×

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் 5 பேர் பூஜை செய்ய அனுமதி வழங்கினால் வழக்கு முடிக்கப்படும்: கலெக்டர் நாளை முடிவு அறிவிக்க நீதிபதி உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் 5 பேர் பூஜை செய்ய அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிக்கப்படும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது ெதாடர்பாக தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்புள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்ேபாது மதுரை கலெக்டர் பிரவீன் குமார், நீதிபதி முன் ஆஜரானார். கலெக்டர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கிரி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆகியோர் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், ‘‘நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாது குறித்து மீண்டும் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். சம்பவத்தின்போது சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற அடிப்படையில் தான் 144 தடை உத்தரவு பிறப்பித்தோம். எந்த உள்நோக்கமும் இல்லை. இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. சட்டம், ஒழுங்கு பிரச்னையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. கார்த்திகை தீபத்தின் போது தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முயற்சிக்கும்போது, இந்து முன்னணி அமைப்பினருக்கும், மற்றவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது. இதனால் தான் 144 தடை உத்தரவு உரிய ஆவணங்களின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது. சட்டத்தை செயல்படுத்த வேண்டியது தான் நிர்வாகத்தின் கடமை. எனவே, இதற்காக மன்னிப்பு கோருகிறேன். அடுத்த கார்த்திகை தீபம் வருவதற்கு முன் உரிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும்’’ என்றனர்.

அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீங்கள் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஏற்கனவே ஏற்றிய இடத்தில் என்று நான் சொல்லவில்லை, இந்துக்களுக்கு சொந்தமான பகுதியில் தீபம் ஏற்றுங்கள் என்றுதான் உத்தரவு பிறப்பித்தேன். அதை நிறைவேற்ற எண்ணம் இல்லாமல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கில் 5 பேர் மட்டும் மலை உச்சிக்கு சென்று சின்னதாக ஒரு ஐந்து நிமிட பூஜை செய்தால் போதும். இந்த வழக்கை நான் முடித்து வைத்து விடுகிறேன். அதற்கு கலெக்டர் என்ன சொல்கிறார் என அவரிடம் கேட்டு சொல்லுங்கள். இதற்காக 15 நிமிடம் கால அவகாசம் தருகிறேன்’’ என்றார்.

அரசு தரப்பில், பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கூறப்பட்டது. அப்போது நீதிபதி, ‘‘நீதிமன்றம் சொல்லும் 5 பேரை கோயில் மலை உச்சிக்கு சென்று பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து கலெக்டர் உரிய முடிவெடுத்து நாளை (மார்ச் 4) மாலை 4 மணிக்கு தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கில் இனி கலெக்டர் ஆஜராகத் தேவையில்லை. காவல்துறை ஆணையாளர் மட்டும் ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.

Tags : Thiruparankundram hill ,Madurai ,Judge ,G.R. Swaminathan ,Karthigai Deepam ,G.R. Swaminathan… ,
× RELATED சென்னை சட்டக்கல்லூரி பாரம்பரிய...