு மாணவர்களின் பிளஸ் என்ன?,

மைனஸ் என்ன? என்று கண்டுபிடித்து நம்மளை நாமே மேம்படுத்திக் கொண்டு இலக்கை நோக்கி ஓட நான் முதல்வன் திட்டக்குழு ரொம்ப உதவியாக இருக்கிறது. நாங்க டெல்லிக்கு நேர்முக தேர்வுக்கு செல்லும் போது, முதல்நிலை தேர்வுக்கே ரூ.7500 என்று 10 மாதத்திற்கு தருகிறார்களா? என்று வெளிமாநில மாணவர்கள் ரொம்ப ஆச்சரியப்பட்டார்கள். தமிழக மாணவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. தமிழக அரசுக்கு ரொம்ப நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: