×

பொருளாதார வளர்ச்சி, மனித வளர்ச்சியில் தமிழ்நாடு முதல் மாநிலம்; பாஜ ஆளும் மாநிலங்களில் இப்படி ஒரு வளர்ச்சியை காட்ட முடியுமா..? முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்

சென்னை: பொருளாதார வளர்ச்சியில் மட்டுமல்ல, மனித வளர்ச்சி குறியீட்டிலும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பதுதான் எங்களின் பெருமைக்குரிய தனித்தன்மையாக விளங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் பா.ஜ. ஆளும் மாநிலங்களில், அதாவது டபுள் இன்ஜின் என்று சொல்லும் டப்பா இன்ஜின் ஓடும் மாநிலங்களில் இப்படி ஒரு வளர்ச்சியை காட்டிட முடியுமா என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜவுக்கு சவால் விடுத்துள்ளார்.

சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: தமிழ்நாட்டில் எல்லா மாவட்டத்திலும் டைடல் பார்க் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இரண்டாம் நிலை மாநகரங்களில் கூட நியோ டைடல் பார்க், எல்காட் போன்றவை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சியே மகளிர் மற்றும் மாணவர்களுக்கான ஆட்சி என்று சொல்லும் அளவிற்கு திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்கள் எல்லாமே அவர்களுக்காகதான் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

நாங்கள் இப்படி ஆல் ரவுண்டராக அடித்து ஆடுவதால்தான், இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு என்று ஒன்றிய பா.ஜ. அரசே பாராட்டி சொல்லியிருக்கிறது. நம்பர் ஒன் மாநிலம் மட்டுமல்ல, இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒன் ஆண்டு ஒன்லி மாநிலமும் தமிழ்நாடுதான். பொருளாதார வளர்ச்சியில் மட்டுமல்ல, மனித வளர்ச்சி குறியீட்டிலும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பதுதான் எங்களின் பெருமைக்குரிய தனித்தன்மையாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் பா.ஜ. ஆளும் மாநிலங்களில், அதாவது டபுள் இன்ஜின் என்று சொல்லும் டப்பா இன்ஜின் ஓடும் மாநிலங்களில் இப்படி ஒரு வளர்ச்சியை காட்டிட முடியுமா? முடியவே முடியாது. அவர்கள் செய்வதெல்லாம் வன்முறை, வெறுப்பு பேச்சு, பிற்போக்குவாதம். இதற்கு அப்படியே நேர்மாறான, முற்போக்கு அரசு எங்கள் திராவிட மாடல் அரசு. முக்கியமாக நீங்கள் குறித்துக்கொள்ள வேண்டியது, நாங்கள் செய்த சாதனைகளையெல்லாம் ஒன்றிய அரசின் உதவி இல்லாமலேயே சாதித்திருக்கிறோம். இன்னும் சொல்ல போனால் அவர்களின் நெருக்கடிகளை மீறி சாதித்திருக்கிறோம்.

மதுரை வந்த பிரதமர் மோடி, மதுரவாயல் – துறைமுகம் மேம்பாலப் பணிகள் தாமதம் பற்றி குற்றம் சாட்டி அதை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அவர் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக தான் இந்த திட்டம் வரக்கூடாது என்று தடை செய்தார்கள். வழக்கிலும் வாதாடினார்கள். இந்த பணிகள் நாங்கள் வந்து, இந்த ஒன்றிய அரசிடம் சொல்லி இப்போதுதான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சி என்றால் வளர்ச்சி. வளர்ச்சி என்றால் திமுக ஆட்சி என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும், பிரதமர் மோடிக்கு சொல்ல சாதனைகள் இல்லாததால், தேர்தல் நேரத்தில் பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

இதை விட பெரிய காமெடியும் மேடையில் அவர்கள் பேசும்போது நடந்தது. என்னவென்றால், பழனிசாமி ‘அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்’ என்று சொல்கிறார். அவரை மேடையில் வைத்துக்கொண்டே, பிரதமர் மோடி ‘என்டிஏ ஆட்சி’ அமையும் என்று சொல்கிறார். யாருக்கு யார் தலைமை என்றே தெரியாமல்தான் இவர்கள் கூட்டணி இருக்கிறது.
அதனால்தான், நான் என்னுடைய பிரசாரத்தை தொடங்கியபோதே இந்த தேர்தல் தமிழ்நாடுக்கும் என்டிஏ என்று தெளிவாக சொன்னேன்.
இதை நான் சொன்னபோது சிலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒவ்வொருமுறை தமிழ்நாட்டிற்கு வரும்போதும் நான் சொன்னதை உறுதிப்படுத்தி செல்கிறார்கள். தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்ற இந்த தேர்தலில் நிச்சயம் தமிழ்நாடு வெல்லும். அந்த திராவிட மாடல் 2.0வில் எங்கள் ரெக்காடையை நாங்களே முறியடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் நிருபர்கள் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அவை வருமாறு:

  • உங்கள் தலைமையில் ஒரு மெகா கூட்டணியை கட்டி அமைத்திருக்கிறீர்கள். உங்களை விமர்சித்தவர்கள், எதிர்த்தவர்கள் உங்கள் தலைமையின் கீழ் வந்திருக்கிறார்கள். இந்த சவாலை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்?
    இது எண்ணிக்கையில் அமையப்பெற்ற கூட்டணி அல்ல. எண்ணத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணி. தமிழ்நாட்டில் இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. இப்போது அமைய இருக்கும் கூட்டணியிலும் இன்னும் பல கட்சிகள் இணைந்திருக்கிறது. இன்னும் இணைய இருக்கிறது. அதனால், இதை நான் சவாலாக கருதவில்லை. இதை கொள்கை கூட்டணியாக நாங்கள் கொண்டு செல்கிறோம்.
  • பிரதமர் மதுரையில் பேசும்போது திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது ஒரு கானல் நீராக இருக்கும் என்று சொல்லியிருந்தார்?
    மோடியைப் பொறுத்தவரை சொல்லவேண்டுமென்றால், ஏற்கனவே தமிழ்நாட்டில் பா.ஜ. ஆட்சி அமைக்க வேண்டும் என்றுதான் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். அதுதான் கானல் நீராக சென்றுகொண்டே இருக்கிறதே தவிர, அவர் சொல்வது போன்று இல்லை.
Tags : Tamil Nadu ,BJP ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,India ,
× RELATED சென்னை சட்டக்கல்லூரி பாரம்பரிய...