×

கொல்கத்தாவில் இன்று வாழ்வா-சாவா மோதல்: வெ.இண்டீஸ் சவாலை எதிர்கொள்ள தயார்: இந்திய அணியின் துணை பயிற்சியாளர் பேட்டி

கொல்கத்தா: ஐசிசி 10வது டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்று இன்றுடன் முடிகிறது. இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் கடைசி போட்டியில் குரூப் 1ல் நடப்பு சாம்பியன் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என தலா 2 புள்ளிகளுடன் உள்ள நிலையில் இன்று வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் உள்ளதால் வாணவேடிக்கை காத்திருக்கிறது.

இந்த போட்டி பற்றி இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் அளித்தபேட்டி: இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் நிச்சயம் அழுத்தம் இருக்கும். உலக கோப்பை மட்டுமல்ல நிச்சயமாக அனைத்து தொடர்களிலும் அழுத்தம் இருக்கவே செய்யும். ஆனால் அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது வீரர்களுக்கு தெரியும். உங்கள் நாட்டிற்காக விளையாடுவது எவ்வளவு பெரிய பாக்கியம். இதை நாங்கள் தொடர்ந்து வீரர்களிடம் கூறி வருகிறோம். அணி மிகவும் சிறப்பாக தயாராகி உள்ளது. தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான தோல்வி ஏமாற்றத்தில் இருந்து விரைவாக திரும்பி வந்துள்ளது. வெ.இண்டீசை எதிர்கொள்ளும் திட்டங்கள் குறித்து ஆலோசித்துள்ளோம். ரொமாரியோ ஷெப்பர்ட் 9வது இடத்தில் இறங்கும் அளவிற்கு அவர்களின் பேட்டிங் ஆழம் உள்ளது. இந்தியாவின் பேட்டிங்கும் மிகவும் ஆழமாக இருக்கிறது. இந்த போட்டி நிச்சயம் சவாலாக இருக்கும். பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் அதிக ஸ்கோரிங் கொண்ட ஆட்டமாகஇருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தாவீதுக்கும் கோலியாத்துக்கும் இடையிலான போர்;
வெஸ்ட்இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி அளித்த பேட்டி: 2016ம் ஆண்டு இதே ஈடன் கார்டனில் நான் கேப்டனாக உலகக் கோப்பையை வென்றேன். தற்போது பயிற்சியாளராக இங்கு வந்துள்ளேன். வரலாறு மீண்டும் திரும்புமா என்று எனக்குத் தெரியாது. இந்தத் தொடரை வெல்ல வேண்டும் என்றால், இந்தியாவை வீழ்த்தியே ஆக வேண்டும். இது தாவீதுக்கும் கோலியாத்துக்கும் இடையிலான போர் போன்றது. 2016ம் ஆண்டில் தாவீது தான் கோலியாத்தை வீழ்த்தினான். அதைத்தான் நான் எனது வீரர்களிடம் கூறப்போகிறேன். எனது படைவீரர்கள் போருக்குத் தயாராக உள்ளனர்.” “வருண் சக்கரவர்த்தி டி20ல் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருக்கலாம். அவரை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் எதிராக எப்படி விளையாட வேண்டும் என்று எங்களிடம் தனித்தனியான திட்டங்கள் உள்ளன. அதை எங்கள் வீரர்கள் களத்தில் சரியாகச் செயல்படுத்துவார்கள்.ஹெட்மயர் பேட்டிங் அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. அகமதாபாத்தில் நடந்ததை மறந்துவிட்டு, கொல்கத்தாவில் என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். முதல் சில ஓவர்கள் மிகவும் முக்கியம். ஆடுகளத்தின் தன்மையை விரைவாகக் கணித்து அதற்கேற்ப விளையாடுவோம்” என்று கூறினார்.

Tags : Kolkata ,West Indies ,Super 8 round ,ICC T20 World Cup cricket ,India ,Eden Gardens ,
× RELATED டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ்...