சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பினை சிறப்பாக வழங்கியதற்காக நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கான ஊக்கத்தொகையினை ரூ. 3.00 ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரிய கருப்பன் தகவல் தெரிவித்துள்ளார்/
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் , அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, சாதனை புரிந்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கின்ற மக்கள் நலம் சார்ந்த திட்டங்கள் அனைத்தையும் மக்களிடத்திலே முழுவதுமாக கொண்டு சேர்க்கும் ஒரு பாலமாக கூட்டுறவுத் துறை விளங்கி வருகிறது.
அந்த வகையில், 2026-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு ஆகியவற்றுடன் 3000/- ரொக்கத்தொகை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டார்கள்.
அதன்படி, 08.01.2026 முதல் 24.01.2026 வரை நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு சிறப்பாக வழங்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பினை சிறந்த முறையில் வழங்கியதற்காக நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஈடுசெய்யும் விதமாக கடந்த காலங்களில் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.0.50 பைசா வீதம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் மேற்படி திட்டத்தை எவ்வித புகாருக்கும் இடமின்றி, செவ்வனே செயல்படுத்தியதாகவும் அவ்வகையில் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.3/- என்ற வகையில் ஊக்கத் தொகை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொண்டார்கள்.
நியாய விலைக் கடை பணியாளர்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, 2026-பொங்கல் பரிசுத் தொகுப்பினை சிறந்த முறையில் வழங்கியதற்காக, நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.3/-வீதம் வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.
மேலும் இதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ரூ.6,47,43,054/-(ரூபாய் ஆறு கோடியே நாற்பத்து எழு இலட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து ஐம்பத்து நான்கு மட்டும்)-ஐ வழங்க நிருவாக அனுமதி அளித்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் நியாயவிலைக்கடை பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார்கள் கூட்டுறவு துறையின் சார்பிலும், நியாய விலைக் கடை பணியாளர்கள் சார்பிலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நியாய விலை கடை பணியாளர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
