அதிமுகவுக்கு 3 முதல்வர்களை தந்த மாவட்டம்: இன்று வாஷ்-அவுட்

எம்ஜிஆர் அதிமுகவை துவக்கிய நாள் முதல் நீண்ட காலத்திற்கு அசைக்க முடியாத கோட்டை என தேனி மாவட்டத்தை கூறுவார்கள். அதிமுக உறுதியாக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் மாவட்டம் என்றும் கூறுவார்கள். 1980ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அதிமுக சார்பில் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அதிமுக நிறுவனரான எம்ஜிஆர் 1984 தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் வென்றார். எம்ஜிஆரின் மறைவிற்கு பின்னர், 1989 தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக பிளவுப்பட்டிருந்தது.

அப்போது போடி தொகுதியில் ஜெயலலிதா, சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். இதன்பின்னரே அரசியலில் ஏறுமுகம் கண்டார். ஊழல் வழக்கில் ஜெயலிதா சிறை சென்றது உள்ளிட்ட காரணங்களால் தமிழக முதல்வராக அடையாளப்படுத்தப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். இவர், 2001 முதல் 2002, 2014 முதல் 2015, 2016 முதல் 2017 என மூன்று முறை முதல்வராக இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் போடி தொகுதிகளில் இருந்து தான் சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

அதிமுகவின் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் நம்பிக்கையோடு போட்டியிடும் அளவிற்கு தேனி மாவட்டம் அதிமுகவிற்கு சாதகமாக இருந்தது. இதேபோலத் தான் அதிமுக தரப்பில் டிடிவி.தினகரனும் அப்போதைய பெரியகுளம் எம்பி தொகுதியில் இருந்து போட்டியிட்டு வென்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி, போடி, கம்பம் மற்றும் பெரியகுளம் ஆகிய தொகுதிகளில், ஆண்டிபட்டி, கம்பம் மற்றும் பெரியகுளத்தில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

போடி தொகுதியில் மட்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். அவரும் நேற்று திமுகவில் இணைந்து, போடி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதனால், தேனி மாவட்டத்தில் அதிமுகவிற்கு மக்கள் பிரதிநிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் தேனி உட்பட தென்மாவட்ட தொகுதிகளில், அதிமுகவுக்கு ஏற்பட்ட கடும் சரிவே, அக்கட்சி ஆட்சியை இழந்ததற்கு முக்கிய காரணமாக பேசப்பட்டது. இதேபோல் தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்சைப் போல அதிமுகவின் மற்றொரு முகமாக பார்க்கப்பட்டவர் தங்கதமிழ்செல்வன். இவர் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தவர்.

அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக டிடிவி.தினகரன் தனி அணியாக நின்றபோது, அவரை ஆதரித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவரும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். தற்போது தேனி எம்பியாக உள்ளார். பாராளுமன்றத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ெசல்வன் வெற்றி பெற, அதிமுக வேட்பாளர் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இதற்கு முன்பாக நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேனி மாவட்டத்திலுள்ள போடி, சின்னமனூர், கூடலூர், கம்பம், பெரியகுளம் மற்றும் தேனி அல்லிநகரம் ஆகிய 6 நகராட்சிகளும் திமுக வசமானது.

இதேபோல் மாவட்டத்திலுள்ள 22 பேரூராட்சிகளில் ஆண்டிப்பட்டி, பூதிப்புரம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, அனுமந்தன்பட்டி, ஹைவேவிஸ், காமயகவுண்டன்பட்டி, கோம்பை, குச்சனூர், மார்க்கையான்கோட்டை, மேலசொக்கநாதபுரம், ஓடைப்பட்டி, பண்ணைப்புரம், க.புதுப்பட்டி, தாமரைக்குளம், தென்கரை, தேவாரம், உத்தமபாளையம், வீரபாண்டி, வடுகபட்டி, பழனிசெட்டிபட்டி ஆகிய 21 பேரூராட்சிகள் தற்போது திமுகவின் வசமே உள்ளது. அதிமுகவில் தலைவர்கள் அடையாளமாக வலம் வந்த தேனி மாவட்டத்தில் கடைசி தலைவர்களாக இருந்தவர்கள் தங்கதமிழ்செல்வனும், ஓ.பன்னீர்செல்வமும் தான். இந்த இருவரும் தற்போது திமுகவில் இருப்பதால் தேனி மாவட்டத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கூட தலைவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதோடு உள்ளாட்சி அமைப்புகளும் திமுகவினரால் நிறைந்துள்ளதால் தேனி மாவட்டம் தற்போது திமுகவின் கோட்டையாக மாறியுள்ளது.

* கூட்டணி குறித்து முடிவு எடுக்கல: ஜி.கே.மணி விரக்தி
பாமக நிறுவனர் ராமதாஸ் பிப்ரவரி 28ம் தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிப்பேன் என்று நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்துக்கு வந்து ஆலோசனை நடத்தினர். பின்னர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறுகையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை. தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் சரியான நேரத்தில் நல்ல செய்தியை அறிவிப்பார். அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்பட்டவுடன் ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

* எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்குபா…! விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ்
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று அளித்த பேட்டி: நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா கடந்த டிசம்பர் மாதம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருந்தார். இன்று அது வெளியில் வந்துள்ளது. நான் எப்போதும் சொல்வது இதுதான். மூன்று பேருக்கு இடையேயான பிரச்னையாகத்தான் இதை பார்க்கிறேன். விஜய், அவரது மனைவி, நீதிமன்றம் இந்த மூவருக்கும் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே நான் பார்க்கிறேன். அதுவும் ஒரு தனிப்பட்ட மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கை விஷயமாகவே பார்க்கிறேன்.

விஜய்யின் அரசியல் கருத்துக்கு பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கை விவகாரத்தில் அரசியல் ரீதியாக நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அரசியலுக்கு வந்துவிட்டால், தீப்பந்தத்திற்குள் மனிதன் சென்று வருவது போலத்தான் இருக்கும். அதுவரை தோண்டப்படாத தனிப்பட்ட விஷயங்கள், அரசியலுக்கு வந்தால் தோண்டப்படும். அது எல்லோருக்கும் நடந்ததே. விஜய் அரசியலுக்கு வரும்போதே இதை உணர்ந்துதான் வந்திருப்பார் என்று நம்புகிறேன்.

அதை அவர் கடந்து செல்ல வேண்டும். இதைத்தாண்டியே அவரது அரசியல் பயணம் இருக்கும். இதையெல்லாம் பார்த்துதான் மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பதை தேர்தல் தீர்மானிக்கும். அரசியலுக்கு வந்த பிறகு அழுத்தத்தில்தான் ஒருவர் தன்னை நிரூபிக்க வேண்டும். எம்.ஜி.ஆருக்கும் ஆரம்ப காலத்தில் இப்படியான சூழல்கள் இருந்தன. இதில் பாசிட்டிவ், நெகட்டிவ் என நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. விஜய் இதை கடந்து செல்ல வேண்டும். இதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டி வரும். நியாயம், தர்மம் ஆகியவற்றை தாண்டியே அரசியல் பயணம் செல்ல வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: