×

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா!

டெல்லி: டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில், ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா தனது அபாரமான வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, ஆரம்பத்திலேயே தடுமாறி முக்கிய விக்கெட்டுகளை இழந்த போதிலும், நட்சத்திர வீரர் சிக்கந்தர் ரசாவின் அதிரடியான ஆட்டத்தால் மீண்டெழுந்தது. சிக்கந்தர் ரசா 43 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் குவித்து அணியின் ஸ்காரை உயர்த்தினார். தென் ஆப்பிரிக்காவின் இளம் பந்துவீச்சாளர் மபாகா 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ரசாவின் விக்கெட்டைக் கைப்பற்றினார். இறுதியில் ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 153 ரன்கள் சேர்த்தது.

இந்த இலக்கை நோக்கி விளையாடிய எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, நிதானமாக ஆடி வெற்றியை எட்டியது. இதன் மூலம் இந்தத் தொடரில் தோல்வியே அடையாத அணியாக தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

குழு சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையை வீழ்த்தி சாதனை படைத்த ஜிம்பாப்வே அணி, சூப்பர் 8 சுற்றில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது. இப்போது புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள தென்னாப்பிரிக்கா, வரும் புதன்கிழமை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

Tags : T20 World Cup Super 8 Round ,South Africa ,Zimbabwe ,Delhi ,Arun Jedli Stadium ,
× RELATED பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள...