×

41 பேர் பலிக்கு காரணமான விஜய்யை தெய்வம் நின்று கொல்லும்: திண்டுக்கல் சாபம்

திண்டுக்கல்லில் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:  கரூரில் 41 உயிர்கள் பறிபோனது. பல மணிநேரம் ரசிகர்கள், மக்களை காக்க வைத்து சாகடித்துவிட்டு நான் காரணமா என விஜய் கேட்கிறார். அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும். தெய்வம் என்று ஒன்று இருந்தால் நிச்சயமாக கேட்கும். இதற்கு காரணமானவர் யார் என சிபிஐ ரிப்போர்ட் வரவுள்ளது.

விஜய் செய்த தவறால்தான் கரூர் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது என பல்வேறு விதமான கருத்து கூறப்படுகிறது. இந்த அரசாங்கம் (திமுக அரசு) பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஈரோட்டில் விஜய் பேசிய கூட்டத்தில் பட்டப்பகலில் மொட்ட வெயிலில் மக்கள் வாடி கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர் தொடர்ந்து பேசி கொண்டிருக்கிறார். விஜய், சீமான் போன்றவர்களுக்கு வெயில் புதிதல்ல.

பச்சத் தண்ணி கூட இல்லாமல் வாடி கொண்டிருக்கின்றனர் மக்கள். சேலத்தில் ஒரு வட நாட்டுக்காரர் இறந்து இருக்கிறார். அதற்கு ரூ.5 லட்சம் நிதி கொடுக்கிறார் விஜய். நான் கேட்டேன் ரூ.5 லட்சம் பிச்சை காசா? சினிமாவில் நடித்து பல கோடிகளை வைத்துள்ளீர்கள். பல கோடிகள் கூட அந்த குடும்பத்தாருக்கு கொடுக்கலாம் என கேட்டேன். நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பாதுகாப்பாக கூடாரம் அமைத்து லட்சக்கணக்கான மக்கள் அவரது பேச்சு கேட்கின்றனர்.

அதுபோல் உங்களுக்கு செய்வதற்கு வசதி இல்லையா என கேட்டேன். இதையடுத்து உடனடியாக வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் கூடாரம் அமைத்து அதில் மக்களை நிக்க வைத்து பேசி உள்ளார் விஜய். நியாயமான கோரிக்கை அவரது காதில் விழுந்து உள்ளது. மக்களை காப்பாற்றி உள்ளோம் என்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

* ‘பாஜ மூழ்கும் கப்பல், நாங்க அவங்கள மீட்கும் நீர்மூழ்கி கப்பல்’
‘‘அதிமுக நீர்மூழ்கி கப்பலாக இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும். அதிமுக பெரிய கட்சி என்பதை தெரிந்து தான் பாஜ எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. பாஜ என்ற மூழ்குகின்ற கப்பலில் எடப்பாடி மாட்டி கொண்டு உள்ளார் என கூறுகின்றனர். யார் மூழ்கிறார்கள்? நீர்மூழ்கி கப்பலாக இருந்து மூழ்கின்ற கப்பலை மேல தூக்குகின்ற கட்சியாகத்தான் அதிமுக இருக்கிறது’’ என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Tags : Dindigul ,Jayalalithaa ,Atimuga West District ,Former minister ,Dindigul Sinivasan ,Karur ,
× RELATED நிர்வாகிகளுக்கு திடீரென கட்டுப்பாடு...