10 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகளில் வகுப்புகள் துவங்கியது

ஊட்டி, பிப்.9: கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. பொங்கலுக்கு பிறகு கடந்த மாதம் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே 9,11ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ., என 218 பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் துவங்கின. பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதித்த பின்னர், முக கவசம் அணிந்துள்ளனரா என்பது உறுதி செய்த பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் பள்ளிக்கு அனுப்ப சம்மதம் தெரிவித்து பெற்றோர்களிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று வந்து சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். முதல் நாளான நேற்று 80 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். ஊட்டி அரசு கலை கல்லூரியில் நேற்று இளங்கலை, முதுகலையில் பல்வேறு பாடப்பிரிவுகளில் முதல் மற்றும் 2ம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று முதல் வகுப்புகள் துவங்கியது. முககவசம் அணிந்திருப்பது உறுதி செய்யப்பட்டு வகுப்புகளில் இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி ஒவ்வொரு வகுப்பறைகளுக்கும் சென்று கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுரைகளை வழங்கினார். அதிக மாணவர்கள் வந்தால் ஷிப்ட் முறையில் வகுப்பு நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

Related Stories: