திருமீயச்சூர் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறாள், லலிதாம்பிகை. திருவாரூர் மாவட்டத்தில், மயிலாடுதுறைக்கு அருகிலேயே இருக்கிறது இந்தத் தலம். இந்த அம்பிகைக்கு தனிச் சிறப்பு உண்டு. பொதுவாக சிவன் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் அம்பாளுக்கு, சிவனைச் சார்ந்தே புகழும், பெருமையும் இருக்கும். ஆனால் இந்தத் தலத்தில் ஆயிரம் நாமங்களால் அர்ச்சிக்கப்படும் மேன்மை உடையவளாக லலிதாம்பிகை விளங்குகிறாள்.
இதில் கூடுதல் பெருமை என்னவென்றால், ‘லலிதா சஹஸ்ரநாமம்’ என்ற அந்த ஸ்லோகம், குறுமுனி, அகத்தியரால் இந்தத் திருத்தலத்தில் பாடப்பட்டிருக்கிறது என்பதுதான். அதுமட்டுமல்ல, அவருக்கு இதை உபதேசித்தவர், ஹயக்ரீவர் என்ற குதிரை முக மஹாவிஷ்ணு அவதாரமே! அவரும் தானாக இந்த ஸ்லோகங்களை இயற்றவில்லை. ஏற்கெனவே ‘பிரம்மாண்ட புராண’த்தில் அந்த ஸ்லோகங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதை எடுத்து அகத்தியருக்கு அவர் வழங்கினார். அவரிடம் லலிதா சஹஸ்ரநாம உபதேசம் கேட்ட அகத்தியர், ‘‘இந்த ஸ்லோகங்களை எந்தத் தலத்தில் சொன்னால் உலகத்துக்கு நற்பலன்கள் கிட்டும்?’’ என்று கேட்டார்.
அதற்கு ஹயக்ரீவர், ‘‘பூவுலகில், திருமீயச்சூர் என்ற தலத்தில் அம்பாள் ‘மனோன்மணி’ என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கிறாள். அங்கே சென்று சொல்லலாம்’’ என்று யோசனை தெரிவித்திருக்கிறார். அதையடுத்து திருமீயச்சூருக்குத் தன் மனைவி லோப முத்திரையுடன் வந்தார் அகத்திய மாமுனி. அங்கே பேரழகு அம்மனை தரிசித்த அகத்திய தம்பதி, மகிழ்ச்சிப் பூரிப்புடன் லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல, திடீரென்று அங்கே நவரத்தினங்கள் ஒளி வீசின. மனோன்மணி அம்மனே தங்களுக்கு தரிசனம் நல்கிய பேறு அது என்று உணர்ந்து நெகிழ்ந்த அகத்தியர், ‘லலிதா நவரத்தின மாலை’ என்ற ஸ்தோத்திர நூலை அங்கேயே இயற்றி, அன்னைக்கு சமர்ப்பித்தார்.
காஞ்சி மாமுனிவர், மஹா பெரியவர், லலிதாம்பிகையை சிவனோடு ஒன்றிணைந்த ஆதி பரம்பொருளாகவே போற்றியிருக்கிறார். அதாவது, சிவ-சக்தி
ஐக்கியத்தின் வடிவம்! அந்த அன்னையை துதிக்கும் லலிதா சஹஸ்ரநாமம் வெறும் ஆயிரம் மந்திரங்கள் அல்ல. அதைப் பாராயணம் செய்வதன் மூலம் ஞானம், பக்தி, நல்லொழுக்கம் எல்லாம் தாமே உருவாகி, வளரும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். அந்த ஸ்லோகங்களை முறையாக ஓதினால் பிரபஞ்ச ரகசியங்களைக்கூட அறிய முடியும் என்றும் சொல்லி பிரமிக்கிறார்.
தினமும் ஆயிரம் நாமங்கள் சொல்லி அன்னை லலிதாம்பிகையை வழிபடுவது அனைவருக்கும் அவ்வளவு எளிதாக இருக்காது என்று ஊகித்த மகா பெரியவர், ‘லலிதா சப்த நாமாவளி’ என்ற மிகச் சுருக்கமான, ஏழு நாமங்களைக் கொண்ட ஸ்லோகத்தை, அந்த லலிதா சஹஸ்ரநாமத்திலிருந்தே உருவாக்கித் தந்திருக்கிறார்:
1. ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
2. ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ
3. ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ
4. ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்யதக்ஷிண ஸேவிதாயை நமஹ
5. ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி ஸேவிதாயை நமஹ
6. ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ
7. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ
– என்பதுதான் அந்த ஸப்த நாமாவளி.
