மேற்கு மண்டல திமுக பாக முகவர்கள் கூட்டம் கோவை எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில், திறந்தவெளி மைதானத்தில் நேற்று நடந்தது. மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உங்களின் முகங்களை பார்க்கும்போது உங்களது மகிழ்ச்சி, எனர்ஜி எனக்கு டிரான்ஸ்பர் ஆகிறது. உங்களின் கான்பிடன்ஸ் பார்த்து, எனது கான்பிடன்ஸ் லெவல் அதிகமாகிறது. திமுக 200 தொகுதிகளில் வெற்றிபெறுவது நிச்சயம். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதுதான் நமது லட்சியம். அடுத்த 2 மாதம் உங்களுக்கும், எனக்கும் ஓய்வு என்பது கிடையாது.
ஆன்லைன், ஆப் பீல்டு இரண்டிலும் திமுகவின் செயல்பாடுதான் நிறைந்து இருக்க வேண்டும். வளர்ச்சி என்றாலே பிடிக்காத ஒரு கட்சியாக பா.ஜ இருக்கிறது. மக்கள் அவர்களை புறக்கணித்து வருகின்றனர். இதனால் அதிமுகவை தனது கிளைக்கழகமாக மாற்றி, அதன் மூலமாக முன்னேற பா.ஜ நினைக்கிறது. பிரதமர் மோடி திடீரென ஜெயலலிதா பற்றி புகழ்பாட ஆரம்பித்து இருக்கிறார்.
குஜராத் மோடியா? இல்லை இந்த லேடியா? என சவால் விட்டவர் ஜெயலலிதா. அவர் மீது மோடிக்கு திடீர் பாசம் வந்துள்ளது. பிரதமர் ேமாடி அவர்களே, உங்களை பார்த்து ஜெயலலிதா விட்ட சவால் மறந்து போச்சா? ஊழலில் நம்பர் 2 என ஜெயலலிதா பற்றி அமித்ஷா பேசியதை மறந்துவிட்டீர்களா? இதையெல்லாம் பிரதமர் மறைத்துவிட்டு, இப்போது ஜெயலலிதா புகழ் பாடுவது எதற்காக? எல்லாம் தேர்தலை மனதில் வைத்து, இந்த நாடகம் ஆடுகிறார். இதை, தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள்.
ஒன்றிய பா.ஜ. அரசின் 12 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டுக்காக எந்த திட்டத்தையும் ஒன்றிய அரசின் சமீபத்திய பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கான நிதியையும் விடுவிக்கவில்லை. இதையெல்லாம் செயற்கையான நிதி நெருக்கடி என சொல்லாமல் வேறு எப்படி சொல்வது? இப்படிப்பட்ட அநியாயம் செய்யக்கூடிய பாஜவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மாபெரும் துரோகியாக உருவெடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இந்த துரோக கூட்டணியை மக்கள் முன் அம்பலப்படுத்தி, அவர்களுக்கு தோல்வியை பரிசாக தந்தாக வேண்டும். இது, நம் முன்பு இருக்கும் முதல் கடமை. எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் என்ன பேசினார் தெரியுமா? நாங்கள் தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி அமைத்துள்ளோம் என்கிறார். சர்க்கஸ் முடிந்ததும், கூடாரத்தை கலைப்பதுபோல், தேர்தல் முடிந்ததும் கூடாரத்தை கலைத்து விடுவார்கள். பிறகு தங்களது நாடகத்தை தொடர்வார்கள்.
என்டிஏ சர்க்கஸின் ரிங் மாஸ்டர்தான் பாஜ. அவர்கள் சொல்கிறபடி, தமிழ்நாட்டு மக்கள் முன்பு வித்தை காட்டுபவர் எடப்பாடி பழனிசாமி. அவர்கள் அமைத்துள்ளது கொள்கை இல்லாத, சந்தர்ப்பவாத கூட்டணி. இது உண்மைதான் என அவரே, மக்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். பத்து தோல்வி பழனிசாமி, மைண்ட் வாய்ஸ் என நினைத்து, சத்தமாக பேசி விட்டார். தேர்தலுக்காக மட்டும் இந்த கூட்டணி அமைக்கவில்லை.
