×

6 தொகுதிக்கு மாவட்ட செயலாளர்; ஆனா அவருக்கு மட்டும் கவனிப்பு; மயிலத்தில் கரன்சியை இறைக்கும் சி.வி.சண்முகம்: கொதிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்

அதிமுகவில் 2,3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பு போட்டு கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் அவருடன் சீனியராக இருக்கும் சில முன்னாள் அமைச்சர்களின் மாவட்டங்களில் இந்த புதிய மாவட்ட செயலாளர்களை பிரித்துபோட விடாமல் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் பதவிகளை தக்கவைத்து வருகின்றனர்.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, வானூர், விக்கிரவாண்டி, மயிலம் ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமே ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் பதவியை தன்வசம் வைத்திருக்கிறார். கடந்த தேர்தலில் தோல்வியடைந்ததால், விழுப்புரம் தொகுதிக்கு டாடா காட்டிவிட்டு, மயிலம் தொகுதியில் களமிறங்க சி.வி.சண்முகம் திட்டமிட்டுள்ளார். அவரை தோற்கடித்த அதிமுகவினரே தயாராகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில், ‘மற்ற மாவட்டங்களில் 2,3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் அதிமுகவில் போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாவட்டம் மட்டும் விதிவிலக்காக உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் திமுகவிடம் படுதோல்வியடைந்தார். தற்போது மயிலம் தொகுதியில் போட்டியிட கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 6 மாதத்துக்கு மேலாக சி.வி சண்முகம் அவரது சகோதரர் பம்பரம்போல் இந்த தொகுதியில் மட்டும் சுழன்று தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.

ஆனால் மற்ற தொகுதிகளில் இந்த தேர்தல் பணிகளை மேற்கொள்ளாததால் அவர் மீது அதிருப்தியில் இருக்கிறோம். கட்சி தலைமையிடம் இதுகுறித்து புகார் தெரிவிக்க இருக்கிறோம்’ என்றனர். சி.வி.சண்முகத்தை கடந்த சட்டமன்ற தேர்தலில் வீழ்த்த விழுப்புரம் தொகுதியில் லட்சுமணனை திமுக தலைமை நிறுத்தி தோற்கடித்தது. இதேபாணியில் மயிலம் தொகுதியிலும் சி.வி.சண்முகத்தை வீழ்த்த அந்த தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளரை தேர்வு செய்து வைத்திருக்கிறது.

அதன்படி அந்த தொகுதியில் பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்த செஞ்சி சிவாவை களமிறக்க முடிவு செய்திருக்கிறது. அவரும் வீடு வீடாக சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். கடந்த சில மாதங்களாக தேர்தல் பணிகளை துவக்கி தொகுதி முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதேசமயம் அந்த தொகுதியில் ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்த மாசிலாமணி, சேகர் உள்ளிட்டவர்களை களமிறக்கவும் மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்எல்ஏ தரப்பு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் மயிலம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை வீழ்த்த திமுக தலைமை உறுதியாக இருக்கிறது. அதற்காக பலம் வாய்ந்த வேட்பாளரையும் தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags : Shanmugam ,Mayilam ,AIADMK ,
× RELATED நிர்வாகிகளுக்கு திடீரென கட்டுப்பாடு...