×

கடந்த வாரம் அமித்ஷா வந்தார், 2 நாளைக்கு முன் மோடி வந்தார் ஒருவர் கூட எச்.ராஜாவை பார்க்க வரவில்லை: எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்ததற்கு நெட்டிசன்கள் பாராட்டு

சென்னை: தமிழகத்திற்கு கடந்த வாரம் அமித்ஷா வந்தார். இரு நாளைக்கு முன் மோடி சென்னை வந்தார். ஆனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள பா.ஜ மூத்த தலைவர் எச்.ராஜாவை பார்க்க செல்லவில்லை. ஆனால் பலமுறை திட்டினாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்துள்ளதற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பாஜவில் மூத்த தலைவராக இருப்பவர் எச்.ராஜா. இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜவில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து பாஜவுக்கு வந்தவர். தீவிர இந்துத்துவா கொள்கை கொண்டவர். இதனால் திராவிட கட்சிகளின் தலைவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருவார். இவர் திமுகவுடன் பாஜ கூட்டணி சேர்ந்தபோது ஒருமுறை எம்எல்ஏவாகவும் இருந்தார். அதன்பின்னர் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்து வருகிறார்.

பாஜ மாநில தலைமை பதவியைப் பிடிக்க பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து மாநிலங்களவை எம்பி பதவி பெற்று, ஒன்றிய அமைச்சராகலாம் என்று திட்டமிட்டு மேலிடத்தில் பேசி வந்தார். ஆனால் மேலிடமோ அவரை கண்டுகொள்ளவில்லை. கவர்னர் பதவியாவது பெறலாம் என்றால் அதற்கும் மேலிடம் பதில் அளிக்காமல் இருந்து விட்டது. ஆனாலும் அவர் தொடர்ந்து தமிழகத்தில் தீவிர அரசியலில் இருந்தார். ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் கிடைத்தாலும், அதை கண்டுகொள்ளாமல் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். தன்னை விட இளையவர்களை மாநில பொறுப்புக்குப் போட்டாலும் அவர்களுடனும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை இரு முறை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். முதல்வர் சென்று நலம் விசாரித்த பிறகுதான் பாஜ தலைவர்கள் ஒவ்வொருவதாக நலம் விசாரித்தனர். ஆனால், தேசிய தலைவர்களாக உள்ள அமித்ஷா கடந்த வாரம் சென்னை வந்தார். இரு நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி வந்தார். அடுத்தடுத்து இருவரும் சென்னை வந்தும், எச்.ராஜாவை சந்திக்காமல், நலம் விசாரிக்காமல் சென்று விட்டனர். இது பாஜ நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2 எம்பிக்கள் இருந்த பாஜவை எதிர்க்கட்சியாகவும், பின்னர் ஆளும் கட்சியாகவும் மாற்றியவர் எல்.கே.அத்வானி. அவரே கட்சியிலும், ஆட்சியிலும் ஓரங்கட்டப்பட்டார். அவர் கறிவேப்பிலை மாதிரி தூக்கி விசப்பட்டு விட்டார். அதேநிலைதான் தற்போது எச்.ராஜாவுக்கும் ஏற்பட்டுள்ளதாக பாஜ நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பலமுறை அவதூறாக பேசியுள்ளார். தனிப்பட்ட முறையிலும் விமர்சனம் செய்துள்ளார். திராவிட இயக்க சித்தாந்தத்தின் மீதான வெறுப்பில், கடும் விமர்சனம் செய்து வந்தார். ஆனாலும் முதல்வர் மனித நேயத்தோடு நேரில் நலம் விசாரித்ததோடு, டாக்டர்களிடம் நன்றாக கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டதற்காக அவருக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் இது பெரும் விவாதப்பொருளாகியுள்ளது.

Tags : Amit Shah ,Modi ,H.Raja ,Stalin ,Chennai ,Tamil Nadu ,BJP ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED சென்னை சட்டக்கல்லூரி பாரம்பரிய...