தன்னையும், தனது சொந்தக்காரங்களையும் வழக்குகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டணி அமைத்துள்ளார். அவருக்கு எப்போதெல்லாம் பிரச்னை வருகிறதோ, அப்போதெல்லாம் டெல்லிக்கு கார்களில் மாறி மாறி போய் காலில் விழுந்துவிடுவார். ஆனால், நாங்கள் கொள்கையில் உறுதியாக நின்று போராடுகிறோம். அதனால்தான் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, ஆதரவு அளிக்கிறார்கள் நமது கூட்டணி, தேர்தலுக்கு தேர்தல் பலம் பெற்று வருகிறது. நாம் எல்லோரும் ஒன்றிணைந்து வெற்றிபெற வேண்டும்.
திராவிடம், காந்தியம், அம்பேத்கரியம், சிறுபாண்மையினம் என எல்லாம் நம்மிடம் ஒன்றாக உள்ளது. எல்லா தரப்புக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது எங்களது கூட்டணி. மக்கள் வைக்கும் கோரிக்கையை நிறைவேற்றும் அரசாக நாம் இருக்கிறோம். நமது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஆரோக்கியமான ஜனநாயகம் உள்ளது. நாம் போராடுவது கழக வெற்றிக்காக அல்ல, நமது கூட்டணி வெற்றிக்காக அல்ல. தமிழ்நாட்டின் வெற்றிக்கு.
பா.ஜவின் டப்பா இஞ்சின் முன்னாடி, தமிழ்நாட்டோட சூப்பர் பாஸ்ட் இஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது. அதனால்தான், இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டியது, “இது தமிழ்நாடு அணி வெர்சஸ் டெல்லி அணியா?” என்று சொல்லி பரப்புரை செய்கிறேன். இதில் வெற்றி பெறப்போவது நம்முடைய மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியின் தமிழ்நாடு அணிதான். களத்தில் உழைப்போம். மீண்டும் வெல்வோம். மீண்டும் மீண்டும் வெல்வோம். வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
* பிரதமர் மோடி இப்போது ஜெயலலிதா புகழ் பாடுவது எதற்காக? எல்லாம் தேர்தலை மனதில் வைத்து, இந்த நாடகம் ஆடுகிறார்.
* தேர்தல் முடிந்ததும் கூடாரத்தை கலைத்து விடுவார்கள். பிறகு தங்களது நாடகத்தை தொடர்வார்கள்.
* இந்தத் தேர்தல் தமிழ்நாடு அணியா vs டெல்லி அணியா?
* மிரட்டலுக்கு பயப்பட அடிமையும் இல்லை: கோழையும் இல்லை
முதல்வர் பேசுகையில், ‘டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பொய் வழக்கு போட்டு, அவரை சிறையில் அடைத்தீர்கள். அந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என நீதிமன்றம் தற்போது தீர்ப்பு சொல்லிவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநில அமைச்சர் மணீஸ் சியோடியா ஆகியோர் சிறையில் கழித்த நாட்களை பாஜவால் திருப்பி தர முடியுமா? இதே மிரட்டல்தான் தமிழ்நாட்டில் செய்ய பார்க்கிறார்கள்.
தங்களின் ஏவல் அமைப்புகளை வைத்து நம்மை மிரட்டப் பார்க்கிறார்கள். உங்களின் அரட்டல் மிரட்டலுக்கு பயப்பட நாங்கள் அடிமையும் இல்லை, கோழையும் இல்லை. தைரியமாக உங்களை எதிர்கொள்வோம். உங்கள் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்’ என்றார்.
