சந்திர கிரகணத்தையொட்டி திருச்செந்தூர் கோயிலில் நாளை நடைதிறப்பு நேரம் மாற்றம்

திருச்செந்தூர், மார்ச் 2: சந்திர கிரகணத்தையொட்டி நாளை(3ம் தேதி) திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைதிறப்பு நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாளை (3ம் தேதி) சந்திர கிரகணம் நடைபெற உள்ளதையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை, 2 மணிக்கு நடை திருக்காப்பிடப்படுகிறது. பின்னர் சந்திரகிரகணம் முடிந்த பிறகு இரவு 8 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8.30 மணிக்கு ராக்கால அபிஷேகம், தொடர்ந்து பள்ளியறை பூஜைகள் நடைபெற்று நடை திருக்காப்பிடப்படுகிறது.

சந்திர கிரகணத்தையொட்டி அன்றைய தினம் பகல் 12 மணி வரை கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

கோயிலில் நடந்து வரும் மாசி திருவிழாவில் நாளை இரவு தெப்ப திருவிழா நடக்கிறது. சந்திர கிரகணத்தையொட்டி சுவாமி குமரவிடங்கப்பெருமான் மதியம் 1.30 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து புறப்பட்டு 2 மணிக்குள் யாதவர் மண்டகப்படிக்கு சென்று சுவாமிக்கு பட்டு சாத்தி வைக்கப்படும். சந்திரகிரகணம் முடிந்து இரவு 8 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையாகி தெப்ப மண்டகப்படிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: