* பள்ளியில் குண்டு வீச்சு 53 மாணவிகள் பலி
* ஈரான் உடனடி பதில் தாக்குதல்
* பக்ரைன், குவைத், கத்தார், ஜோர்டானில்
உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை வீச்சு
* போர் மூண்டதால் வளைகுடாவில் பெரும் பதற்றம்
டெஹ்ரான்: அணு ஆயுத தயாரிப்பை தடுப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து பெரும் தாக்குதலை நேற்று நடத்தின. ஈரான் உச்ச தலைவர் வீடு, அதிபர் மாளிகை தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு உடனடியாக பதில் தாக்குதல் நடத்திய ஈரான், இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதோடு பக்ரைன், குவைத், கத்தார், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து குண்டுவீசியது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நீண்டகால பகை: ஈரானுக்கும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட காலமாக பகை நிலவி வருகிறது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கிடையே, சமீபகாலமாக ஈரான் தனது ஏவுகணை பலத்தை பெருமளவில் பெருக்கி வருவதாகவும், அணு ஆயுதம் தயாரிக்கும் அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. இதுதொடர்பாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவும் தனது போர் விமானங்களை அனுப்பி ஈரானின் அணு உலைகள் மீது அதிசக்தி வாய்ந்த குண்டுகளை வீசியது. 12 நாட்கள் நடந்த இப்போரில் ஈரானில் 680 பேர் கொல்லப்பட்டனர். பல ராணுவ தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் குறிவைத்து கொல்லப்பட்டனர்.
படைகள் குவிப்பு: இதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரானை அதிபர் டிரம்ப் கட்டாயப்படுத்தினார். இதுதொடர்பான பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடத்தப்பட்டும் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் பலமுறை ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதே சமயம் ஈரானை மிரட்ட தனது போர் கப்பல்களை ஈரானை சுற்றி நிலைநிறுத்தினார். வளைகுடா பிராந்தியத்தில் தனக்குள்ள பல்வேறு ராணுவ நிலைகளில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டன. ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் செய்யப்பட்டது.
காலையில் குண்டுமழை: இந்நிலையில், நேற்று காலையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதலை நடத்தின. இஸ்ரேலுடன் இணைந்து இத்தாக்குதலை அமெரிக்கா நடத்துவதை உறுதி செய்த டிரம்ப், அமெரிக்கா மிகப்பெரிய தாக்குதலை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அந்த சமயத்தில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் வீடுகள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் தாண்டி பல அமெரிக்க, இஸ்ரேல் போர் விமானங்கள் கெர்மன்ஷா, லோரெஸ்தான், தப்ரிஸ், இஸ்பஹான் மற்றும் கராஜ் ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த ஏவுகணைகள் தாக்கியதில் பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.
* 53 மாணவிகள் பலி
போர் விமானங்கள் வான்வெளியில் பறந்த படி குண்டுமழை பொழிந்ததால் சாலைகளில் மக்கள் பீதி அடைந்தனர். தலைநகர் டெஹ்ரானில் சைரன் சத்தங்கள் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தன. இதற்கிடையே, மினாப் நகரில் அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள் தொடக்க பள்ளி கட்டிடம் தகர்ந்தது. இதில் 53 மாணவிகள் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பள்ளிகள், மருத்துவமனைகள் மீது குண்டுவீசுவது பெரும் போர்க்குற்றமாகும்.
* உச்ச தலைவர் எங்கே?
மேலும், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி, அதிபர் பெசஸ்கியன் வீடும் தரைமட்டமாக்கப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் போர் கப்பல்கள் ஈரானை சூழ்ந்த போதே உச்ச தலைவர் கமேனி ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டார். அவர் தலைநகர் டெஹ்ரானில் இல்லை என்றும் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் ஈரான் ராணுவம் கூறியது. அதே சமயம், அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரானும் உடனடியாக பதில் தாக்குதல் தரத் தொடங்கியது.
* இஸ்ரேலுக்கு பதிலடி
முதல் அடியாக இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து தனது சக்திவாய்ந்த ஏவுகணை, டிரோன்களை ஈரான் ஏவியது. இவற்றில் பெரும்பாலானவற்றை இஸ்ரேலின் ஐயம் டோம் உள்ளிட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் வானிலேயே தடுத்து தகர்த்தன. அடுத்தடுத்து ஏவுகணைகள் ஏவப்பட்ட இருந்ததால் பல நகரங்களில் சைரன்கள் தொடர்ந்து ஒலித்தன. மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர்.
* வளைகுடா முழுவதும் குண்டுவீச்சு
அதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசியது. ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபி, துபாய், கத்தாரின் தோகா, சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் பக்ரைன், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட வளைகுடா பகுதிகளை குறிவைத்து ஈரானின் ஏவுகணைகள் பறந்தன. இதனால் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பக்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை தலைமையகத்தை ஈரான் ஏவுகணை தாக்கியதில் கட்டிடம் வெடித்து சிதறியது. அபுதாபியில் ஈரான் நடத்திய தாக்குதலில் வெடித்து சிதறிய ஏவுகணை துண்டு தாக்கி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியானார். துபாயிலும் தாக்குதல் நடந்ததால் விமான நிலையங்கள் மூடப்பட்டன. அனைத்து வளைகுடா நாடுகளும் வான்வெளியை மூடின.
* சவுதியும் இணைகிறது
ஈரானின் பதில்தாக்குதலால் வளைகுடா நாடுகள் மிகுந்த கோபமடைந்துள்ளன. வணிக நகரமான துபாயின் மையப்பகுதியில் கூட ஈரான் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. இதனால், அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து சவுதி அரேபியாவும் ஈரானுக்கு எதிராக போர் தொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுவரை 14 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறியிருக்கும் ஈரான் அடுத்ததாக தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையே மத்திய கிழக்கு வான் பகுதியில் தங்கள் போர் விமானங்கள் இருப்பதாகவும், தற்காப்பு நடவடிக்கையில் அவை ஈடுபடும் என்றும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கூறி உள்ளார். இதனால் இந்த மோதல் மத்திய கிழக்கில் மிகப்பெரிய போராக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
* ஐநா கண்டனம்
இதற்கிடையே, இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐநா உடனடியாக போரை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளது. மோதலை கைவிட்டு ஈரானும் அமெரிக்காவும் மீண்டும் அணு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டுமென உலக நாடுகளும் வலியுறுத்தி உள்ளன. ஆனால், ஈரானில் விடிய விடிய குண்டு சத்தங்கள் கேட்டதால் இப்போரின் அடுத்த கட்ட நகர்வுகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
* துபாய் தீவில் ஈரான் ஏவுகணை தாக்குதல்
துபாயில் உள்ள பனை மர வடிவில் உருவாக்கப்பட்ட உலகப்புகழ் பெற்ற செயற்கைத் தீவு, பாம் ஜூமேரா. 2001-2006 இல் கட்டப்பட்ட இது, 94 மில்லியன் கன மீட்டர் மணல் மற்றும் 7 மில்லியன் டன் பாறைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இங்கு ஆடம்பர ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் உள்ளன. இந்நிலையில், இங்குள்ள நட்சத்திர ஓட்டல் அருகே ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனை துபாய் ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்துள்ளனர். அவசரகால மீட்புக் குழுவினர் உடனடியாக சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏவுகணை தாக்குதலால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பயங்கர சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
* 1 கோடி இந்தியர்கள்
வளைகுடா நாடுகளில் சுமார் 1 கோடி இந்தியர்கள் உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்சில் சுமார் 43 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். சவுதியில் 27 லட்சம், குவைத்தில் 10 லட்சம், ஓமனில் 7.8 லட்சம், கத்தாரில் 8.7 லட்சம், பக்ரைனில் 3.5 லட்சம் பேர் உள்ளனர்.
* இந்திய மாணவர்கள் பத்திரமாக உள்ளனர்
அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகம் ஒரு வாரத்திற்கு அனைத்து வகுப்புகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் சுமார் 180 இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் பத்திரமாக இருப்பதாக ஹீப்ரூ பல்கலை நேற்று தகவல் தெரிவித்துள்ளது.
* கமேனி உயிருடன் உள்ளார்
ஈரானின் அணு ஆயுத தயாரிப்பே இப்போருக்கான காரணமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறினாலும், ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே அவர்களின் முக்கிய குறிக்கோள் என கூறப்படுகிறது. ஏனெனில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, ‘அமெரிக்காவுக்கு அழிவு’ என தனது வாழ்நாள் முழுவதும் முழங்கி வருகிறார். நேற்று காலையில் இஸ்ரேலின் தாக்குதலேயே கமேனி மற்றும் அதிபர் பெசஸ்கியன் கொல்லப்பட்டு விட்டதாக சில இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இத்தகவலை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மறுத்தார். கமேனி உயிருடன் பத்திரமாக ரகசிய இடத்தில் இருப்பதாக கூறினார். மேலும் கமேனி நேற்றிரவு டிவியில் தோன்றி உரையாற்றினார்.
* இந்தியர்களை பாதுகாக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே வேகமாக அதிகரித்து வரும் விரோத போக்கு மிகவும் கவலை அளிக்கிறது. மத்திய கிழக்கு முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பும் நமக்கு மிக உயர்ந்த முன்னுரிமையாக இருக்க வேண்டும். நமது மக்களை பாதுகாக்க இந்திய அரசு உடனடி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என கூறி உள்ளார்.
* தாக்குதலுக்கு ரகசிய திட்டமிட்டது எப்படி?
ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா ‘ஆபரேஷன் எபிக் ப்யூரி’ (கடும் கோபம்) என்ற பெயரிலும், இஸ்ரேல் ‘ஆபரேஷன் லயன்ஸ் ரோர் (சிங்கத்தின் கர்ஜனை) என்ற பெயரிலும் நடத்துகின்றன. இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த சில மாதங்களாகவே திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளன. பயிற்சி, போர் உத்திகள் ரகசியாக வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து இந்த தாக்குதலை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஈரான் சற்றும் எதிர்பார்க்காத காலை நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது வழக்கமான தாக்குதல் திட்டங்களில் இருந்து மாறுபட்டது.
* கத்தாரில் தொடர்ந்து கேட்கும் குண்டுசத்தம்
கத்தார் தலைநகர் தோகால் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி நேற்று தாக்குதல் நடத்தியது. இவற்றை கத்தார் ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வானிலேயே இடைமறித்து அழித்தன. இதனால் கத்தாரில் நேற்று தொடர்ச்சியாக குண்டுசத்தங்கள் கேட்டபடி இரு்ததால் மக்கள் பீதி அடைந்தனர். இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் உடைந்த பாகங்கள் விழுந்ததால் தோகாவின் புறநகரில் குடியிருப்புப் பகுதியில் இருந்து புகை வெளிவந்தபடி இருந்தது.
* எதிரிகள் தோற்கும் வரை தாக்குதல் நீடிக்கும்: ஈரான்
ஈரான் ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய கிழக்கில் உள்ள அனைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ இலக்குகளும் சக்திவாய்ந்த ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டுள்ளது. எதிரிகள் முழுமையாக தோற்கடிக்கப்படும் வரை இந்த நடவடிக்கை இடைவிடாமல் தொடரும். பிராந்தியம் முழுவதும் உள்ள அனைத்து அமெரிக்க சொத்துக்களும் ஈரானின் ராணுவத்தின் இலக்குகளாக கருதப்படுகின்றன’ என கூறப்பட்டுள்ளது.
* டெஹ்ரானில் இருந்து வெளியேற உத்தரவு
ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் விடுத்த அறிக்கையில், ‘‘மக்கள் அனைவரும் முடிந்த வரையிலும் தலைநகர் டெஹ்ரானை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சூழ்நிலை காரணமாக முடிந்த வரையிலும் அமைதியாக இருங்கள். முடிந்த வரையிலும் மற்ற இடங்களுக்கும் பிற நகரங்களுக்கும் பயணிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
* ஈரான், இஸ்ரேல், யுஏஇயில் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
ஈரானுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை அறிவித்ததை தொடர்ந்து, ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க இந்தியா அறிவுறுத்தியது. இதுதொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். சூழலை கருத்தில் கொண்டு அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொடர்ந்து செய்திகளை கண்காணிக்கவும். விழிப்புடன் இருங்கள். தூதரகத்தின் வழிகாட்டுதலுக்காக காத்திருங்கள். அவசர தொடர்பு விவரங்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்’ என கூறப்பட்டுள்ளது. இதே போல இஸ்ரேல், அபுதாபி, ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகங்கள் சார்பில் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூதரகத்தை தொடர்பு கொள்வதற்கான அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
* திட்டமிட்ட ஆக்கிரமிப்பு ரஷ்யா கடும் கண்டனம்
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதலை ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இறையாண்மை மற்றும் சுதந்திரமான ஐநா உறுப்பு நாட்டிற்கு எதிராக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு செயல் இது. இந்த ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த்வேண்டும். அமெரிக்காவும், இஸ்ரேலும் மத்திய கிழக்கை கட்டுப்பாடற்ற விரிவாக்கத்தின் படுகுழியில் தள்ளுகின்றன. அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசுவதை ஏற்க முடியாது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் தான் முழு பொறுப்பு. இந்த விவகாரத்தில் அமைதியான தீர்வுக்கு உதவ ரஷ்யா தயாராக இருக்கிறது’ என கூறப்பட்டுள்ளது.
* வான்வெளியை மூடிய வளைகுடா நாடுகள்
ஈரானின் பதில் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகள் தங்கள் வான்வெளியை மூடுவதாக அறிவித்தன. ஈராக், ஈரான் இஸ்ரேல், ஜோர்டான், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் வான்வெளியை மூடி விமான போக்குவரத்துக்கு தடை விதித்தள்ளன. சிரியாவில் இஸ்ரேலை ஒட்டிய தெற்கு பகுதியில் பகுதியளவுக்கு வான்வெளி மூடப்பட்டுள்ளது.
* மத்திய கிழக்கிற்கு விமான சேவை தற்காலிக நிறுத்தம்
ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டதால் நேற்று காலை டெல்லியில் இருந்து டெல் அவிவ் நோக்கி புறப்பட்ட விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. இதே போல, பல சர்வதேச விமான நிறுவனங்களும் மத்திய கிழக்கிற்கான விமான சேவையை ரத்து செய்துள்ளன.
* ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ராணுவ இலக்குகள் மீது தாக்குதல்
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘மேற்கு ஈரானில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஏவுகணை ஏவுதளங்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஈரான் ராணுவ இலக்குகள் தகர்க்கப்பட்டுள்ளன. ஈரானின் பதிலடி தாக்குதல்களைத் தடுக்க விமானப்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எங்கள் இலக்குகள் எட்டப்படும் வரை தாக்குதல் நீடிக்கும்’ என கூறப்பட்டுள்ளது.
* ஈரானில் 10,000 இந்தியர்கள் கதி?
ஜனவரி மாத அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, ஈரானில் மாணவர்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். கடந்த சில வாரங்களாகவே அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் அதிகரித்த நிலையில் ஈரானில் இருந்து அனைத்து இந்தியர்களும் கூடிய விரைவில் நாடு திரும்ப ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. அதில் பலர் நாடு திரும்பினர். கடைசியாக கடந்த 23ம் தேதி இந்தியர்கள் ஈரானை விட்டு வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. தற்போது ஈரானில் எத்தனை இந்தியர்கள் சிக்கியுள்ளனர், அவர்களின் கதி என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. இஸ்ரேலில் 41,000க்கும் மேற்பட்ட இந்திய புலம்பெயர்ந்தோர் வசிக்கின்றனர்.
* ஈரானில் 2 பள்ளிகள் மீது தாக்குதல்
தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாபில் பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள் தொடக்க பள்ளியில் 5 மாணவிகள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் தரப்பில் முதல் உறுதிபடுத்தப்பட்ட பலி இது. சில மணி நேரத்தில் 53 மாணவர்கள் பலியானதாக பலி எண்ணிக்கை அதிகரித்தது. 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்திருப்பதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த போது பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட 170 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமெரிக்கா, இஸ்ரேல் பதிலளிக்கவில்லை. இதே போல, தலைநகர் டெஹ்ரானில் பள்ளி கட்டிடம் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 2 மாணவர்கள் பலியானதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
* ஈரான் ராணுவத்தின் தலைமை தளபதி பலி?
ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைமை தளபதி அமிர் ஹதாமி பலியானதாக இஸ்ரேல் ஊடகங்கள் நேற்று தகவல் வெளியிட்டன. இதனை ஈரான் மறுத்தது. ஹதாமி தலைமையில் ஈரான் ராணுவம் செயல்படுவதாக உறுதிபடுத்தியது. அதே சமயம், ஈரான் ராணுவத்தின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவரான கமாண்டர் ஜெனரல் முகமது பாக்பூர் இறந்து விட்டதாக இஸ்ரேல் கூறி உள்ளது. இவர் கடந்த 260 நாட்களுக்கு முன்பாக ஈரான் உச்ச தலைவர் கமேனியால் கமாண்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர்.
* துபாய் விமான நிலையத்தில் அனைத்து விமானமும் ரத்து
உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான துபாய் விமான நிலையம் மறுஉத்தரவு வரும் வரை விமான சேவையை ரத்து செய்வதாக நேற்று அறிவித்துள்ளது. துபாய் இன்டர்நேஷனல் மற்றும் துபாய் வேல்டு சென்டரல் ஆகிய 2 விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்கு பயணிகள் வர வேண்டாம் என்றும் விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* பள்ளிகளை மூடிய பக்ரைன்
ஈரான் போர் மூண்டதைத் தொடர்ந்து பக்ரைனில் பள்ளிகள் காலவரையின்றி மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* பாக். கண்டனம்
பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் அளித்த பேட்டியில், ‘‘ஈரான் மீதான தேவையற்ற தாக்குதல்களை பாகிஸ்தான் கண்டிக்கிறது. இந்த மோதலை உடனடியாக நிறுத்த வேண்டும். நெருக்கடிக்கு அமைதிமையான முறையில் தீர்வு காண உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்’’ என்றார். முன்னதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சியுடன் டார் தொலைபேசியில் பேசி நிலைமையை கேட்டறிந்தார்.
* உலக நாடுகள் அலறல்
ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் பெரிய அளவில் விரிவடையும் என உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து ஈரானில் இருந்து தங்கள் குடிமக்களை அழைத்து வருவது தொடர்பாகவும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பல நாடுகளும் அவசர பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களை நடத்தின. ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகள் இத்தகைய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்தின. ஐரோப்பிய ஒன்றியமும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்தி விவாதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வலியுறுத்தி உள்ளார். ஈரான் தனது பதில் தாக்குதலை நிறுத்தி விட்டு மீண்டும் அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுசக்தி பேச்சுவார்த்தை தொடரப்பட வேண்டுமென ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
* இந்தியா, சீனா கவலை
இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘‘ஈரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் சமீபத்திய நிலவரம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அனைவரும் மற்ற நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’’ என கூறி உள்ளது. பதட்டங்களைத் தணிக்கவும், அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்கவும் பேச்சுவார்த்தை தொடரப்பட வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. இதே போல ஈரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு மதிப்பளிக்க வேண்டுமென சீனா கவலை தெரிவித்துள்ளது.
* ஹவுதி, ஹிஸ்புல்லா அமைப்புகள் மிரட்டல்
ஈரானுடன் இணைந்த போராளிகள் அமைப்புகளான ஏமனின் ஹவுதி மற்றும் ஈராக்கின் கடாயிப் ஹிஸ்புல்லா உள்ளிட்டவை அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்கப் போவதாக மிரட்டி உள்ளன. செங்கடல் பகுதியில் மீண்டும் ஹவுதி படையினர் சரக்கு கப்பல்களை குறிவைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விநியோக சங்கிலி பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
