மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், வரும் 23ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என மதுரை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகிய இருவரும் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது கடந்த 2020, ஜூன் மாதம், தங்களது செல்போன் கடையைத் தாமதமாக அடைத்ததாக கூறி சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஜூன் 22ம் தேதி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிமுக ஆட்சியில் நடந்த இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரித்த நிலையில் பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் கிளை மாற்றியது.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் போலீசார் முருகன், சாமத்துரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ்பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 9 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிபிஐ தரப்பில் 105 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கில், சாட்சியங்கள் பதிவு, குறுக்கு விசாரணை, கைது செய்யப்பட்டோர் தரப்பு வாதம் என விசாரணை நடந்தது.
நேற்று மீண்டும் இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது சிறையில் உள்ள 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சிபிஐ தரப்பு வழக்கறிஞர் விஜயன் எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்தார். கைதானவர்களின் தரப்பிலும் இறுதி வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு விசாரணை மற்றும் வாதங்கள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் வரும் 23ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார். கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
