வேலூர், ஏப்.14: வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி 11.48 லட்சம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பூத் சிலிப் வினியோகம் செய்யப்பட்டது. இப்பணியை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. மேலும் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் அச்சடிக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணிகள் நேற்று தொடங்கியது. வேலூர் ஈவெரா நாகம்மை பள்ளி அருகே பூத் சிலிப் வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் சுப்புலட்சுமி கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,427 வாக்குச்சாவடிகளுக்கான பூத் சிலிப்கள் பெறப்பட்டு, அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்த பூத் சிலிப்புகளுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வாக்காளர் வழிகாட்டி புத்தகமும் வழங்கப்படுகிறது.
பிஎல்ஓக்கள் நேரடியாக வாக்காளர்களின் வீட்டிற்கே சென்று இந்த பூத் சிலிப்புகளை வழங்கி, அதற்கான பதிவேட்டில் அவர்களது கையொப்பத்தை பெற வேண்டும். தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்னதாக இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும். வாக்காளர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு எவரிடமும் பூத் சிலிப்புகளை வழங்கக்கூடாது. இருப்பினும், எந்தப் பகுதியில் பூத் சிலிப்புகள் வழங்கப்படுகின்றன என்ற தகவலை வேட்பாளர்களின் முகவர்களுக்கு தெரிவிக்கலாம். தேர்தல் பணிகள் முறையாக திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் விவரங்களை அமைக்கும் பணி விரைவில் நடைபெறவுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு நாளை 2ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அன்றைய தினமே அவர்கள் அஞ்சல் வாக்குகளை பதிவு செய்வதற்கான வசதிகளும் செய்யப்படும். 16ம் தேதி அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் விவரங்கள் பொருத்தும் பணிகள் தொடங்கும். தபால் வாக்குகள் குறித்து புகார்களுக்கு விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
