பகுதி 3
மாலை மாற்றுதல் ஏன்?
மணமான இருவர் மாலை மாற்றிக் கொள்வதன் அர்த்தம், அவர்கள் இனி இருவரல்ல, ஒருவரே என்று ஊரறிய சொல்லாமற் சொல்வது. மணமகள் எழுந்து வடக்கு நோக்கி இறைவனை தியானித்து மணமகன் கழுத்தில் மாலை சூட்டுவாள். மணமகன் மணமகளைத் தன் இடப் பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டுவான். மூன்று முறை மாலை மாற்ற வேண்டும். தொடர்ந்து கொண்டு வந்த மங்கலப் பொருட்களாகிய மஞ்சள், குங்குமம், பூ, வாசனைப் பொருட்கள், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை மணமகன் மணமகளிடம் கொடுப்பார். கணவன் மனைவியாக ஆனபின் தம் மங்கலக் கோலத்தை இருவரும் கண்ணாடியில் பார்த்து மகிழ்வார்கள். மாலை மாற்றுதல் என்பதில் தாய் மாமன் பெறும்
மரியாதை மிக முக்கியம். அடுத்த சடங்காக மணமக்களுக்கு பால் பழம் கொடுப்பது. பால், வாழைப் பழம் கலந்து மணமகள் முதலில் மணமகனுக்கு மூன்று முறை கொடுப்பார். பின் மணமகன் மணமகளுக்கு மூன்று முறை கொடுப்பார். நாயகன் நாயகி உணவு கொள்ளல் மறைவில் செய்யவேண்டும் என்பதால் திரை ஒன்று முன்னால் பிடிக்கப்படும். முதன் முதலில் தம்பதிகளுக்குக் கொடுக்கும் இனிப்புப் பதார்த்தமாகையால் வாழ்க்கை இனிமையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தவே இச்சடங்கு.
ஸப்தபதி ஏன்?
மாங்கல்யதாரணம் என்றழைக்கப்படும் தாலி கட்டுதல் என்ற சம்பிரதாயம் முடிந்தவுடன், பெண்ணின் கரத்தினைப் பற்றி மாப்பிள்ளை மந்திரம் சொல்லி அந்தப்பெண்ணை தன் வாழ்நாள் முழுவதும் வைத்துக் காப்பாற்றுவதாக உறுதியளிப்பார். இந்த நிகழ்விற்கு பாணிக்ரஹணம் என்று பெயர். பாணி என்றால் கரம் என்று பொருள். கிரஹணம் என்றால் பிடித்தல். “இயம் சீதா மம சுதா ஸஹதர்மசரீ தவ! ப்ரதீச்ச சைநாம் பத்ரந்தே பாணீம், க்ருண்ஹீஷ்வ பாணிநா” என்ற ஸ்லோகம் வால்மீகி ராமாயணம், பால காண்டத்தில் வருகிறது. இந்த சுலோகத்தை பலர் கல்யாணத்தில் பயன் படுத்துகின்றனர். “இவள் என் மகள் சீதை; இவளை உன் மனைவியாக ஏற்பாயாக; இவள் கையை உன் கைகளால் பற்றுவாயாக; இவள் உன்னை நிழல் போல தொடர்ந்து வரட்டும்” என்று ஜனக மகாராஜன் சொன்ன சொற்கள் மிகவும் புகழ் பெற்றவை. இதனைத் தொடர்ந்து, மணமகன் சபையோர் முன்னிலையில் தான் கரம் பற்றிய பெண்ணின் கால்விரலைப் பிடித்து ஒவ்வொரு அடியாக ஏழு அடி எடுத்து வைக்கச் செய்ய வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்லப்படும்.
1. வாழ்க்கையில் உணவு குறைவில்லாமல் அளிப்பதற்கு இறைவன் விஷ்ணு உன்னைப் பின் தொடர்ந்து வரட்டும்.
2. உடல் வலிமை கிடைக்க இறைவன் விஷ்ணு பின் தொடரட்டும்.
3. விரதத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு உன்னை இறைவன் விஷ்ணு பின் தொடர்ந்து வரட்டும்.
4. சுகமும் மனச்சாந்தியும் கிடைக்க இறைவன் விஷ்ணு உன்னைப் பின் தொடரட்டும்.
5. பசுக்கள் பிராணிகள் போன்ற செல்வங்கள் பின் தொடர்ந்து வரட்டும்.
6. சகல சௌபாக்கியங்களும் கிடைக்க விஷ்ணு பின் தொடர்ந்து வரட்டும்.
7. உடன் வாழ்வில் இடம்பெறும் சுபகாரியங்கள், ஹோமங்கள் குறைவின்றி நிறைவேற்ற இறைவன் விஷ்ணு உன்னை பின் தொடர்ந்து வரட்டும். ஏழடிகள் நடந்த நாமிருவர்கள் சினேகிதரானோம். இருவரும் சேர்ந்து அனுபவிப்போம், என்னுடன் கூடவா என்னும் பொருளில் இந்நிகழ்ச்சி அமையும். இதற்கு “சப்தபதி” என்று பெயர்.
பொரியிடுதல்
அக்கினியை மூன்று முறை வலம் வரவேண்டும். ஒவ்வொரு முறையும் வலம்வந்து மணமக்கள் கிழக்கு நோக்கி நிற்க, மணமகள் சகோதரன் நெற்பொரியை குருக்களிடம் இருந்து பெற்று, மணமகனின் கையில் கொடுக்க, மணமகன் மணமகளின் கையில் கொடுத்து, மணமகனின் கைகளை தன் கைகளால் தாங்கி ஓம குண்டத்தில் இடுவார்கள். “அக்கினி பகவானே சகல செல்வங்களையும் எமக்குத் தந்தருள வேண்டும்.”. என வேண்டிக் கொண்டு பொரியிடுதல் வேண்டும். நெல் பொரியாக மலர்வது போல் நம்வாழ்வு மலரவேண்டும் என்பதே தத்துவம். மணமகளின் ஆயுளை அதிகரிக்கும் மந்திரம் இதில் உண்டு.மூன்றாம் முறை சுற்றி வந்தவுடன் பூர்ணாகுதி பொருட்களை தட்டில் வைத்து குருக்கள் மண மக்களுக்குக் கொடுக்க இருவரும் சேர்ந்து குண்டத்தில் சொரிதல் வேண்டும். இதனை “லாஜ ஹோமம்” என்று கூறு வார்கள்.அதன் பின் தீபாரதனை செய்து ஓமத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ரட்சயை (கரிப்பட்டு) மணமக்களுக்கு திலகமிட்டு விபூதி சந்தனம் கொடுத்து ஆசி வழங்குவார் குருக்கள்.
அட்சதை ஆசீர்வாதம் ஏன்?
மணமக்களை கிழக்கு முகமாக நிற்க வைத்து, குருக்கள் மந்திரத்துடன் ஆசீர்வாதம் சொல்லி, மணமக்களுக்கு சிரசில் அட்சதையிட்டு ஆசீர்வதிப்பர். தொடர்ந்து மணமகளின் பெற்றோர் சபையில் ஆசிர்வதிப்பர். இது முக்கியம். முனை முறியாத பச்சையரிசி, அறுகம்புல், மஞ்சள் மா கலந்த கலவையே அறுகரிசி என்று சொல்வார்கள். பெரியோர் இரண்டு கைகளாலும் அறுகரிசி எடுத்து “ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தி 3 முறை இடவேண்டும்.
திருமணம் முடிந்த பின் பாலும், பழமும் கொடுப்பது ஏன்?
திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல. பெண்ணானவள், தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும். கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும். அந்த நேரங்களில், பெண்ணே ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்,வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றைத் தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்ச விருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர். மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,‘‘ஏ! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது. பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலைக் கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும், வாழை மரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாகப் பிரித்து நடுவரோ அது போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம் அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள்” என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.
நிறைவு, ஆரத்தி ஏன்?
மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புக்களை அவிழ்த்து, பவித்திரங்களை கழற்றி, அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்களையும் வெற்றிலையில் வைத்து, குருக்களின் தட்சணையும் சேர்த்து குருக்களிடம் கொடுக்கவேண்டும். தம்பதிகளுக்கு தீய சக்தியினால் தீமை ஏற்படாமலும் கண் திருஷ்டி நீங்கும் பொருட்டு, இரு தரப்பிலும் இருந்து சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். ஆரத்தி எடுக்கும் போது யாருக்கு திருஷ்டி கழிக்கின்றோமோ அவரை நிற்க வைத்து (கிழக்கு முகமாக அல்லது வடக்கு பார்க்க நிற்கவேண்டும்). அவரை இறைவனாக நினைத்து இறைவனுக்கு எப்படிக் கற்பூரம் காட்டுகிறோமோ அதேபோல் ஆரத்தித் தட்டைச் சுற்றவேண்டும் (வலம் சுழியாக). மணமக்களுக்கு எடுக்கும்போது மணமகன் பக்கத்தில் மேலெழும்பி மணமகளின் பக்கத்தில் கீழிறங்கவேண்டும். கீழே 3 முறை செய்யவேண்டும். கீழே 3 தரம் ஆட்டி பின் மேலெழும்பிச் சுற்ற வேண்டும்.
மணமகள் பொங்கலிடுதல் ஏன்?
ஒவ்வொரு சமூகத்திலும் திருமண முறைகள் ஒவ்வொரு விதமாக இருக்கும். திருமணம் முடிந்தவுடன் கிரக பிரவேசம் என்று செய்வார்கள். இன்னும் சிலர், வீட்டில் பொங்கலிடச் செய்வார்கள். முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுத்த இறைவனுக்கும், முன்னோர்களுக்கும் சூரியன் முதலான தேவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகும். மணமகள் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் என்பதை வெளிப்படுத்துவது. இன்று போல் என்றும் வாழ்க்கை பால்போல் பொங்கவேண்டும் என்பதற்கான அறிகுறியே பொங்க
லிடுவதின் நோக்கமாகும்.மறுவீடு ஏன்?
மணமகளின் பெற்றோரும் – உறவினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன் முறையாக மணமகளுடன் சென்று – விருந்துண்டு மகிழ்ந்து – உறவை வலுப்படுத்துவது. ஒரு பெண்ணிற்கு பிறந்தவீடு வாழ்க்கையும், புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. மகளை வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச் செய்வதே – மறுவீடு ஆகும்.
கோயிலுக்கு அழைத்துச் செல்லல் ஏன்?
மணமக்கள் இருவரும் அர்ச்சனைத் தட்டோடு ஆலயம் சென்று வணங்கி அர்ச்சனை செய்து மணமகன் இல்லம் செல்வர். அங்கு வாசலில் ஆரத்தி எடுத்து வலது காலை முதலில் வைத்து வீட்டுக்குள் செல்வர். முதலில் பூசை அறைக்குள் சென்று வணங்கிப் பின் பால் அருந்தக் கொடுப்பார்கள். நல்ல திருமண வாழ்க்கை வேண்டும் என்பது மணமக்களின் பிரார்த்தனை களில் ஒன்றாக அமைந்திருக்கும்.
(தொடரும்)
