×

சகோதரர்களுடன் சேர்ந்து சின்ன மம்மி சீக்ரெட் பிளான்; டிடிவிக்கு எதிராக களத்தில் இறங்கும் குடும்ப வாரிசு: எடப்பாடியை வீழ்த்தவும் ‘ஸ்கெட்ச்’

அதிமுகவின் கடந்த கால அரசியல் வரலாற்றில் தேனி மாவட்டத்திற்கு தவிர்க்க முடியாத இடம் உண்டு. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவால் அவரது சகோதரி மகனான டிடிவி.தினகரன் கடந்த 1999ம் ஆண்டு பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2004ல் இதே தொகுதியில் தோற்றார். ஆனாலும் எம்ஜிஆர் காலம் முதல் தேனி மாவட்டம் அதிமுக செல்வாக்கான மாவட்டமாகவே பார்க்கப்படுகிறது. அதே நேரம் டிடிவி.தினகரனும் அடிக்கடி தேனி மாவட்டத்தை சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்.

கடந்த 2024 எம்பி தேர்தலில் அமமுக சார்பில் டிடிவி.தினகரன் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் வெற்றி பெற டிடிவி.தினகரன் இரண்டாம் இடம் பிடித்தார். அதிமுக வேட்பாளரோ டெபாசிட் இழந்தார். இதன்பிறகு பாஜவோடு கூட்டணி இல்லையென டிடிவி.தினகரன் அறிவித்தார். ஆனால், பாஜ அவரை அடிபணிய வைத்து மீண்டும் கூட்டணிக்குள் இணைத்தது. எடப்பாடிக்கு எதிராகத் தான் எனது அரசியல் என முழங்கிய டிடிவி.தினகரனை, எடப்பாடி தலைமையிலான கூட்டணியில் கொண்டு வந்தது பாஜ.

சசிகலாவால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட டிடிவி.தினகரன், தற்போது அவருக்கு எதிராகவே கட்சியை நடத்தி வருகிறார். இது சசிகலாவை கடும் எரிச்சலையடைய வைத்துள்ளது. இதோடு தன்னால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி, தன்னை கொல்ல முயன்றதாகவும் சசிகலா குற்றம் சாட்டியிருந்தார். சசிகலாவிற்கு நம்பிக்கையாக இருப்பார்கள் என நினைத்த டிடிவி.தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தனக்கு எதிராக அரசியல் செய்வதை சசிகலாவால் ஏற்க முடியவில்லை.

இதனால், இந்த தேர்தலில் ஒரே நேரத்தில் டிடிவி.தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தக்க அரசியல் பாடம் புகட்ட வேண்டுமென சசிகலா தயாராகி வருகிறார். இக்கட்டான சூழலில் தனக்கு ஆதரவாக நிற்காமல், தனக்கு துரோகம் செய்த எடப்பாடிக்கு வெண் சாமரம் வீசுவது சசிகலாவை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டுமானால், அவருக்கு ஆதரவாக செயல்படும் டிடிவி.தினகரனை தேர்தல் அரசியலில் வீழ்த்த வேண்டும் என சசிகலா எண்ணுகிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு தென் மாவட்டத்தில் மீண்டும் ஒருமுறை படுதோல்வி கிடைக்க வேண்டுமென திட்டம் தீட்டி வருகிறார். எடப்பாடி பழனிசாமி, டிடிவிக்கு தனது சமூகத்தினர் ஆதரவு போய்விடக் கூடாது என நினைக்கிறார்.  கடந்த எம்பி தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட டிடிவி.தினகரன் இரண்டாம் இடத்தை பிடித்ததால், சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் தானோ அல்லது மனைவி அனுராதாவையோ போட்டியிடச் செய்து வெற்றி பெறலாம் என டிடிவி.தினகரன் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஆயத்த களப்பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக ஆண்டிபட்டி தொகுதியில் தயார் நிலையில் அமமுகவினர் உள்ளனர். தேனி மாவட்டத்தை மையமாகக் கொண்டு டிடிவி.தினகரன் அரசியல் செயல்பாட்டை துவக்கும் நோக்கில் தேனியில் பிரமாண்டமான பங்களாவை பிடித்து குடியேறி இருக்கிறார். இதனையறிந்த சசிகலா கடந்த சில நாட்களாக அவருக்கு மிகவும் நெருங்கிய அரசியல் தொடர்புள்ள தேனி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய சமூக பிரமுகர்களை நேரில் அழைத்து பேசி வருகிறார். இது தேனி மாவட்ட அதிமுக மற்றும் அமமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் டிடிவி.தினகரனோ அல்லது அவரது மனைவியோ போட்டியிட்டால், கடந்த 1999ல் டிடிவி.தினகரனை இறக்கிவிட்டதைப் போல, வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது தரப்பிலிருந்து சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் அல்லது மற்றொரு சகோதரர் ஜெயராமண்-இளவரசி தம்பதியின் மகன் விவேக்கை, டிடிவி தினகரனுக்கு எதிராக தேனி மாவட்டத்தில் களம் இறக்குவது என சசிகலா முடிவு செய்துள்ளார் என அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் பேசிக் கொள்கின்றனர்.

வரும் தேர்தலில் திவாகரனின் கட்சியும், சசிகலாவின் புதுக்கட்சியும் இணைந்து வரும் தேர்தலை சந்திக்க உள்ளனர்.  ஆண்டிபட்டி அல்லது பெரியகுளத்தில் டிடிவி.தினகரனின் தலைமையிலான அமமுக போட்டியிட்டால் அதனை டெபாசிட் இழக்க செய்ய தீவிர களப்பணியில் சசிகலா தரப்பினர் இறங்கி இருப்பது டிடிவி, எடப்பாடி தரப்பை கடும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சசிகலாவின் இந்த முடிவு தேனி மாவட்டம் மட்டுமின்றி தென்மாவட்டம் முழுமைக்கும் அதிமுக-அமமுக கூட்டணிக்கு எதிரானதாக அமையும்.

Tags : Chinna Mommy ,TTV ,Edappadi ,Theni ,AIADMK ,Dinakaran ,Jayalalithaa ,Sasikala ,Periyakulam ,
× RELATED ‘தூங்குற மாதிரி நடிக்குறவங்கள எழுப்ப...