×

இன்று முடிவை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் திடீர் ஆலோசனை; ராகுல் முடிவுக்காக காத்திருக்கும் தலைவர்கள்

தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. திமுக – காங்கிரஸ் கூட்டணி 20 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் இந்த கூட்டணி வெற்றிகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இந்த நட்புக் கூட்டணியில் இதுவரை இல்லாத அளவிற்கு காங்கிரஸ் கட்சி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதை திமுக ரசிக்கவில்லை. அதேபோல, கூடுதல் சீட்கள் கேட்டதையும் திமுக ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

அதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. ஆனாலும் இந்த முறை வலுவான கட்டமைப்பை திமுக கூட்டணி அமைத்துள்ளது. மேலும் புதிதாக தேமுதிக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் கூட்டணியில் இணைந்துள்ளதால் வலுவான கூட்டணியாக உருவெடுத்துள்ளது. எனவே, அனைத்து கட்சிகளையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக இருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதி அல்லது அதைவிட ஒன்று இரண்டு கூட வழங்கலாம். அதற்கு மேல் வாய்ப்பு இல்லை என திமுக கையை விரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால், காங்கிரஸ் தரப்பு 41 சட்டமன்றத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவைத் தொகுதியையும் கேட்டு வருகிறது. மார்ச் 1ம் தேதி அன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ‘‘திமுகவின் சலுகை எங்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாதது’’ என்றார். முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நேர்மறையாக இருந்ததாக சோடங்கர் குறிப்பிட்டாலும், காங்கிரஸ் கோரிக்கைகளை திமுக ஏற்கும் என நம்பினார். இதற்கிடையே, தொகுதி பங்கீட்டில் சுமுக நிலை எட்டாததால் காங்கிரஸ் மேலிடத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் சோனியாவின் வீட்டில் நடந்துள்ளது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். திமுகவுடன் தான் கூட்டணி உறுதி செய்யப்பட வேண்டும் என்று சோனியா காந்தி அறிவுறுத்தி வரும் நிலையில், கூடுதல் தொகுதிகளை கேட்டு ராகுல்காந்தி அடம் பிடித்து வருகிறார். தனது பேச்சை ராகுல் காந்தி புறக்கணித்து வருவதால், பிரியங்கா மூலம் ராகுலிடம் சோனியா காந்தி பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் விவாதம் நடந்துள்ளது. அப்போது, காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ள தொகுதி எண்ணிக்கையில் இருந்து நாம் கொஞ்சம் கூட இறங்கக் கூடாது என்பதில் ராகுல்காந்தி உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம். பாஜவை நாடாளுமன்றத்தில் எதிர்க்க வேண்டுமானால் நம்பிக்கையான, வலிமையான கூட்டணி கட்சியின் ஆதரவு நமக்கு வேண்டும், அந்த நம்பிக்கையான கட்சியாக திமுக தான் நமக்கு இருக்கிறது. தேர்தல் அரசியலில் விட்டுக் கொடுத்து காரியம் சாதிப்பது தான் புத்திசாலித்தனம் என்று சோனியா காந்தியின் எண்ணத்தை பிரியங்கா காந்தி அங்கு பிரதிபலித்ததாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 18 பேரிடமும், 9 எம்பி.க்களிடமும் கே.சி.வேணுகோபால் தொடர்பு கொண்டு கருத்து கணிப்பு நடத்துவது போல் தனித்தனியாக அவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்துள்ளார். அப்போது பல எம்பி, எம்எல்ஏக்கள், திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார்களாம். அவர்களின் இந்த கருத்தை சோனியா காந்தியிடம், கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, நேற்று காலை சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் திமுக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதையடுத்து, சோனியா காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்பு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் திடீரென முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு நேற்று பிற்பகல் 12.30 மணி அளவில் புறப்பட்டு சென்றார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் சென்றார். முன்னதாக இருவரும் ப.சிதம்பரம் இல்லத்தில் சிறிது நேரம் ஆலோசனை நடத்தியது குறி்ப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல்வரை சந்தித்த போது, திமுக தரப்பில் கனிமொழி எம்பியும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். சுமார் ஒன்றே கால் மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இரு தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை தெளிவாக முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, முதல்வரும், ப.சிதம்பரமும் தனியாக 10 நிமிடங்கள் பேசியதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, காங்கிரசுடன் கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் 35 தொகுதிகள் கேட்ட நிலையில் திமுக 25 தொகுதிகளை கொடுக்க முன் வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத போதிலும், திமுக தரப்பில் 28 சட்டப் பேரவைத் தொகுதிகள் மற்றும் இரண்டு ராஜ்யசபா இடங்களை வழங்க முன் வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வரும் மாநிலங்களவை தேர்தலில் ஒன்றும், அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒன்றும் வழங்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது கடைசியாக பேசப்பட்ட 25 தொகுதிகளை விட அதிகமானதாக கருதப்படுகிறது.

எனினும், இறுதி முடிவை டெல்லி காங்கிரஸ் தலைமை தான் எடுக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பை தொடர்ந்து முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை சோனியா மற்றும் ராகுல்காந்தியிடம் ப.சிதம்பரம் தெரிவிப்பார் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று மாநிலங்களவைக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் உடனடியாக காங்கிரஸ் தலைமை முடிவை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

* பேச்சுவார்த்தையில் எந்தவித இழுபறியும் இல்லை: செல்வப்பெருந்தகை
முதல்வர் மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்பு வெளியில் வந்த பின்பு செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு. திமுகவுடன் நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பேசி முடித்ததும் உங்களுக்குச் சொல்வோம். திமுகவுடன் கூட்டணி உறுதி. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் தேர்தல் தேதி அறிவிப்பே வரவில்லை. திமுக எங்களுக்கு கெடு எதுவும் விதிக்கவில்லை. கூட்டணியில் எந்த முறிவும் இல்லை, கூட்டணி உறுதியாக இருக்கிறது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்தவித இழுபறியும் இல்லை’’ என்றார்.

Tags : Congress ,P. Chidambaram ,CM ,M.K. Stalin ,Rahul ,Tamil Nadu ,DMK ,
× RELATED திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு!!