×

வெயிலூருக்கு ஹாட் சண்டை; 3 தோல்வி மன்னர்கள் டிஸ்யூம்…டிஸ்யூம்

வேலூர் மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் வேலூர் தொகுதியில் புதிய நீதிக்கட்சி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வேலூர் மக்களவை தொகுதியில் கடந்த 2014ல் பாஜ கூட்டணியில் இருந்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு 3,24,326 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் செங்குட்டுவனிடம் தோல்வி அடைந்தார். தொடர்ந்து 2019ம் ஆண்டு பாஜ-அதிமுக கூட்டணியில் இணைந்தது. அப்போதும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் 2வது முறையாக வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டார்.

முதலில் தாமரை சின்னத்தில் நின்று தோற்றதால், இரட்டை இலை சின்னத்தில் நின்று திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் இடம் 4,77,199 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 2024 மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியது. ஆனால் பாஜ கூட்டணி கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம் 3வது முறையாக தாமரை சின்னத்தில் போட்டியிட்ட அவர் 3,52,990 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கதிர்ஆனந்திடம் தோல்வி அடைந்தார். மொத்தத்தில் போட்டியிட்ட 3 முறையும் தோல்வி அடைந்தார்.

இவர் தொடர்ந்து 3 முறை இப்படி தோல்வி என்றால் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011ல் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, திமுக வேட்பாளர் துரைமுருகனிடம் 72,091 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். தொடர்ந்து 2016ல் 2வது முறையாக எஸ்.ஆர்.கே.அப்பு போட்டியிட்டு, திமுக வேட்பாளர் துரைமுருகனிடம் 66,588 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். கடந்த 2021 தேர்தலில் காட்பாடி தொகுதியில் இருந்து திடீரென வேலூர் தொகுதிக்கு மாறினார். ஆனாலும் 75,118 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கார்த்திகேயனிடம் எஸ்.ஆர்.கே.அப்பு தோல்வி அடைந்தார்.

ஏ.சி.சண்முகமும், எஸ்ஆர்கே.அப்புவும் தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்துள்ளனர். இந்நிலையில் இந்த முறை வேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தான் பிரதமரை வேலூருக்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அவர் தேர்தல் களத்தில் நேரடியாக இறங்கி வேலை செய்யவில்லை.

தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட பிறகு தான் அவர் களத்துக்கு வருவார் என்கின்றனர் பாஜவினர். ஆனால் அதிமுகவில் ஏற்கனவே கடந்த முறை தோல்வி அடைந்த எஸ்.ஆர்.கே.அப்புவும் வேலூர் தொகுதிக்கு போட்டியிட காய் நகர்த்துகிறார். இதற்காக கட்சி தலைமையிடம் விருப்ப மனு அளித்து உள்ளார். இதனால் நான் தான் வேட்பாளர் என்று கூறிக் கொண்டு கடந்த 2 மாதங்களாக தொகுதி முழுவதும் வலம் வர ஆரம்பித்துள்ளார்.

ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் 3 முறை தோல்வி அடைந்த ஏ.சி.சண்முகமும், சட்டமன்ற தேர்தலில் 3 முறை தோல்வி அடைந்த எஸ்ஆர்கே அப்புவும் வேலூரில் போட்டியிட மீண்டும் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். இருவரில் இந்த முறை யாருக்கு சீட்டு என்ற பேச்சு தான் பட்டிமன்றம் போல பேசப்பட்டு வருகிறது. ஒருபக்கம் அதிமுகவினர் தங்களுக்கு தான் என்றும், மற்றொரு தரப்பான பாஜவினர், புதிய நீதிக்கட்சியினர் இந்த தேர்தலில் எங்களுக்கு தான் சீட்டு என மாறி மாறி பேசி வருவதால் வேலூர் அரசியல் களம் கூட்டணி கட்சியினருக்குள் சூடுபிடித்துள்ளது.

Tags : Veilur ,Justice Party ,Vellore ,AIADMK ,A.C. Shanmugam ,BJP ,Vellore Lok Sabha ,
× RELATED நிர்வாகிகளுக்கு திடீரென கட்டுப்பாடு...