ஒருசமயம், மஹா பெரியவர் தன் அடியவர் ஒருவரை லலிதா சஹஸ்ரநாமம் சொல்லச் சொன்னார். ஏற்கெனவே மனப்பாடமாகத் தெரிந்திருந்ததால், அவரும் வெகு எளிதாக, மடமடவென்று சொல்லி வந்தார். ஒரு கட்டத்தில் மஹா பெரியவர் அவரை நிறுத்தி, ஒரு குறிப்பிட்ட நாமத்தை மட்டும் ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் சொல்லச் சொன்னார். அவ்வாறே அதைச் சொன்ன அடியவரின் குடும்பப் பிரச்னை, அவர் தன் இல்லத்திற்குத் திரும்பிய போது முற்றிலுமாகக் காணாமல் போயிருந்தது! அத்தனை மகிமை வாய்ந்தது லலிதா சஹஸ்ரநாமம்.
‘லலிதா’ என்ற பெயரே மிகவும் நளினமாக, மென்மையாக இருக்கிறது அல்லவா? ஆனால், லலிதாவுடன் அம்பிகை சேர்ந்தால், அவள் தீயவரை முற்றிலுமாக அழிக்கும் ஆவேசம் கொண்டவளாக மாறிவிடுகிறாள்!ஆமாம், பண்டாசுரன் என்ற அசுரனை வதைத்தவள் லலிதாம்பிகைதான். வழக்கம் போல தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல கொடுமைகள் இழைத்து வந்தான் பண்டாசுரன். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கயிலைவாழ் அன்னை பராசக்தியை மனமுருக வேண்டினார்கள்.
அதைக் கேட்ட அன்னை, ஒரு வேள்வி குண்டத்திலிருந்து ஸ்ரீசக்ர ரதத்தில் எழுந்தருளினாள். அப்போதே லலிதாம்பிகை என்று பெயர் கொண்டாள். அரக்கனுடன் போர் புரிந்து அவனை வீழ்த்தி, உலகோர் மனதில் நிம்மதித் தென்றல் வீசச் செய்தாள். ஆனால், தன் அன்பர்கள், அடியார்களைத் துன்புறுத்தியவன் என்ற கோபம், அவனை வதைத்த பிறகும் லலிதாம்பிகையிடம் தணியவே இல்லை. மிகவும் உக்கிரமாக இருந்த அவளை சிவபெருமான் அழைத்து பூலோகத்தில் ஸ்ரீபுரவாசினியாக தவம் புரியுமாறு பணித்தார்.
அம்பிகையும் திருமீயச்சூர் என்ற இத்தலத்துக்கு வந்து தவம் இயற்றி, சாந்த சொரூபியானாள். தன் மூச்சுக் காற்றிலிருந்து ‘வாசின்யாதி வாக் தேவதைகளை’ வெளியிட்டாள். அவை வாசினி, காமேஸ்வரி, அருணா, விமலா, ஜயனி, மோடினி, சர்வேஸ்வரி, கௌலினி ஆகிய எட்டு வாக்தேவதைகள் ஆவர். இவர்கள் லலிதாம்பிகையைப் போற்றி, ‘ஸ்ரீமாத்ரே’ என்று தொடங்கும் லலிதா சஹஸ்ரநாமத்தை இயற்றினார்கள்.
இந்த ஆயிரம் ஸ்லோகங்களுக்கு முதன் முதலாக பாஷ்யம் (உரை) எழுதியவர், பாஸ்கர ராயர் என்ற மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பண்டிதர். (இவர் பெயரிலேயே ‘பாஸ்கர ராயபுரம்’ என்று ஒரு ஊர் மயிலாடுதுறை அருகில் இன்றும் இருக்கிறது.) பதினாறாம் நூற்றாண்டில் பிறந்தவர். இவருடைய ஆன்மிகப் பேராற்றலை விளக்கும் வகையில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.
லலிதா சஹஸ்ரநாமத்துக்கு இவர் இயற்றிய உரை மீது சில பொறாமையாளர்களால் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் குங்குமாநந்த நாதர் என்ற யோகியை முன்னிருத்தினார்கள். அவரும், பிற பண்டிதர்களும் கேட்ட எல்லா வகை கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் தக்க விடையும், விளக்கமும் அளித்து அவர்களைத் திகைக்க வைத்தார் பாஸ்கர ராயர். ஒரு கட்டத்தில்,‘‘லலிதா சஹஸ்ரநாமத்தில் 237ம் நாமமாக இடம்பெறும், ‘மஹா சதுஷ்கோடி யோகினி கண ஸேவிதாயை’ என்ற சொற்றொடரில் இடம் பெறும் 64 கோடி யோகினிகள் யார், யார்?’’ என்ற கேள்வி எழுந்தது.
பாஸ்கர ராயரோ அம்பிகையை தியானித்து, கொஞ்சமும் அசராமல் அத்தனை யோகினிகளின் பெயர்களையும் வரிசையாகச் சொல்லி, அவை ஒவ்வொன்றுக்கான மந்திரங்களையும் சொல்ல, எதிர்ப்பாளர்கள் அப்படியே கல்லாக சமைந்து போனார்கள். குங்குமாநந்த நாதர், ‘‘பாஸ்கர ராயர் சாமானியரல்லர். அம்பிகையே கிளி உருவில் வந்து அவர் தோளில் அமர்ந்து காதில் சொல்லச் சொல்ல, இவர் அப்படியே அட்சரம் பிசகாமல் தீர்க்கமாகச் சொல்கிறார்’’ என்று சொல்லி பிரமித்தார். அனைத்து பண்டிதர்களும் காணக்கூடிய வகையில் பாஸ்கர ராயர் தோளில் கிளி அமர்ந்திருப்பதைக் காட்சிப்படுத்தினார். அனைவரும் ராயரை அப்போதே தம் குருவாக ஏற்று போற்றிக் கொண்டாடினார்கள்.
திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயம், மூலவர் மேகநாத சுவாமி கோயிலாக அறியப்படுகிறது. லலிதாம்பிகை, சவுந்திர நாயகி, மனோன்மணி என்ற நாமங்களில் அம்பிகை வணங்கப்படுகிறாள். இந்தக் கோயிலில் கொலுவிருக்கும் துர்க்கை எட்டுக்கரங்களுடன் திகழ்கிறாள். ஒரு கையில் கிளி அமர்ந்திருக்கிறது! ‘சுகப்பிரம்ம துர்க்கா தேவி’ என்று திருநாமம் கொண்டிருக்கிறாள் இந்த துர்க்கை. இவள் மகிஷாசுரனை வதைத்த கோலத்தில் அவனுடைய தலை மீது நின்றிருந்தாலும், சாந்த சொரூபிணியாகவே அருள்கிறாள்.
சரி, கையில் ஏன் கிளி? இந்தக் கிளி, பக்தர்கள் சமர்ப்பிக்கும் கோரிக்கைகளை துர்க்கைக்குச் சொல்லி, அவள், அவற்றை அப்படியே லலிதாம்பிகைக்குத் தெரிவிக்கிறாளாம்! ‘சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை’ என்ற வகையில், பக்தரின் கோரிக்கை நிறைவேறும் வரை இந்தக் கிளி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கும் என்று நயம்பட தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இன்றும் கூட தினமும் மாலை நேரத்தில் ஒரு கிளி துர்க்கை சந்நதியிலிருந்து, லலிதாம்பிகை சந்நதிக்குப் பறந்து செல்வதைக் காணலாம் என்றும் பிரமிப்போடு கூறுகிறார்கள். பாஸ்கர ராயர் சம்பவம் இந்த ‘துர்க்கை கையில் கிளி’ விக்ரக அமைப்போடு ஒத்துப் போகிறதல்லவா?
லலிதாம்பிகை, ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறாள். அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடன், வலது காலை மடித்து, இடது காலைத் தொங்கவிட்டு அருட்காட்சி நல்குகிறாள். இப்படி வலது காலை மடித்து வைத்துக் கொண்டிருக்கும் அம்பிகையை, வேறெங்கும் காணவியலாது என்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. அம்பிகைக்கு தினமும் அலங்காரம் செய்வது வழக்கம். இந்த வகையில் வெகு நாட்கள் முன்புவரை உச்சி முதல் இடுப்பு வரை அணிகலன்கள் அன்னையை அணி செய்ய, பாதங்களை மட்டும் விட்டுவிடுவது பெரிய குறையாகவே இருந்தது.
குறைபட்டுக்கொள்ள என்ன காரணம்? அம்பிகையின் கற்சிலையை வடித்த சிற்பி, கணுக்கால்களில் இரு பக்கமும் சிறு துளைகளைப் போட்டிருந்தார். இந்தத் துளைகள் வழியாக கொலுசை நுழைத்து, ஒரு பெண் பூட்டிக் கொள்வது போலவே மாட்டி விடலாம். ஆனால், நகைத் தொகுதியில் கொலுசு இடம் பெறாததால் அவ்வாறு அணிவிக்க முடியாமல் போய்விட்டது போலிருக்கிறது! ஒருநாள் பக்தை ஒருவர், அம்பிகையின் பாதங்களுக்குத் தான் கொலுசு மாட்டுவது போல கனவு கண்டிருக்கிறார்.
அதை சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவித்து, தானே ஒரு ஜதை கொலுசு வாங்கி, அதை அன்னையின் பாதங்களில் அணிவிக்கச் செய்திருக்கிறார். அன்றிலிருந்து லலிதாம்பிகை, கொலுசு சலங்கைக்காரியாக அழகு தோற்றம் அருள்கிறாள். இதைத் தொடர்ந்து, திருமணத் தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிட்டவும், கல்வியில் சிறந்து விளங்கவும் கோரிக்கை வைக்கும் பக்தர்கள், அன்னைக்கு கொலுசு காணிக்கை செலுத்துகிறார்கள்; தம் நியாயமான விருப்பம் நிறைவேறப் பெற்று மகிழ்கிறார்கள்; கோயிலுக்கு வந்து லலிதாம்பிகைக்கு நன்றி சொல்கிறார்கள்.
(தொடரும்!)
ப்ரபுசங்கர்
