மாற்று அறுவை சிகிச்சைக்காக மெட்ரோ ரயிலில் இதயம், நுரையீரல் வெற்றிகரமாக கொண்டு வரப்பட்டது

சென்னை: மதுரையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளைக் கொண்டு வந்த மருத்துவ குழுவினர், சென்னை விமான நிலையத்திலிருந்து மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தனர். மெட்ரோ ரயில் அலுவலர்கள் மற்றும் நிலைய பணியாளர்களின் முழு ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்புடன், அந்தக் குழுவினர் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மெட்ரோ ரயிலில் ஏறி இடைப்பட்ட எந்த மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நிற்காமல் ஏழு நிலையங்களை 9 நிமிடத்தில் கடந்து, ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்தை பாதுகாப்பாக வந்தடைந்தனர்.

அங்கிருந்து, மருத்துவக் குழுவினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு நுரையீரல் மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற திட்டமிடப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில், திறம்பட்ட நகரப் போக்குவரத்தை மட்டுமின்றி அவசர மருத்துவ சேவைகள் மற்றும் உயிர் காக்கும் முயற்சிகளில் பங்களித்து பொதுச்சேவைக்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, சமீபத்தில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில்வே திருத்த விதிகள், 2023-ன் கீழ் இந்த சேவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: