அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில்!

ராஜகோபுர தரிசனம்!

ஈரோடு பகுதியில் மக்களால் அதிகம் தரிசிக்கப்படும் கோயில்களில் ஒன்றுதான், அருள்மிகு அருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில். இங்கு சிவபெருமான் அருத்ரா கபாலீஸ்வரர் எனும் திருநாமத்தில் அருள்புரிந்து வருகிறார். கொங்கு நாட்டின் முக்கியமான சிவாலயங்களில் ஒன்றாக விளங்குகிறது இத்தலம். இக்கோயில் கொங்கு சோழர் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1004) சோழ மன்னன் ஒருவரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கருவறைச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளின் படி, முன்னொரு காலத்தில் ‘தொண்டீஸ்வரம்’ என்றும் அழைக்கப்பட்டது.

தாண்டவன் என்ற ஒரு ஏழை நெசவாளர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் வேலைக்குச் செல்லும் முன் அருள்மிகு அருத்ரா கபாலீஸ்வரரை வழிபட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள், நெசவாளர் வீட்டில் இல்லாத சமயம், சிவபெருமான் முதியவர் வேடமிட்டு அவரது இல்லத்திற்கு வந்தார். கடும் குளிரிலிருந்து தன்னை பாதுகாக்க ஒரு சிறிய துணி தருமாறு நெசவாளர் மனைவியிடம் கேட்டார். அவரோ தன்னிடம் ஒரு துணி மட்டுமே இருப்பதாகக் கூறினார். மேலும், அவர் எங்கு தங்குவதாக இருப்பதாக கேட்டு தெரிந்து கொண்டார். முதியவர் வேடத்தில் இருந்த இறைவனும் அருத்ரா கபாலீஸ்வரர் கோயிலின் வெளியே தங்குவதாக கூறி சென்றுவிட்டார்.

நெசவாளர் வீடு திரும்பியதும் இதைப் பற்றி தன் கணவனிடம் தெரிவித்தார். அதை கேட்டவுடன் நெசவாளர் அவசரமாக தனது எஜமானரிடம் சென்று ஒரு புதுத் துணியை பெற்றுக் ெகாண்டு கோயிலுக்கு சென்று அந்த முதியவரிடம் வழங்கினார்.அடுத்த நாள் காலை, கோயில் அர்ச்சகர் கருவறை கதவை திறந்தபோது, இறைவனின் திருமேனியில் புதிய துணி அணிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இருக்கும் பரிவட்டம் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்தச் செய்தி கேள்விப்பட்டு மக்கள் அனைவரும் கோயிலுக்கு திரண்டனர். அதில் ஏழை நெசவாளியும், அவரது எஜமானரும் இருந்தனர். சிவபெருமானின் மேல் போர்த்தப்பட்டு இருந்த துணியை பார்த்த எஜமானர், தன்னிடம் இருந்து இந்த துணியை நெசவாளர் பெற்றுச் சென்றதாக கூறினார். நெசவாளர் ேகாயில் வாசலில் இருந்த முதியவரிடம் அதை கொடுத்ததாக கூறியதை யாரும் நம்பத் தயாராக இருக்கவில்லை.

அப்போது, அந்த ஊர்த் தலைவரின் மகன் வாயிலாக சிவபெருமான், ‘தனக்கு எவ்வளவு துன்பம் இருந்தாலும், அதைவிடத் துன்புறும் பிறரை சேவை செய்யத் தயார் படுத்த வேண்டும். இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தவே ஏழை நெசவாளர் மூலம் தாம் இவ்வாறு அருளாட்சி செய்தேன்’ என்று தெரிவித்தார். இத்தலத்தில் ஐந்து அடுக்குகளை கொண்ட ராஜகோபுரம் திராவிடக் கட்டிடக்கலையின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் அழகாகக் காட்சியளிக்கிறது. மகாமண்டபத்தின் மேல்சுவரில் சுண்ணாம்பு மற்றும் மணல் கலவையால் செய்யப்பட்ட பல சுதைச் சிற்பங்களும், தல புராணக் காட்சிகளும் காணப்படுகின்றன.

அம்மன் காளியின் சிற்பமும், வலது காலை உயரமாக தூக்கி நிற்கும் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் உருவமும் மிகுந்த கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் அருள்மிகு அருத்ரா கபாலீஸ்வரர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கும் சிறிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறிய லிங்கத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், அதன் மேல் 108 லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

திலகவதி

Related Stories: