×

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ; தொழிலாளி உயிரிழப்பு: ரூ.4 லட்சம் நிதி வழங்க முதல்வர் உத்தரவு

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மூக்கரை விநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை, பாண்டவர்மங்கலம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை தொழிலாளர்கள் தீக்குச்சி மூட்டைகளை இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீக்குச்சி மூட்டையை இழுத்துச் சென்றபோது, உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. இதில் பிட்டராக வேலை பார்த்த கோவில்பட்டி அருகே விஜயாபுரியை சேர்ந்த சமுத்திரம் மகன் கார்த்திக்(27), கேரளாவை சேர்ந்த கணேசன்(47), விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பேரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுடலைமுத்து(42) ஆகிய 3 பேர் மீதும் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் மூவரையும் மீட்டனர். இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 2 பேருக்கு தலா ரூ.1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Tags : Kovilpatti ,Chief Minister ,Murugan ,Mookarai Vinayagar Temple ,Kovilpatti, Thoothukudi district ,Pandavarmangalam ,
× RELATED சென்னை சட்டக்கல்லூரி பாரம்பரிய...