பாடாலூர்: பெரம்பலூர் அருகே நடந்த விபத்தில் நடிகை உயிர் தப்பினார். டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை ஐயப்பன்தாங்கலை சேர்ந்த அருள்ராஜ் மனைவி தேவிப்பிரியா(43). பிரபல சீரியல் நடிகையான இவர், தேனியில் நடைபெறும் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினம் இரவு சென்னையில் இருந்து தேனிக்கு காரில் புறப்பட்டார்.
காரை சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த முத்து கணேசன்(40) ஓட்டினார். ஆக்டிங் டிரைவராக தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த திவாகர்(36) உடனிருந்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே நேற்று அதிகாலை கார் சென்றபோது டயர் பஞ்சரானது. இதனால் முத்து கணேசன் காரை சாலையோரம் நிறுத்தி திவாகர் உதவியுடன் டயரை மாற்றிக்கொண்டிருந்தார்.
காரிலேயே தேவிப்பிரியா உட்கார்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், முத்து கணேசன், திவாகர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முத்துகணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திவாகர் படுகாயமடைந்தார். காரில் இருந்ததால் நடிகை உயிர் தப்பினார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
