×

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வரலாற்றில் முதல்முறையாக ரூ.840.76 கோடியில் 5,367 குடியிருப்புகள் ஒரே நாளில் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வரலாற்றில் முதல்முறையாக நேற்று ஒரே நாளில் ரூ.840.76 கோடியில் கட்டப்பட்டுள்ள 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், ரூ.420.34 கோடி மதிப்பீட்டில் 1984 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மறு கட்டுமான திட்டத்தின் கீழ், ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதியில் டாக்டர் தாமஸ் சாலை திட்டப்பகுதியில் ரூ.77.75 கோடி செலவில் கட்டப்பட்ட 470 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், சுபேதார் கார்டன் திட்டப்பகுதியில் ரூ.57.32 கோடி செலவில் கட்டப்பட்ட 300 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், அப்பாசாமி முதலி தெரு திட்டப்பகுதியில் ரூ.12.90 கோடி செலவில் கட்டப்பட்ட 68 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், பெரியபாளையத்தம்மன் கோயில் திட்டப்பகுதியில் ரூ.5.72 கோடி செலவில் கட்டப்பட்ட 32 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

மேலும், கிரீம்ஸ் சாலையில் உள்ள குடிசைகளை அகற்றி அப்பகுதி மக்களுக்கு வீடுகள் வழங்க ரூ.46.12 கோடி மதிப்பீட்டில் 283 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் நடந்த விழாவில், குயில் தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.65.02 கோடி செலவில் கட்டப்பட்ட 384 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், வன்னியபுரம் திட்டப்பகுதியில் ரூ.36.92 கோடி செலவில் கட்டப்பட்ட 216 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின்் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் நடந்த விழாவில், ரூ.307.24 கோடியில் கட்டப்பட்ட 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், அப்பாவு நகர் மற்றும் சுப்புபிள்ளை தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.88.05 கோடி செலவில் கட்டப்பட்ட 522 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் செட்டித் தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.45.63 கோடி செலவில் கட்டப்பட்ட 243 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும்; கோயம்புத்தூர் மாவட்டம், அவிநாசி சட்டமன்ற தொகுதியில் முல்லை நகர் திட்டப்பகுதியில் ரூ.38.79 கோடி செலவில் கட்டப்பட்ட 348 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், வால்பாறை சட்டமன்ற தொகுதியில் ரூ.12.27 கோடி செலவில் கட்டப்பட்ட 80 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும்; மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் கரடிக்கல் திட்டப்பகுதியில் ரூ.85.88 கோடி செலவில் கட்டப்பட்ட 840 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும்; திருச்சி மாவட்டம், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஜெயில்பேட்டை பகுதி-2 திட்டப்பகுதியில் ரூ.7.27 கோடி செலவில் கட்டப்பட்ட 64 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் ரூ.4 கோடி செலவில் கட்டப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து, சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் சிட்கோ நகர் திட்டப்பகுதியில் ரூ.374.22 கோடி மதிப்பீட்டில் 1701 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டுவதற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 209 திட்டப்பகுதிகளில் 74,126 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசை பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் நா.எழிலன், த.வேலு, துணை மேயர் மகேஷ்குமார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu Urban Habitat Development Board ,Chief Minister ,Chennai ,M.K. Stalin ,
× RELATED கீழடி, ஆதிச்சனூர் உள்ளிட்ட 8 இடங்களில்...