- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- எல்.கே.சுதீஷ்
- ராஜ்யசபா இருக்கை
- தேமுதிக
- சென்னை
- திமுக
- ஜனாதிபதி
- பொருளாளர்
- ராஜ்ய சபா
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
சென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவிற்கு மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் முன்னிலையில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல்வர் மு.க.ஸ்டாலின்-தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் நேற்று கலந்து பேசியதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவிற்கு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது எனவும், இதனை தொடர்ந்து நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது திமுக- தேமுதிகவை சேர்ந்த குழுவினரும் கலந்து பேசி போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு செய்திட தீர்மானிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். அதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய பொதுச்செயலாளர் இன்று வேட்பாளரை அறிவிப்பார், அதன்பிறகு வேட்புமனுதாக்கல் செய்யப்படும். அனைத்தும் பேசப்பட்டது, முதலில் மாநிலங்களவை பேசி கொடுக்கப்பட்டது. எத்தனை சட்டமன்ற தொகுதி, எந்தெந்த தொகுதி என்பது குறித்து ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு எல்.கே.சுதீஷ் கூறினார்.
தேமுதிக 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அதன்பின்னர் 2001ல் அதிமுகவுடன் கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். பின்னர் தேமுதிக எம்எல்ஏக்கள் பலர் அதிமுகவில் சேர்ந்தனர். இதனால் அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோனது. பின்னர் கடந்த 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. அப்போது மாநிலங்களவை எம்பி சீட் தருவதாக எடப்பாடி பழனிசாமி உறுதி கூறியிருந்தார்.
ஆனால், கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவின. இதனால் தேமுதிகவுக்கு எம்பி சீட் வழங்கவில்லை. அப்படி சீட் தருவதாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். இதனால் தற்போது மீண்டும் மாநிலங்களவை சீட் தருவதாக தேமுதிகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி கொடுத்து கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் தேமுதிகவோ, திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. திமுக சொன்னபடி நேற்று மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக மாநிலங்களவைக்கு தேமுதிக செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
* தஞ்சையில் இன்று விஜய் பிரசாரம்
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலையில் தவெக சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று (4ம்தேதி) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் 4,900 பேருக்கு கியூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதில் விஜய் கலந்து கொண்டு பேசுகிறார். மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், முதல்முறையாக பொது வெளியில் நடக்கும் கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* ஆட்சியில பங்கு குரல் எங்க கூட்டணியில இல்ல: அதிமுக மாஜி அமைச்சர் காமெடி
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கோவில்பட்டியில் நேற்று அளித்த பேட்டி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்துதான் பேசினோம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சில விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாது. தவெகவின் நிலை என்ன என்பது தேர்தல் முடிவில் தான் தெரியும். தமிழக வரலாற்றில் அதிமுக ஆட்சியில் இருந்து தேர்தலை சந்தித்தால் அதன் எதிர்ப்பு வாக்கு திமுகவிற்கு செல்லும். அதேபோன்று திமுக ஆட்சியில் இருந்தால் அதன் எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கு வரும். திமுகவிற்கு மாற்று அதிமுக தான். தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய கட்சிகள் ஆட்சியில் உள்ளே வர வாய்ப்பு இல்லை. எங்க கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்ற குரல் எங்க கிட்ட இல்லை. களத்தில் அதிமுக – திமுக இடையேதான் போட்டி.
விஜய் மேடைக்காக காமெடியாக பேசுவதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். விஜய் – சங்கீதா விவகாரத்து விஷயம் என்பது தனிப்பட்ட விஷயம். குடும்ப விஷயத்தை அரசியல் ஆக்குவது சரியாக இருக்காது. அதைப் பற்றி கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார். கடந்த 1ம் தேதி மதுரை வந்த மோடி, தமிழகத்தில் என்டிஏ ஆட்சிதான் நடக்கும் என்று பேசி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜவினர் அமைச்சர்களாக வருவார்கள் என்று கூறினார். நிலைமை இப்படி இருக்க, எங்கள் கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்ற குரல் என்று கடம்பூர் ராஜூ காமெடி பண்ணுகிறார்.
