×

இனிமே பரபரப்பாக இருக்குமாம்… ராமதாஸ் சொல்லும் வெயிட்டிங் பீரியட்; கூட்டணி அறிவிப்புக்கு நல்ல நேரம் கிடைக்கல போல… எங்கடா தம்பி… நமக்கான வாகனம் இன்னும் வரல…?

பாமகவில் அன்புமணி பிரிவு அதிமுக, பாஜவின் தே.ஜ.கூட்டணியில் இணைந்துவிட்டது. ஆனால், ராமதாஸ் தலைமையில் இருக்கும் பாமக பிரிவு இன்னும் யாருடன் கூட்டணி சேருவது என்று முடிவு எடுக்காமல் உள்ளது. இந்நிலையில் தந்தை, மகன் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பாஜ இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் ராமதாஸ் தரப்பில் இருந்து பதில் இல்லை.

தேஜ கூட்டணியில் அன்புமணி அணி போட்டியிடும் இடங்கள் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த கூட்டணியில் சேர்வது என்பது தொடர்பாக விரைவான முடிவை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ராமதாசுக்கு ஏற்பட்டுள்ளது. அதன்படி 2வது கட்டமாக பாமக இளைஞர் சங்கம், மகளிர் சங்கம், மாணவர் சங்கம், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, மாநகர, பகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் பல்வேறு அணி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்துக்கு பின் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘எல்லோரும் கேட்கிற கேள்வி யாருடன் கூட்டணி என்பதுதான். ஆனால், இது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கூட்டணி குறித்து முடிவு செய்தவுடன், தெரிவிக்கப்படும். அதுவரை அது தொடர்பான கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. கூட்டணி மாற்றங்கள் வருவது இயற்கைதான்.

ஆனால் ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருப்போம். இன்னும் 3 நாட்களில் தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இருக்கும். இன்னும் 3 நாட்களில் கூட்டணி உறுதி செய்யப்படும்,’ என்றார். ஏற்கனவே, கூட்டணி குறித்து அறிவிப்பை பலமுறை ஒத்திவைத்த ராமதாஸ், ‘நம்முடைய வாகனம் பக்கத்துல வந்துடுச்சி’ என்று கடந்த மாதம் இறுதியில் சொன்னார்.

இதுதொடர்பாக கேட்டபோது பிப்.28ம் தேதிக்குள் கூட்டணி அறிவிக்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்தார். ஆனால் அறிவிக்கவில்லை. தற்போது மீண்டும் 3 நாட்கள் காத்திருக்க சொல்லி இருக்கார். இந்த 3 நாட்களிலாவது சொல்லுவாரா என்பது அவருக்கே வெளிச்சம். அரசியலில் மிகவும் அனுப்பப்பட்டவர், கூட்டணி அறிவிப்புக்கு இவ்வளவு தாமதம் செய்வதை, கூட்டணி அறிவிப்புக்கு நல்ல நேரம் கிடைக்கல போல என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Tags : Ramadoss ,PMK ,AIADMK ,BJP ,NDA alliance ,
× RELATED ‘தூங்குற மாதிரி நடிக்குறவங்கள எழுப்ப...