எங்களிடம் பெட்டி கலாச்சாரம் கிடையாது: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

சென்னை: எங்களிடம் பெட்டி கலாச்சாரம் கிடையாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான அணியில் பாஜ இடம் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றாலும் பாஜ தனி தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதற்காக மக்களிடம் கருத்து கேட்கும் வகையில் தேர்தல் அறிக்கை பெட்டிகளை தமிழகம் முழுவதும் கடந்த மாதம் அனுப்பி வைத்தது.

இந்நிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள பாஜ தேர்தல் அலுவலகத்தில், 234 சட்டசபை தொகுதிகளில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள், கருத்துகள் அடங்கிய தேர்தல் அறிக்கை பெட்டிகளை பாஜ மாநில நிர்வாகிகளிடம், தேர்தல் அறிக்கை குழு தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வழங்கினார். அப்போது, மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு மாநில அமைப்பாளர் அர்ஜூனமூர்த்தி, மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி: தமிழக அரசியலில் ‘பெட்டி’ என்றாலே அதற்கு அர்த்தமே வேறு. கூட்டணிக்கு முன்பாகப் பெட்டி கைமாறுகிறதா அல்லது கூட்டணிக்குப் பின்னால் கைமாறுகிறதா என்பதே பலருக்கும் தெரியாது. ஆனால், எங்களிடம் அந்த ‘பெட்டி’ கலாச்சாரம் கிடையாது. நாங்கள் சற்றும் எதிர்பாராத அளவுக்கு, பொதுமக்கள் பெருமளவில் ஆர்வத்துடன் தங்கள் கோரிக்கைகளை இந்தப் பெட்டிகளில் சமர்ப்பித்துள்ளனர்.

பாஜ மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீது மக்கள் எந்த அளவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. இந்த கோரிக்கைப் பெட்டிகள் விரைவில் வாக்குப்பெட்டிகளாக மாறி, தமிழக மக்கள் எங்களுக்கு மாபெரும் வாய்ப்பினை தருவார்கள் என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: