×

மணிப்பூர் வன்முறை விசாரிக்கும் குழு தலைவர் ராஜினாமா: புதிதாக பல்பீர்சிங் சவுகான் நியமனம்

புதுடெல்லி: மணிப்பூர் வன்முறையை விசாரிக்கும் 3 பேர் கொண்ட குழுவின் தலைவர் பதவியை நீதிபதி லம்பா ராஜினாமா செய்தார். 2023ல் மணிப்பூரில் வெடித்த வன்முறை சம்பவங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதித்துறை ஆணையத்தின் தலைவராக இருந்த கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தனது அறிக்கையை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட 3 மாத கால அவகாசத்திற்கு முன்பு நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

லம்பாவுக்குப் பதிலாக ஆணைய தலைவர் பதவிக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பல்பீர் சிங் சவுகானை ஒன்றிய அரசு நேற்று உடனடியாக நியமித்தது. தலைவரைத் தவிர, ஆணையத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்ஷு சேகர் தாஸ் மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அலோகா பிரபாகர் ஆகிய இரு உறுப்பினர்களும் உள்ளனர். இருவரும் தங்கள் பதவியில் தொடர்வார்கள். நீதிபதி லம்பா ஏன் ராஜினாமா செய்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த ஆணையம் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான புதிய காலக்கெடு வரும் மே 20 ஆகும்.

இதற்கிடையே மணிப்பூர் வன்முறை வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, இதுவரை தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளின் நகல்களை பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தினருக்கு வழங்க வேண்டுமெனவும் மீதமுள்ள வன்முறை வழக்குகளில் விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறும் சிபிஐக்கு உத்தரவிட்டார்.

Tags : Manipur ,Balbir Singh Chauhan ,New Delhi ,Justice ,Lamba ,Gauhati High Court ,
× RELATED நீதித்துறை ஊழல் இடம்பெற்ற விவகாரம்...