எச்.ராஜா மீதான வழக்கில் வழக்கறிஞர் நேரில் ஆஜராக வேண்டும்: நிபந்தனைகளை தளர்த்தி ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பாஜ மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த உயர் நீதிமன்றம், நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது. பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று டிவிட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இரு வழக்குகளிலும் எச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

அப்போது, மாதத்தின் ஒவ்வொரு முதல் வேலை நாளும் விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி எச்.ராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எச்.ராஜாவுக்கு பதில், அவரது வழக்கறிஞர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.

Related Stories: